"மரணம்" என்ற வார்த்தையைக் கேட்டாலே நம்மில் பலருக்கு பயம்தான் தொற்றிக் கொள்கிறது. 'கடவுளே! நான் இறந்து விடக்கூடாது' என்று தான் நாம் பிரார்த்தனை செய்வோம். இந்த மரணத்தைக் கொண்டு வரும் எமனை எப்படி ஏமாற்றுவது என்ற கேள்விக்கு சத்குரு தரும் பதில் இங்கே...

Question: எமனை எப்படி ஏமாற்றுவது? தன் மரணம் நிகழும் நேரத்தை ஒருவன் தள்ளிப் போட முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்களோ, அந்த எமனோ உங்கள் மரணத்தை முடிவு செய்வதில்லை. முதலில் எமன் என்று யாரும் இல்லை. நீங்கள் உடல் சார்ந்து இருக்கிறீர்கள். இந்த உடலுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அந்த எல்லைகளைத் தாண்டி அதனால் தொடர முடியாது. அதை மீறி உயிர் தொடர வேண்டுமென்றால், இந்த உடலை உதறிவிட்டு, இன்னொரு உடலை ஏற்றுக் கொள்வதுதான் நடக்கும். அதைத்தான் மறுபிறவி என்கிறோம்.

ஆயுளை நீட்டிக் கொள்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது. அது சமாதி நிலையில் நீண்டநேரம் இருந்துவிடுவது. சமாதிநிலையில் ஒருவரது உடலியக்கம் மிகமிகக் குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட மரணமடைந்தவர் போலவே அவர் இருப்பார். அவரது இதயம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது போல் இருக்கும், குடல் இயங்காது, சிறுநீரகம் செயல்படாது. 'உயிர்' உடலை விட்டு பிரியாது இருக்க, உடலின் இயக்கம் எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டும் உடல் இயங்கும். இப்படி செய்யும்போது உடலின் ஆயுட்காலம் நீளும். ஆறுமாதம் சமாதியில் இருந்தால் இன்னும் ஆறு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ உயிர் வாழ்வதை நீட்டித்துக் கொள்ள முடியும். ஆனால் தனக்குரிய நேரம் முடிந்துவிட்டால் இந்த உயிர் உடலில் இருப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை.

Question: பரிணாம வளர்ச்சியின் படி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதேபோல் மனிதனிலிருந்து அடுத்த உயிரினம் வருமோ?"

4

சத்குரு:

குரங்காக இருந்து நீங்கள் மனிதனாக ஆனது, உங்கள் விழிப்புணர்வு இல்லாமல் நடந்த செயல். எப்போது நீங்கள் மனிதனாக வந்துவிட்டீர்களோ, இனி அடுத்த வளர்ச்சி உங்கள் விழிப்புணர்வோடுதான் நடந்தாக வேண்டும். இயற்கை அடுத்த நிலை முன்னேற்றத்தை செயல்படுத்தாது. இப்போது ஒரு புலியோ, ஒரு குரங்கோ, ஒரு பாம்போ இருக்கிறதென்றால், புலி இப்படி, குரங்கு அப்படி, பாம்பு அப்படி என்று ஒவ்வொன்றிற்கும் அதன் குணாதிசயங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. புலி எப்போதும் அப்படித்தான் இருக்கும். நான் ஒரு நல்ல புலியாக வளர்வேனா என்னும் கவலை எல்லாம் அதற்கு கிடையாது. நன்றாக சாப்பிட்டால், அது நல்ல புலியாகத்தான் வளரும்.

ஆனால் மனிதன் 'இப்படித்தான்' என்று வரையறுக்கப் படவில்லை. ஒரு நேரத்தில் கடவுள் போல் கருணையுடன் செயல் படுகிறான், மற்றொரு நேரமோ இரக்கமற்ற அரக்கன் போலத் திமிருகிறான். ஒருவனை 24 மணி நேரமும் நல்லவன் அல்லது 24 மணி நேரமும் கெட்டவன் என்று சொல்ல முடியாது. அவனது செயல்களை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் அவனுக்கு உண்டு. அதை வைத்து, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவன்தான் ஒவ்வொரு நொடியும் முடிவு செய்கிறான். எனவே இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இனி மனிதன்தான் தன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை இயற்கை சிறிது சிறிதாக மாற்றங்களை செய்து, உங்களை 'மனிதன்' என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இதற்கப்புறம் இயற்கை உங்களைத் தள்ளாது. அதன் வேலை முடிந்துவிட்டது. இனி நீங்களாகத்தான் உச்ச நிலையை அடைய வேண்டும்.

tmkeesey @ flickr