பொதுவாக இந்தக் கால குழந்தைகளுக்கு இயற்கை தொடர்பு என்பது வெகுவாக குறைந்தே உள்ளது. கிணற்றுக்குளியல், குளம்-குட்டைகளில் நீச்சல், வயற்காட்டு வழியே நடைபயணம் என்று முந்தைய தலைமுறையினர் பெற்ற அனுபவங்களை தற்போதைய பள்ளி மாணவர்கள் பெறுவது அரிதாகவே நிகழ்கிறது. உலகமயமாக்கல், கிராமங்கள் நகரமயமாகல் என பல்வேறு காரணங்களால் இன்றைய குழந்தைகளிடத்தில் இயற்கை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதை அறிகிறோம்!

ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் மூலம் பள்ளிக் குழந்தைகள் இயற்கை குறித்த விழிப்புணர்வை பல வழிகளில் பெறுகின்றனர். குறிப்பாக மூலிகைச் செடிகள் எவையெவை என்பதை கண்டறிவதையும் அதன் பயன்கள் என்னென்ன என்ற விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு இவ்வியக்கம் வழங்குகிறது. முதற்கட்டமாக மாணவர்கள் இவ்வியக்கம் மூலம் தாங்களே நாற்றுப் பண்ணைகள் உருவாக்குவதற்கான பயிர்சிகளையும் உதவிகளையும் பெற்று அதனை வெற்றிகரமாக செயல்படுத்துகிறார்கள். அடுத்தடுத்த செயல்பாடுகளில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மாணவர்களுக்கு மூலிகைகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் போன்ற இயற்கை உயிர்ச்சங்கிலி தொடர்புகளை புரிய வைக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமது ஊர்களில் பெரும்பாலான வியாதிகளுக்கு கைமருந்து என்றும், பாட்டி வைத்தியம் என்றும் எளிமையாக நம் வீட்டைச் சுற்றி கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு மருந்து தயார் செய்துவிடுவார்கள்! ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கும் மிஞ்சிய கடவுளும் இல்லை!’ போன்ற பழமொழிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களே அருமருந்தாக அமைவதை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், மூலிகைகள் குறித்த அறிவு இல்லையென்றால் வரும் தலைமுறையினர் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட இரசாயன மருந்துகளை நாட வேண்டியிருக்கும். தற்போதே அந்த நிலைமையைத்தான் பெரும்பாலும் பார்க்கமுடிகிறது.

இந்நிலையை மாற்றும் நோக்கில் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தினர் வீட்டைச் சுற்றி வளரும் மூலிகைகள் முதல் காட்டுப் பகுதிகளில் வாழும் மூலிகைச் செடிகள் வரை பட்டியலிட்டு வரைபடங்களை தயாரித்து மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கின்றனர். எந்தெந்த மூலிகைகளை எந்தெந்த விதங்களில் பயன்படுத்தலாம் என்ற புரிதலையும் அவர்கள் மாணவர்களுக்கு புகட்டுகிறார்கள்! மேலும் மாணவர்கள் மூலிகைச் செடிகளை தாங்கள் உருவாக்கும் நர்சரிகளில் வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கிறார்கள்.
ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் பற்றி...

ஈஷா பசுமைக் கரங்களின் ஒரு அங்கமான பசுமைப் பள்ளி இயக்கம் துவங்கப்பட்டு தற்போது 6 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவுபெவுள்ளது! பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவன் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பெற்றுவிட்டால், எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கச் செய்ய வேண்டியவற்றை செய்வதற்கு அம்மாணவன் நிச்சயம் முன்வருவான். இந்நோக்கத்தில், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளின் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச்செய்துள்ளது.

பசுமைப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்குகின்றனர். புத்தகப் பாடமாக கற்பிக்கப்படாமல், விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுகின்றன. இதனால் அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது.

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 94425 90062