மரணம் என்பது மறுசுழற்சியே!

maranam-enbathu-marusuzharchiye

சத்குரு ஸ்பாட்டில்… “மரணம் என்றால் என்னவென்று எனக்கு உணர்த்த முடியுமா?” என்ற சாதகரின் கேள்விக்கு பதிலளிக்கிறார் சத்குரு…

கேள்வி
சத்குரு, ஒருவருடைய மரணம் என்னை வருத்தத்தில் ஆழ்த்துகிறது, என் வீட்டு மாடியில் இறந்து கிடக்கும் புறாவோ, தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாயோ என்னை வேதனையில் தள்ளுகிறது. நான் ஏன் இப்படி உணர்கிறேன்? மரணம் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்த முடியுமா?

சத்குரு:

இறப்புதான் எல்லா பயங்களுக்கும் அடிப்படை. இறப்பு இல்லையென்றால் பயம் என்பது இருக்காது, ஏனென்றால் துண்டு துண்டாக வெட்டினாலும் நீங்கள் இறக்க போவதில்லைதானே. ஆனால் பயம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? மரணம் என்பது ஒரு அற்புதமான விஷயம். பல விஷயங்களை அது முடிவுக்கு கொண்டு வருகிறது. தற்போது நீங்கள் இருக்கும் நிலையில் அதை ஒரு கொடுமையான விஷயம் என்று நினைக்கலாம். ஆனால் 1000 வருடங்கள் வாழக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை ஒரு விடுதலையாக நினைப்பீர்கள். நீண்ட காலம் இங்கே இருந்தீர்கள் என்றால் நீங்கள் எப்பொழுது கிளம்புவீர்கள் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே மரணம் என்பது ஒரு பெரிய விடுதலை, என்ன அது அகாலமாக நிகழக் கூடாது, அவ்வளவுதான். உலகில் ஏதோ ஒன்றை உருவாக்கும், ஏதோ ஒன்றில் பங்களிக்கும், ஏதோ ஒன்றை நிகழச் செய்யும் திறனோடு இருக்கும் பொழுது நாம் இறந்து போக விரும்புவதில்லை.

சரியான நேரத்தில் இறந்து போக விரும்பினால், யோகப் பயிற்சிகள் செய்தால் உங்கள் மரணம் எப்பொழுது சம்பவிக்க வேண்டும் என்பதை நீங்களே நிர்ணயம் செய்யலாம். இல்லையென்றால், ஒரு புறா இறந்து கிடப்பதை பார்த்தாலும் உங்களின் இறந்து போகும் தன்மை நினைவுக்கு வரும். நேற்று பறந்து கொண்டிருந்த ஒன்று இன்று இல்லை, இறந்து விட்டது. உங்களுக்கும் ஒரு நாள் அதே நிலைதான் என்று கற்பனை செய்வது பயம் தருவதாக இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் எதை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறீர்களோ அவற்றுடனான உங்கள் அடையாளம் அந்த அளவுக்கு ஒரு நிர்பந்தமாக மாறிவிட்டது. நீங்கள் சேகரித்த அடையாளம் என்று நான் சொல்லும் பொழுது, நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த உடல் இந்த பூமியின் ஒரு சிறு துண்டுதான். மண்ணை சேகரித்து நீங்கள் உருவாக்கிய இந்த உடல் மற்றும் அடையாளங்கள் எந்த அளவு வலுவாகி விட்டது என்றால், அதை இழப்பது என்பது இப்போது ஒரு கொடுமையான விஷயமாகத் தெரிகிறது.

உதாரணமாக நீங்கள் அதிக உடல் எடையோடு இருந்து, நாங்கள் உங்களை ஒரு 10 கிலோ எடை குறைக்க உதவினால், அதை கொடுமையான விஷயம் என்று நினைத்து அழுது கொண்டிருப்பீர்களா? நிச்சயம் இல்லை. 10 கிலோ குறைந்தால் அது மக்களுக்கு ஒரு பரவசமான விஷயம்தான். இதேபோல் மொத்தம் 50, 60 கிலோவையும் உதறினால் அதில் இழப்பதற்கு என்ன இருக்கிறது? வாழ்க்கையை நீங்கள் அதன் போக்கில் உணர்ந்திருந்தால், உங்கள் சேகரிப்புகளில் நீங்கள் தொலைந்து போகாது இருந்தால், உடலை விடுவது என்பது பெரிய விஷயமாக இருக்காது.

இறந்த பறவையின், பூச்சியின், நாயின், மனிதனின் உடல் என்பது மண் மீண்டும் மண்ணுக்கு போவது. இதில் பெரிய நாடகம் ஒன்றும் இல்லை. இது ஒரு இயற்கையான நிகழ்வு. நீங்கள் எடுத்துக் கொண்டதை திருப்பி கொடுத்து மறுசுழற்சிக்கு வழி செய்ய வேண்டும். உங்கள் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் பூமித் தாயை பொறுத்தவரை அது ஒரு மறுசுழற்சிதான். அது உங்களை வெளியே தள்ளி மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. உங்களை பற்றி நீங்கள் பலதும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் வாங்கியதை திருப்பிக் கொடுத்தாக வேண்டும், அது ஒரு நல்ல பழக்கம்தானே. யாரிடம் இருந்தாவது ஏதாவது வாங்கினால், ஒரு காலகட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். என்னை நம்புங்கள், மரணம் என்பது ஒரு நல்ல பழக்கம்தான்.

கடப்பது

கண்ணாடிக்குள் ஒளி ஊடுறுவுவதைப் போல்
ஊடுறுவ துடிக்கிறது தும்பி…
வழி இருக்கிறதென கண்கள் சொன்னாலும்
தென்றலும்கூட உட்புக முடியாதே!
கண்கள் ஏமாற்றத்தான் செய்கின்றன
ஏமாறிய மனமும் உள்ளேபுகு என்கிறது
எதுவும் உள்ளே போவதும் இல்லை
வெளியே வருவதும் இல்லை
ஊடுறுவ அனுமதிப்பதுபோல் இருக்கும்
சூழ்ச்சிப் பொறியை விலக்கி
ஜாலத்தையும் தாண்டிப் பார்க்கும்போது
கண்டேன்… என் படுக்கையில்
இறந்த, வறண்ட தும்பி பூச்சி

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert