இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ரேலியிலிருந்து நமக்கு சில தகவல்களை அனுப்பியுள்ள சத்குரு அவர்கள், மலையும் நதியும் காடும் எப்படி அவரது வாழ்வில் முக்கிய அங்கம் வகித்தன என்பதைச் சொல்லி, நதி மீட்பு கொள்கைக்கான தேவை குறித்தும் ஆணித்தரமாக பதிவுசெய்கிறார். 3000கிமீ கடந்தும் உற்சாகம் குறையாத பேரணி குறித்தும் நம்மிடையே பேசுகிறார்...

எனக்கும் மலைகளுக்கும், காடுகளுக்கும் நதிகளுக்குமான தொடர்பு என் பால்ய வயது காலங்களுக்கு செல்லும். இயற்கை, ரசிப்பதற்கான ஒரு பொருள் என்றல்லாமல், என் வாழ்வின் அங்கமாய் அவை இருந்திருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில், தேசம் முழுவதும் நதிகள் வற்றி வருவதை நான் கவனித்து வருகிறேன். அதுவும், கடந்த 8 ஆண்டுகளில் இந்த வீழ்ச்சி விகிதம் செங்குத்தாக கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் விஞ்ஞானி அல்ல, தேவையான அறிவியல் ஞானமோ வார்த்தைகளோ என்னிடம் இல்லை. ஆனால், இந்தச் சூழ்நிலையை கவனிப்பவன் என்கிற முறையில், பசுமையின்மையும், நிலத்தடி நீர் மிகையாய் உறிஞ்சப்படுவதும்தான் நம் நதிகளை அழிவினை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. அனைத்து சாத்தியங்களின் மூலமும் நிலத்தினை பசுமையாக்கி நீர் ஆதாரங்களைப் பெருக்கி, நீரினை முறையான தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதே இனி வழி.

மண்ணின் கரிமவளக் குறைப்பாடும், போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாமையும், இத்தனை பெரிய மக்கள்தொகைக்கு உணவளித்த நம் விவசாயிகளை தற்கொலை நோக்கிச் செலுத்துகிறது. பல துறைகளைச் சேர்ந்த, தீர்வுகளை அறிவதில் அனுபவம் கொண்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தபின் இந்த திட்ட வரைவு உருவாக்கப்படுகிறது. அனைத்து பங்குதாரர்களின் நலனையும் கருத்தில்கொண்டு, குன்றிவரும் நம் மண் மற்றும் நீர் வளம் எனும் கொடிய பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படுகிறது.

இதில் முதல் பங்குதாரர் ஆறுகள். அதன்பின் அதில் வாழும் உயிர்கள், உழவர்கள். அதன்பின், அதன்மூலம் வாழும் சமூகம், அதன்பின் உள்ளூர் மற்றும் மத்திய நிர்வாகங்கள். இந்தத் திட்டவரைவினை, சுற்றுச்சூழல் மீது தாக்கம் ஏற்படுத்தும், ஒரு பொருளாதார திட்டமாகவும் ஆக்க விரும்புகிறோம். செயல்படுத்தக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கையே நமது முக்கிய நோக்கம். தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மிக மிக அவசியமான இந்த முறையினை ஒரு கட்டாய சட்டமாக்க வேண்டும் என்பது எனது பணிவான எதிர்பார்ப்பு.

நமது நதிகள், நமது நீர்நிலைகள், நமது மண் இவற்றை எல்லாம் தேசிய பொக்கிஷமாக மாற்றுவதை நோக்கி நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நதிகள் மீட்பு விழிப்புணர்வு பேரணி, கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் பூமியான ஆந்திரத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது.

கார் ஓட்டுதல், நிகழ்ச்சிகள், ஊடகங்களுடனான நேரங்கள், முடிவில்லாத வரவேற்பு விழாக்கள் - கொஞ்சம் வேலைப்பளு அதிகம்தான். ஆனால், நம் அணியினர், இந்த உன்னதமான சாகசத்தை எதிர்கொள்ள ஊக்கமாக இருக்கின்றனர்.

Love & Grace