மருதாணி… அழகைத் தாண்டி செய்யும் மகத்தான மருத்துவம்!

மருதாணி... அழகைத் தாண்டி செய்யும் மகத்தான மருத்துவம்!, Maruthani azhagai thandi seyyum magathana maruthuvam

கொல்லைப்புற இரகசியம் – பகுதி 28

காலையில் FMல் கேட்ட அந்த தெம்மாங்கு பாடலின் வரிகளை முணுமுணுத்தபடியே உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தேன்.

“மருதாணி பூசி வைக்க தேவையில்ல,
மாமன் மகன் பேரு சொன்னா போதும் புள்ள
சிவந்திடுமே ஏம்பொண்ணுத் தங்கம்!”

சன்னமான குரலில் நான் பாடிய அந்த பாடல் பாட்டியின் காதில் எப்படிக் கேட்டதோ தெரியவில்லை! அடுத்த வரிகளை பாட்டியே உற்சாகத்தோடு பாடத்துவங்கினாள்.

“சிறுவாணி தண்ணிக்கெல்லாம் சீகக்காய் தேவையில்ல
கடையாணி மையெடுத்து கன்னத்துல வை புள்ள
கண்ணுபடப் போகுது ஏம்பொண்ணுத் தங்கம்!”

பாட்டியின் அந்த கணீர் குரலில் பாடலுக்கு புது மெருகேற்றியது.

கை, கால் வலி, எரிச்சல், குடைச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலைய புளிச்ச காடி, இல்லைனா எலுமிச்சம் பழச்சாறு சேத்து அரைச்சு வலியுள்ள இடத்துல பூசினா குணமாகும். நகத்தில வர்ற புண்கள், கண்வேக்காடு, சுளுக்கு மாதிரி பிரச்சனைகளுக்கு இலைய அரைச்சோ அல்லது சிதைச்சோ கட்டினா பலன் கிடைக்கும்.

“என்னப்பா ஏ.ஆர்.ரகுமான் மெட்டு மட்டும் தானப்பா உனக்கு ஃபேவரெட், இன்னைக்கு என்ன புதுசா எங்க காலத்து தெம்மாங்கு பாட்ட படிச்சிட்டு வர்ற?” பாட்டி தனது கையில் இருந்த மருதாணி இலைகளை பக்குவம் பார்த்தபடியே என்னிடம் கேட்டாள்.

“மருதாணி கையில வச்சா மட்டும் இல்ல பாட்டி, பாட்டுல இருந்தாலும் அழகாதான் இருக்குது. என்னமோ அந்த பாட்டு ரொம்ப புடிச்சிருந்தது, காலையில FMல கேட்டேன். அதான் அப்படியே முணுமுணுத்தேன்.”

“ஓ… அது சரி! ஆனா மருதாணின்னா ஏதோ கையில வண்ணத்துக்காக வைக்கிற ஒரு பொருள்னு நினச்சிடாத. அதுல அதத் தாண்டியும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு.”

“ஓ அப்படியா?! இது புதுசா இருக்கே… அப்படின்னா வழக்கம்போல நான் உங்க கிட்ட இன்னைக்கு அசிஸ்டண்ட்டா வேல பாத்துகிட்டே அந்த பலன்களை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்.”

“தாராளமா… அப்படின்னா முதல்ல இந்த மருதாணி இலைகளை எல்லாம் காம்புகிள்ளி, கொஞ்சம் அந்த துணிப்பையில போடு பாப்போம்” பாட்டி என்னிடம் பேசிக்கொண்டே வேலை வாங்கினாள் சாதுர்யமாக.

பின்னர், பாட்டி கைவேலை பார்த்துக்கொண்டே மருத்துவ குணங்களை சொல்லத் துவங்கினாள்.

“‘மருதோன்றி’ங்கற பேர்தான் மருவி மருதாணின்னு இப்போ சொல்லப்படுது. ‘அழவணம்’ அப்படின்னும் ஒரு பேரு இருக்கு. லோசோனியா இனர்மிஸ்’ங்கற தாவர இனத்த சேந்த இந்த மருதாணி ஒரு செடி வகை!”

