Question: சத்குரு, மரணத்திற்குப் பிறகு நாம் எங்கு போகிறோம்? ஏற்கனவே மரணம் அடைந்தவர்களுடன் பேச சிலர் உதவி செய்வதாக விளம்பரம் கூட செய்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

மரணம் அப்புறம்..

மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஏறக்குறைய 99% மனிதர்களுக்கு தங்கள் தற்போதைய வாழ்க்கையையே சரிவரக் கையாளத் தெரியவில்லை. ஆனால் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை என்னவாகும் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். அதில் என்ன பயன் இருக்கிறது? இப்படி ஒரு எண்ணம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமே மனிதர்களுக்கு எங்கோ மரணமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவர்கள் ஒரு பெரிய லிஸ்ட் வைத்துக் கொண்டு அத்தனையையும் வாழ்ந்து பார்த்துவிட எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை காலையில் என்ன செய்வது என்று இன்னமும் திட்டமிட்டிருக்க மாட்டார்கள். இல்லையா?

நீங்கள் விரும்புகிற எண்ணிக்கையில் பேய்களை, பிசாசுகளை, ஆவிகளை, கடவுள்களை எல்லாம் உருவாக்கிக் கொண்டே போகலாம்.

பலபேருக்கு அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு விடுமுறை வந்தால் அப்போது என்ன செய்வதென்றே புரிவதில்லை. இத்தகைய மனிதர்களுக்கு மரணம் இல்லாமல் நிலையாக இருப்பதற்கு ஆசை. இந்த 50 ஆண்டுகால வாழ்க்கையையே எப்படி வாழ வேண்டும் என்று தெரியாத இவர்கள் நிலையாக வாழத் தொடங்கினால் எப்பேர்ப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று யோசிக்க வேண்டும். எனவே, மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை என்னவாகும் என்றெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்.

ஆவிகளுடன் பேசுபவர்கள்...

தங்களுக்குள் யோசிப்பதைத் தாண்டி சிலர் வேறுவகையான முயற்சிகளில் இறங்குகிறார்கள். தங்களை ஆவிகளுடன் பேசுகிற மீடியம் என்று கூறிக் கொள்பவர்களை அணுகி ஏற்கனவே மரணம் அடைந்தவருடன் தொடர்பு கொண்டு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். மீடியம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி, அவர்கள் மூலம் இறந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள நினைப்பவர்களும் சரி, ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித மனதிற்கென்று பல பரிமாணங்கள் உண்டு. அது உங்களைப் பல வகையில் ஏமாற்றும். இது உங்களுக்குத் தெரிய வேண்டும். நீங்கள் விரும்புகிற எண்ணிக்கையில் பேய்களை, பிசாசுகளை, ஆவிகளை, கடவுள்களை எல்லாம் உருவாக்கிக் கொண்டே போகலாம். உங்களுக்குள் இது உண்மை என்றும் கூட தோன்றச் செய்யலாம். அத்தகைய மாயைகளை ஏற்படுத்துகிற ஆற்றல் மனதுக்கு உண்டு.

எனவே, இது வெறுமனே, உங்கள் மனதின் விளையாட்டு. நீங்கள் உங்களோடும், மற்றவர்களோடும் உளவியல் ரீதியாக விளையாடுகிற ஒரு விளையாட்டு. இது மனிதர்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணை செய்யாது. இது உங்களுக்கு இன்னும் ஒரு பொழுதுபோக்கு. இன்னொரு திரைப்படம் பார்ப்பது போல. வாழ்க்கையில் உயர்நிலை எட்டாமல் தடைபட்டுப் போக இதுவும் ஒரு வழி. அவ்வளவுதான். இது உங்களை எந்த வகையிலும் வளரவிடாது.

சரி, இறந்துபோனவர்கள் 5 பேர்களுடன் தொடர்பு கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களைச் சுற்றி இவ்வளவு பேர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களோடு, உங்களுக்கு எந்த விதத்திலும் நல்ல தொடர்பு இல்லை. இப்படி இருக்கும்போது, இறந்தவர்களோடு ஏன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள்? தயவுசெய்து அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். இங்கே இருக்கிற மனிதர்களோடு தொடர்பு இல்லை. வேறெங்கோ இருப்பவர்களோடு தொடர்பு இருக்கிறது அல்லது தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆசை இருக்கிறது. இறந்தவர்களைத் தனியாக விட்டு விடுங்கள். உங்களிடமிருந்து அவர்கள் விடுதலை ஆகிவிட்டார்கள். எனவே, மீடியம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி, அவர்களை அணுகுகிறவர்களும் சரி, தங்களைச் சுற்றி உயிரோடு இருப்பவர்களுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும்.