மிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை!

மிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை!, milagu payirgalal milirum vivasayiyin kathai

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 22

மிளகு தென்னாட்டு சமையலில் நீங்காத இடம்பிடித்திருப்பது! பல மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகினை சமவெளிப் பகுதியான புதுக்கோட்டையிலும் பயிர்செய்து நல்ல மகசூல் ஈட்டும் ஒரு விவசாயியின் இந்தப் பதிவு, விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக்குமே மிளகுக் கொடியை நடும் ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை!

“மிளகு சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் தாங்க, ஆனா மிளகு சாகுபடி கேரளா, ஊட்டி போன்ற மலைப்பகுதியில தான் செய்ய முடியும், நம்மள மாதிரி சமவெளிப் பகுதி விவசாயிங்க மிளகு சாகுபடியெல்லாம் செய்ய முடியுமாங்க”

வடிகால் வசதியுள்ள, தண்ணீர் தேங்காத, பாசன வசதி உள்ள நிலம் அவசியம். இயல்பாக மலைகளில் வளரக்கூடிய பயிர் என்பதால் நிழல்பாங்கான மற்றும் சிறிது வெய்யில்படும் சூழலும் அவசியம்.
இப்படி எந்த விவசாயியாவது கேட்டால் சற்றும் தயங்காமல் “முடியும்” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று மிளகை பறித்து கையிலும் கொடுக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் அனவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜாகண்ணு அவர்கள்.

உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வுக்குப்பின் தீவிர விவசாயியாக மாறியுள்ள திரு. ராஜாகண்ணு அவரது அனுபவங்களை ஈஷா விவசாயக்குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.

மிளகு சாகுபடி

எனக்கு 10 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு, ஊடுபயிரா மிளகை சாகுபடி செய்கிறேன். எனது நண்பர் வடகாடு பால்சாமிதான் எனக்கு மிளகை அறிமுகம் செய்தவர். சமவெளிப்பகுதியிலும் மிளகை வளர்க்கும் தொழில்நுட்பத்தைக் கூறி மிளகுக்கன்றுகளையும் எனக்குக் கொடுத்தார். கடந்த 17 வருஷமா மிளகு சாகுபடி செஞ்சுகிட்டு வரேன், ஆரம்பத்துல ஒரு ஏக்கர் தான் செய்தேன் தற்போது மூன்று ஏக்கரில் பயிர் செய்து நல்ல மகசூலும் எடுக்கிறேன்.

மிளகுப் பயிர் கொடி வகையைச் சேர்ந்தது, புதுக்கோட்டை தோட்ட மண்ணில் நன்றாக வளர்கிறது. வடிகால் வசதியுள்ள, தண்ணீர் தேங்காத, பாசன வசதி உள்ள நிலம் அவசியம். இயல்பாக மலைகளில் வளரக்கூடிய பயிர் என்பதால் நிழல்பாங்கான மற்றும் சிறிது வெய்யில்படும் சூழலும் அவசியம். மிளகுக் கொடியின் ஒவ்வொரு கணுவிலும் சல்லி வேர்கள் வளர்ந்து மரத்தைப் பற்றி வளரும்.

அட இந்த வெள்ளக்கார துரைங்க அல்லாரும் நம்ம ஊருக்கு வந்ததுக்கு இந்த மிளகும் ஒரு முக்கிய காரணமுங்கண்ணா! நம்ம கிட்ட இருந்த மிளக எடுத்துகிட்டு நம்ம தலையில மிளகா அரைச்சுட்டு போயிட்டாங்ணா! ஆனா… நாம இப்பவாச்சும் சுதாரிச்சுக்கணுமுங்க! சரி வாங்க நம்ம அண்ணா இங்க மிளகு சாகுபடி பத்தி என்ன சொல்றாப்டினு முழுசா கேட்டுப்போட்டு வருவோம்!

மிளகை தென்னையிலும், தென்னைக்கு இடையே நடப்பட்டுள்ள மற்ற மரங்களிலும் படரவிட்டுள்ளேன். மரத்திற்கு மரம் எட்டு அடி இடைவெளி விட்டு போத்துக் கன்றுகளான வாதநாராயணன், கிளுவை, கிளைரிசிடியா போன்ற மரங்களை நட்டிருக்கிறேன். இந்த மரங்களில் மிளகு நன்றாகப் படர்கிறது.