“என்ன பாட்டி தாவரவியல் பேரெல்லாம் சொல்லி அசத்துறீங்க?”

“அப்புறமென்ன… நீ மட்டும்தான் FMல தகவல் தெரிஞ்சிக்குவியா? நாங்களும் கேப்போம்ப்பா!”

“ம்… சரி… சரி! மேல சொல்லுங்க!”

“கை, கால் வலி, எரிச்சல், குடைச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலைய புளிச்ச காடி, இல்லைனா எலுமிச்சம் பழச்சாறு சேத்து அரைச்சு வலியுள்ள இடத்துல பூசினா குணமாகும். நகத்தில வர்ற புண்கள், கண்வேக்காடு, சுளுக்கு மாதிரி பிரச்சனைகளுக்கு இலைய அரைச்சோ அல்லது சிதைச்சோ கட்டினா பலன் கிடைக்கும். அம்மை நோய் பாதிக்கும்போது இந்த இலைய அரைச்சு ரெண்டு உள்ளங் கால்கள்லயும் கட்டி வச்சா, அம்மை நோயால கண்கள் பாதிக்கப்படாம தடுக்கலாம். இலைய ஊறல் கசாயமிட்டு சுளுக்கு, அடிபட்ட சிறு காயம் உள்ள இடத்துல ஒற்றடம் வைக்கலாம். அந்த இடங்கள கழுவுவதற்கும் யூஸ் பண்ணலாம். அதுமட்டுமில்லாம அந்த கசாயத்த வாய்ப்புண் இருந்தா வாய்க்கொப்பாளிக்கலாம்.”

“அடேங்கப்பா… மருதாணி இலை கையில மட்டுமில்லாம நம்ம ஆரோக்கியத்திலயும் வண்ணம் கூட்டும் போலிருக்கே?!” இதுவரை அறிந்திரா மருதாணி இலையின் மருவத்துவ குணங்களை பாட்டி சொல்வதைக் கேட்டு அசந்துபோனேன்.

“அதுமட்டுமில்ல தம்பி, மருதாணிப் பூவும் ஒரு நல்ல பலன் தரக்கூடியதுதான்.”

“ஓ… சொல்லுங்க பாட்டி!”

“உன்னோட தலையணைக்கு கீழ செல்ஃபோன வச்சு தூங்குறதுக்கு பதிலா, மருதாணி பூவ வச்சு தூங்கினேன்னா நல்ல நித்திரை வரும், அதோட உன் உடல் வெப்பமும் குறையும்! மருதாணி விதையோட எண்ணெய உடம்பு மீது தடவினா உடல் எரிச்சல் தணிஞ்சு உடல் நல்ல குளிர்ச்சியாகும்.”

“சூப்பர் பாட்டி… அப்புறம் நான் போகும்போது கொஞ்சம் மருதாணி இலைய கொல்லப்புறத்தில பிடுங்கிக்கவா?”

“கொஞ்சமா பிடுங்கிக்கோ… ஏன்னா அங்க ஒரு செடிதான் இருக்கு. தொடர்ந்து வேணும்னா நம்ம ஈஷா ஆரோக்கியா மையங்கள்லயே பொடி செஞ்சு வச்சிருக்காங்க, வாங்கிக்கலாம். ஆனா வாங்கப் போகும்போது பழைய ஐநூறு ரூபா நோட்ட கொண்டு போயிடாத! அதுவும் உன்ன மாதிரிதான், யாரும் சீண்டமாட்றாங்க!” பாட்டியின் அந்த கலாய்ப்பால், “முடியல…அழுதிருவேன்” என்ற நிலைமையில் பாட்டியிடமிருந்து விடைபெற்றேன்!

மருதாணி இலைச்சாறு உட்பிரயோகம்:

மருதாணி இலைச்சாறு 30 மிலி எடுத்து 90 மிலி பாலுடன் கலந்து குடித்து வந்தால் (உணவுக்குப் பின்) கைகால் வலி குணமாகும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert