குரு பௌர்ணமி அன்று, ஆதியோகி ஆலயத்தில் ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பைத் துவக்கினோம். பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்தும், மேலும் கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்தும் என மொத்தம் நாற்பத்தைந்து பேர் இந்த 21 வாரப் பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள்.

'ஹ' என்றால் சூரியன், 'ட' என்றால் சந்திரன். சூரியனும், சந்திரனும் இல்லாமல் ஹடயோகா இல்லை. ஹடயோகா பள்ளியின் மூலம், சூரிய நமஸ்காரத்தைப் போலவே இருக்கும் சூரியன் சம்பந்தப்பட்ட ஒருவகையான பயிற்சியை கற்றுத் தர இருக்கிறோம். ஆனால் அது 'சூரியக் கிரியா' என்று அழைக்கப்படும். ஏனென்றால் அதில் குறிப்பிட்ட வகையான சுவாசமும், சக்தியை ஆற்றல் மிக்க வழியில் தூண்டுவதும் நிகழும். சூரிய நமஸ்காரத்தில் இருக்கும் ஆசனங்களை நீங்கள் ஒரு வகையில் செய்தால் அவை தயார்படுத்தும் தன்மை உடையவை அல்லது இன்னொரு வகையில் செய்தால் ஈடா, பிங்கலா* இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தக் கூடியவை. பெரும்பாலும் இது சூரிய நமஸ்காரம் என்றே அழைக்கப்படுகிறது, ஏனென்றால் அது முக்கியமாக சோலார் ப்ளக்ஸைத்(நெஞ்சுக் குழிப் பகுதி) தூண்டுகிறது. 'சமத் ப்ராணா' அல்லது உடலில் இருக்கும் சூரிய வெப்பத்தை உயர்த்துகிறது. 'சூரியன்' என்று நாம் சொல்வதை வெறும் ஒரு குறியீடாக மட்டும் சொல்லவில்லை. இந்த பூமியில் நீங்கள் உணரும் அத்தனை வெப்பமும் அடிப்படையில் சூரியனிடமிருந்துதான் வருகிறது - அதுதான் சேமித்து வைக்கப்பட்டு, பல வழிகளிலும் வெளியிடப்படுகிறது. சூரிய வெப்பத்தினால் சுடப்படுவதால்தான் ஹைட்ரோ கார்பன்கள் உருவாகின்றன. ஒரு மரத்துண்டை எடுத்து நீங்கள் எரித்தால், அது சூரிய சக்தியைத்தான் வெளியிடுகிறது. சூரிய சக்தியை நீக்கிவிட்டால், ஒட்டுமொத்த பூமியும் பனிக்கட்டியாக உறைந்துவிடும்.

சூரிய சக்தியால்தான் நடக்கின்றன. அணுவைப் பிளப்பது மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். இந்த செயல் சூரியத் தன்மை உடையது அல்ல, அதனால்தான் அது அத்தனை திறன் மிக்கதாக, ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, ஏனென்றால், அணுவைப் பிளப்பதற்கு நீங்கள் இந்த பூமியின் பொதுவான சக்தி ஆதாரமான சூரியனைப் பயன்படுத்துவதில்லை. நம்முடைய அமைப்புகளில் சூரியனைத் தூண்டினால், உடல் பிரகாசமாக ஒளிரத் துவங்குகிறது. மேலும் உங்கள் சுவாசப் பாதையில் மட்டுமல்லாமல், உடலின் பிற பாகங்களிலும் அதிகப்படியான சளியின் வடிவில் வெளிப்படும் உங்களது குறிப்பிட்ட சில பிரச்சனைகள் நீங்கி உடல் சமநிலை அடைய முடியும்.

அனைத்துமே சூரிய சக்தியால்தான் இயங்குகின்றன. நாம் நிலக்கரி அல்லது எரிவாயுவிலிருந்து மின்சாரத்தை உருவாக்குவதாக நினைத்தாலும், அனைத்துமே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமல்லாமல் உங்களைப் பற்றிய நிறைய விஷயங்களையும் தீர்மானிக்கிறது. உங்களுக்குள் எத்தனை சூரிய சக்தி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், ஆன்மீக வாய்ப்புகள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்கள் சுரப்பிகளின் சுரப்புகள் எத்தனை சமநிலையோடு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவை தீர்மானிக்கப்படுகின்றன. உங்களது சுரப்பிகளின் சுரப்புகள் சற்றே சமநிலை தவறியிருந்தாலும், தியானத்தை விடுங்கள், வெறுமனே உட்கார்ந்து, கவனிப்பது கூட மிகவும் கடினமாகிவிடும். உடலின் ரசாயனங்கள் தாறுமாறாகிவிடுவதால், நீங்கள் பித்துபிடித்ததைப் போல உணர்வீர்கள். சுரப்பிகளில் சமநிலையைக் கொண்டு வருவதற்கு சூரிய நமஸ்காரம் மிக எளிமையான, மிகச் சிறப்பான சாதனாக்களில் ஒன்று.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு சுரப்பிகளின் சுரப்புகளும், சளியின் அளவும் மிகச் சுலபமாக சமநிலை அடைந்து, நல்ல நிலையில் இருக்கும். இது சூரியக் கிரியாவை பெரும்பான்மை மக்களுக்குக் கற்றுத் தரத் தீர்மானிக்கப்பட்டபோது, அது சூரிய நமஸ்காரமாக சுருங்கிவிட்டது. சூரியக் கிரியாவை பொதுமக்களில் பெரும்பான்மையினருக்குக் கற்றுக் கொடுக்க தீர்மானிக்கும்போது, அவர்கள் செய்வதை தொடர்ச்சியாக கண்காணிப்பதோ அல்லது தவறுகள் இருந்தால் திருத்துவதோ மிகவும் கடினம் என்பதால், அதிலிருக்கும் சக்தி வாய்ந்த அம்சங்களை எடுத்துவிட வேண்டும். ஏனென்றால் சக்தி வாய்ந்த அம்சங்களை மக்கள் தவறாகச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் செய்தால் அது கெடுதல் விளைவிக்கும். எனவே அதை சற்று நீர்க்கச் செய்யும்போது, அதை அதிகமானவர்கள் பயன்படுத்த முடியும். பிறகு தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தேவையில்லாமல் அதை அதிக எண்ணிக்கையில் கற்றுத் தர முடியும். அதனால் அது அதிகமாக நடைமுறைக்குச் சாத்தியமாகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மக்கள் இதைச் செய்யும்போது, அதை சுலபமாக கண்காணிக்க முடியும்போது, அதை நாம் முற்றிலும் வித்தியாசமான வழியில் செய்ய முடியும்.

உங்கள் அமைப்புகளை இந்தப் பிரபஞ்சத்தின் வடிவத்துக்கு இசைவாக ஒழுங்குபடுத்துவதற்கு, நீங்கள் ஒரு சரியான வடிவம் பெறுவதற்கு ஹடயோகா ஒரு வழி. அப்போது நீங்கள் பிரபஞ்ச வடிவத்தின் பிரதிபிம்பம் ஆகிவிடுவீர்கள். இதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். பிரபஞ்ச வடிவத்துக்கு வெகு தொலைவில் நீங்கள் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு நெருக்கமாக நீங்கள் செல்லும்போது, ஹடயோகாவை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் பயிற்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், அதை துல்லியமாகச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும், இல்லையேல் வேறு பல விஷயங்கள் நடந்துவிடும். சூரியக் கிரியாவை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், அது அளவில்லாத சாத்தியங்களை வழங்கும்.

உள்ளுக்குள் சூரிய சக்தியை தூண்டுவதற்காக, கிரியாக்களும், ஆசனங்களும் பல்வேறு பரிமாணங்களில், ஆதியோகியின் காலத்திலிருந்தே செய்து வரப்பட்டுள்ளன. ஆதியோகி, உடலின் சூரியனை தூண்டிவிடுவதற்காக பலவிதமான ஆசனங்களை, அதற்கான வழிமுறைகளை தானே கற்பித்திருக்கிறார். மஹாபாரதத்தில் கிருஷ்ணர், சூரியனை வழிபட்டு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. தினமும் காலையில் சூரியன் உதிக்கும்போது அவர் சூரியனுக்கு நன்றி செலுத்தி, அதனுடைய வழிகாட்டுதலை வேண்டி நிற்பதை ஒரு விசித்திரமான செய்முறை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணரே ஒருவகையான சூரியக் கிரியாவை செய்து வந்தார். அதை எந்த வடிவில் செய்து வந்தார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் என்னால் குறைந்தபட்சம் சூரியக் கிரியாவின் 20 வெவ்வேறு வடிவங்களை சுலபமாக சொல்ல முடியும். அதில் ஏதாவது ஒரு வகையைத்தான் அவர் செய்திருக்க வேண்டும், அல்லது அதில் லேசான மாறுதல்கள் இருந்திருக்கலாம். அதைத் தவிர வேறெந்த வழியிலும் அவரால் செய்திருக்க முடியாது.

நான் ஹடயோகா கற்றபடியே வளர்ந்திருந்தாலும், இதுவரை ஈஷா யோகா மையத்தில் நாம் ஹட யோகாவை தீவிரமாகக் கற்றுக் கொடுத்ததில்லை. இங்கு கற்றுக் கொடுக்கும் சம்யமா தியானத்துக்கான தயார்படுத்தும் படிநிலையாகவே ஹடயோகாவை இங்கு நாம் பயன்படுத்தியிருக்கிறோம். 18 ஆசனங்களை ஒன்று சேர்த்து சம்யமாவுக்குத் தயார்படுத்துவதற்காக நாம் கற்றுக் கொடுத்திருக்கிறோம். ஹடயோகா கற்றுத் தருவதைத் தவிர்த்துவிடலாம் என்றே நான் நினைத்தேன், ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னால், நான் கலிபோர்னியா சென்று வந்த பிறகு, நாம் ஹடயோகா கற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் ஹடயோகா அத்தனை விசித்திரமான வடிவங்களையெல்லாம் பெற்றுவிட்டது. பழங்காலத்தில் யோகா எப்படி இருந்ததோ அந்த வடிவத்துக்கே அதைக் கொண்டு வர வேண்டியது முக்கியம். எனவே நாம் செய்ய வேண்டிய இன்னொரு வேலையாக அது ஆகிவிட்டது. அடுத்த சில வருடங்களில் அது ஈஷா யோகா மையத்தின் முக்கியமான ஒரு அங்கமாக, ஒரு பெரிய செயல்பாடாக மாறிவிடும். அதை நாம் சூரியக் கிரியாவாகக் கற்றுத் தர இருக்கிறோம்.

ஆசிரமத்தில் நாம் 21 நாள் ஹடயோகா வகுப்புகளை நடத்துவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மார்ச் 2013ல், மஹாசிவராத்திரிக்குப் பிறகு துவங்கி, இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கற்றுத் தர இருக்கிறோம். இது கற்றுக் கொள்வதற்காக மட்டும்தான், கற்றுக் கொடுப்பதற்காக அல்ல. ஹடயோகாவை இப்போது நாம் இரண்டரை நாட்கள் கற்றுத் தருகிறோம் ஆனால் அதை 21 நாட்களில் கற்றுத் தர விரும்புகிறோம்.

நீங்கள் ஆங்கிலம் பேசுபவராக இருந்தாலும் சரி, அல்லது தமிழ் பேசுபவராக இருந்தாலும் சரி, 21 நாள் ஹடயோகா கற்றுக் கொள்ளும் விருப்பமிருந்தால், 2013ம் ஆண்டில் அதற்காகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஹடயோகாவை ஒரு குறிப்பிட்ட வழியில் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு, ஒரு சக்தி வாய்ந்த 21 நாள் பயிற்சி உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யப் போகிறவர்கள் மட்டும்தான் வர வேண்டும்; மற்றபடி பயிற்சியில் கலந்துகொண்டு எங்கள் உயிரை எடுக்காதீர்கள், ஏனென்றால் ஒருவருக்கு இதைக் கற்றுத் தருவதற்கு மிகப் பெரிய முயற்சி தேவைப்படுகிறது. ஹடயோகா தன்னளவில் ஒரு முழுமையான ஆன்மீக செயல்பாடாக இருக்க முடியும். நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாகச் செய்து வந்தால், அது போதும்.

*இடது, வலது சக்தித் தடங்கள்.

Love & Grace