முள்முருங்கை திடீரென காய்ந்துவிடும், அகத்தி மரங்கள் காற்றுக்கு சாய்ந்துவிடக் கூடியவை, அதனால் இந்த இரண்டு மரங்களையும் தவிர்ப்பது அவசியமாகும். ஆறடி உயரம் உள்ள பலமான குச்சிகளை, ஒன்றரை அடி ஆழம் தோண்டி நடும்போது குச்சிகளில் வேர்கள் நன்றாகப் பிடிக்கிறது. இவை துளிர்த்து வளர்ந்த பின் 8 அடி உயரம் வைத்து வெட்டி விடவேண்டும்.

மிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை!, milagu payirgalal milirum vivasayiyin kathai

ரகங்கள்

மிளகு சாகுபடி செய்யத் தொடங்கியதிலிருந்து படிப்படியா கவனிச்சு சரியான சாகுபடி முறையை தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட அனுபவத்தில் நான் தெரிஞ்சுக்கிட்டது சமவெளிப்பகுதிக்கு நல்லா வளரக்கூடிய ரகங்கள் கரிமுண்டாவும், பன்னியூர்-1ம் தான். அதிலும் கரிமுண்டாதான் மிகச் சிறந்தது.

கெரகத்துக்கு இப்போ அல்லாத்துலயுமே ஒட்டு ரகம் வந்துருச்சுங்க… ஆனா நாட்டு ரகங்கள்ல இருக்குற தன்மை அதுகள்ல இருக்காதுங்க! நம்ம அண்ணா வெகரமான ஆளுங்க, அதா நாட்டு ரகத்த நட்டிருக்காருங்கோ!”

கரிமுண்டா மிளகு

கரிமுண்டா மிளகு நாட்டு ரகம், வருடம் முழுவதும் காய்க்கும், நாற்று நட்ட முதல் வருடம் முடிந்த உடனே காய்க்கத் தொடங்கிவிடும், மூன்றாவது வருடத்தில் இருந்து கணிசமான அளவில் மகசூல் பெற இயலும். பன்னியூர் ரகம் ஒரு வருடம் காய்க்கும் மறுவருடம் காய்க்காது. கரிமுண்டா ரகத்தில் இந்த பரிச்சினை இல்லை.

பன்னியூர் ரகத்தின் சரம் கரிமுண்டாவை விட 25 சதவீதம் நீளமாக இருக்கும், கரிமுண்டாவின் பூச்சரத்தின் நீளம் சிறிதாக இருந்தாலும் சரத்தின் எண்ணிக்கை அதிகம், அதனால் இரண்டு ரகங்களும் சமமான மகசூலையே தரும்.

பராமரிப்பு

மிளகு நீண்ட காலப்பயிர் என்பதால் அதற்கு இரசாயன உரங்கள் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. இரசாயன உரம் கொடுத்தால் கொடி திடீரென பட்டுப்போகும். வளர்ந்த ஒரு செடிக்கு ஒரு கூடைத் தொழு உரம் மட்டும் பயன்படுத்துகிறேன். செடியிலிருந்து அரை அடி தள்ளி வட்டப்பாத்தி எடுத்து தொழு உரத்தை போடவேண்டும். இலை வெளிறி இருந்தால் மல்டிபிளஸ் நுண்ணுயிர் கரைசலைத் தருகிறேன். ஜீவாமிர்தம் மற்றும் அமிர்தக் கரைசலும் நல்ல பலனைத் தரும்.

கொடிகள் பத்து அடிக்கு மேலே சென்றுவிட்டால் அறுவடை செய்வது சிரமானது, எனவே நீளமாக வளரும் கொடியை 8 அடி உயரத்தில் வெட்டிவிடவேண்டும். மேலும் முற்றிய பூக்காத கொடிகளை நீக்கிவிட்டு அடுத்து வரும் இளம் செடிகளைப் படர விடவேண்டும்.

மூன்று அடி உயரம் வரை வளர்ந்த கிளைகளை மடித்து மண்ணில் ஊன்றி விடவேண்டும், அதில் இருந்து புதிதாக வளர்ந்து வரும் கிளைகளை மெல்லிய நார் கொண்டு கட்டி மரத்தில் ஏற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதினால் அடிப்பக்கத்திலேயே அடர்த்தியாகக் கிளைகள் வளர்ந்து அதிக காய்களைத் தரும்.

பூச்சி நோய்க் கட்டுப்பாடு

இரசாயன உரங்கள் பயன்படுத்தினால் அதிகமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். இயற்கை முறையில் நோய் தாக்குதல் அதிகம் ஏற்படுவதிலை. இயல்பாகவே மிளகுக்கொடியின் இலைகள் கார்ப்பு சுவையுடன் இருப்பதால் பூச்சிகள் தாக்குவதில்லை. இளம் இலைகளில் மட்டும் புழு தாக்குதல் இருக்கும். இதை மூலிகை பூச்சி விரட்டியாலேயே கட்டுப்படுத்திவிடலாம். வேரைத் தாக்கக்கூடிய பூஞ்சணங்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் விரிடி மற்றும் அசோஸ் ஸ்பைரில்லம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறேன்.

10 மிளகு இருந்துச்சுன்னா பகைவர் வீட்டுலயும் சாப்பிட்டுபோட்டு வரலாம்ணு என்ற அப்பாரு அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! மிளகு நம்ம விசத்தையே முறிக்குமுங்க, அதுக்கு எதுக்குங்க இரசாயன உரமெல்லாம்! இயற்கையில அல்லாத்துக்குமே இடமுண்டுங்க! ஆனா மனுசங்க மட்டுந்தான் வாழோணும்னு நினைச்சு பூச்சிகள அல்லாத்தையும் அழிக்கணும்னு நினைச்சா அது இயற்கைக்கு எதிரா போயிருமுங்க!

பூக்கும் காலம்

பொதுவாக எல்லா மாதங்களும் மிளகு பூத்து காய்க்கும் என்றாலும் மலைப் பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்கள் பூக்கக்கூடிய மிளகு; சமவெளிப் பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூத்து ஜூன், ஜூலையில் அறுவடைக்குத் தயாராகிறது.

மகசூல்

கரிமுண்டா ரக மிளகை ஒரு ஏக்கரில் பயிர் செய்தால் 3வது வருடத்தில் 60-80 கிலோ மிளகு கிடைக்கும், இது படிப்படியாக அதிகரித்து 7வது வருடத்தில் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
கரிமுண்டா ரக மிளகை ஒரு ஏக்கரில் பயிர் செய்தால் 3வது வருடத்தில் 60-80 கிலோ மிளகு கிடைக்கும், இது படிப்படியாக அதிகரித்து 7வது வருடத்தில் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனா பன்னியூர் ரகத்தில் தொடர்ந்து எல்லா வருடமும் காய்ப்பு கிடைக்காது, அதனால பன்னியூர் ரகத்தை படிப்படியா குறைச்சுட்டு கரிமுண்டா ரகத்தைதான் அதிகப்படுத்திட்டு இருக்கேன்.

காய் பறிக்கும் முறை

மஞ்சள் நிறமாகப் பழுத்திருக்கும் மிளகுப்பழம் அறுவடை செய்ய ஏற்றது. ஆட்கள் இருந்தால் உடனடியாக பறிக்கலாம் ஆட்கள் இல்லையெனில் உடனடியாக பறிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆட்கள் கிடைப்பதை பொறுத்து 15 நாள்கள் ஆன பின்பு பறித்தாலும் எந்த பாதிப்பும் இல்லை, தாமதமாவதால் மிளகின் தரமும் குறையாது. ஏணி, ஒற்றைக் கொம்பு ஏணி அல்லது ஸ்டூல் பயன்படுத்திப் பறித்துக்கொள்ளலாம்.

மிளகை தொரட்டி போட்டு பறிக்கக் கூடாது, தொரட்டி பயன்படுத்தும்போது தளிர்களும் சேர்ந்து உதிர்ந்து விடுவதால் கொடியின் வளர்ச்சி பாதிக்கப்படும், இதனால் அடுத்த வருடம் மகசூல் கண்டிப்பாக குறையும். உயரத்தில் இருப்பவற்றைப் பறிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, மிளகு காய்ந்தபின் தானாகவே கொத்தாக உதிர்ந்து விடும் அதைச் சேகரித்துக் கொள்ளலாம்.

போஸ்ட் கம்பம் முறையில் வளர்ப்பு

என் பண்ணையை பார்த்துவிட்டு பல விவசாயிகள் தற்போது ஆர்வமாக மிளகு பயிர் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அதில் செந்தமிழ்ச் செல்வன் என்ற விவசாயி தற்போது ஒன்றரை ஏக்கரில் நன்றாக மிளகு பயிர் செய்து வருகிறார்.

அவர் மிளகு கொடிகள் படர மரங்களுக்கு இடையில் சிமெண்ட் போஸ்ட்களை நட்டு அதைச் சுற்றி கம்பி வலையை கட்டி விட்டு அதில் மிளகுக் கொடிகளை ஏற்றியுள்ளார். வேர்கள் நன்றாகப் பிடிப்பதற்காக போஸ்டுக்கும், கம்பி வலைக்கும் இடையில் தேங்காய் மஞ்சு மற்றும் சருகுகளைப் போட்டிருக்கிறார். இது தொடர்ந்து ஈரப்பதமாக இருப்பதால் வேர் நல்லா பிடிச்சு வளருது. மலேசியா போன்ற நாடுகளில் இந்த போஸ்ட் முறையில் சமவெளிகளில் வெற்றிகரமாக மிளகு சாகுபடி செய்றாங்க. இந்த முறையில் நானும் சில போஸ்ட் கம்பங்களை நட்டு மிளகுக் கொடியை படர விட்டுள்ளேன்.

கொடி படர தூண் வேணும், கூடிவாழ உறவும் வேணும்னு என்ற ஊருல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்க! அதுமாறி மிளகு கொடிகள பக்குவமா பாத்துக்குறதுக்கு இயற்கை வழிமுறைகள நல்ல வெகரமா இராஜாகண்ணு ஐயா சொல்லிட்டாப்டிங்க!

மிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை!, milagu payirgalal milirum vivasayiyin kathai

மிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை!, milagu payirgalal milirum vivasayiyin kathai

மிளகுக் கன்று உற்பத்தி

மிளகுக் கொடியின் அடியில் நிறைய கிளைகள் கிளைத்து தரையில் படர்ந்து வளரும். தரையில் படரும் கிளைகளில் பூக்கள் வருவதில்லை, மேலும் இக்கிளைகள் சத்துக்களை எடுத்துக் கொள்வதால் மேலே செல்லும் கொடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே கீழே படரும் கொடிகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும்.

வெட்டிய கிளைகளை பதியன் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். கொடியை நான்கு கணுக்கள் கொண்ட துண்டுகளாக வெட்டிக்கொண்டு தோட்ட மண் நிரப்பப்பட்ட சிறிய பைகளில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்கும்படி நட்டு நிழல்பாங்கான இடத்தில் வைத்து ஈரம் காயாமல் அளவோடு தண்ணீர் விட்டுவர இரண்டு வாரங்களில் தளிர்த்துவிடும். கரிமுண்டா ரக மிளகு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கிறேன்.

விற்பனை

மிளகுக்கு நல்ல விலையோட விற்பனை வாய்ப்பு உள்ளது. நான் பயிர் செய்யத் தொடங்கிய போது ஒரு கிலோ மிளகை 60 முதல் 80 ரூபாய் வரை விற்றேன். தற்போதைய சந்தை விலை ஒரு கிலோ ரூ.1000, மொத்த விற்பனை என்றால் கிலோ ரூ.800க்கு கொடுக்கிறோம்.

மிளகு சமவெளியில் விளையறதால தரம் குறைவதில்லை, சொல்லப்போனா காரம் அதிகமா இருக்கு. மிளகுக்கு நிறைய ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறதால, வாய்ப்புள்ள விவசாயிகள் மிளகை ஊடுபயிராக செய்வது அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துக் கொண்ட ராஜாகண்ணு அவர்களுக்கு ஈஷா விவசாயக் குழு நன்றி கூறி விடைபெற்றது.

தொடர்புக்கு:

திரு. ராஜாகண்ணு: 9443005676
திரு. செந்தமிழ்ச் செல்வன்: 9787374208

தொகுப்பு:

ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert