கேள்வி: மனம் என்பது உடலின் ஓர் அங்கமா? இல்லையா?

சத்குரு: மனம் என்பது உடலின் ஓர் அங்கம்தான். ஆனால் நுட்பமான அங்கம்.

காற்றைப் போல, கண்ணுக்குப் புலப்படாத நிஜம் அது.
மின்சாரத்தைச் சுமக்கும் கம்பியைக் காணமுடியும். அதில் பாயும் மின்சாரத்தை காணமுடியவில்லை என்பதால், அது அங்கே இல்லை என்றாகுமா? தொட்டால் தூக்கி அடிக்கும் அல்லவா?

ஒருவர் தன் எண்ணத்தை உங்களிடம் சொல்கிறார். அது உங்களுக்குள் பதிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு பூவைத் தூக்கி எப்படி உங்கள்மீது எறிய முடிகிறதோ, அப்படி ஓர் எண்ணத்தையும் உங்கள்மீது எறிய முடிகிறது அல்லவா?

உங்களைக் கை நீட்டி அசைப்பது போல், தள்ளி நின்று தன் எண்ணத்தைச் சொல்லி ஒருவரால் உலுக்க முடியும் அல்லவா?

அதற்காக, மனதின் எடை என்ன? உயர அகலம் என்ன என்றெல்லாம் நீங்கள் அறிந்த கருவிகளால் அளந்துவிட முடியாது.

அதனால் அது எல்லைகளுக்குள் அடங்காததா? அப்படியல்ல.
காற்றை ஒரு குப்பியில் அடைப்பது போல், சிந்தனைகளையும் கட்டுப்படுத்த இயலும். எல்லைகளிட்டு அடைத்துவிட முடியும்.

கேள்வி: உடலை விட்டு நம் உயிர் நீங்கியபின், அதன் அடுத்த கட்டம் என்ன?

சத்குரு: உடலைவிட்டு உயிர் எப்படி நழுவி வெளியேறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் அடுத்த கட்டம் அமையும்.

பொதுவாக ஒருவரது உயிர் பிரிந்ததும், அவர் இனி இல்லை என்கிறோம். அப்படிச் சொல்வது சரியில்லை. உண்மையில் அவர் இனி உங்கள் அனுபவத்தில் இல்லை என்பதே சரி. அவர் வேறு ஏதேதோ விதத்தில் அங்கே இருக்கிறார்.

உடலை எந்தவிதத்திலும் காயப்படுத்தாமல், சிதைக்காமல் முழு உணர்வுடன், ஒரு ஆடையை உதறுவது போல், உங்கள் உடலைவிட்டு உயிர் வெளியேறுமானால், அதை மகாசமாதி என்கிறோம். அந்த நிலை அடைந்தவர்களுக்கு உயிர்ப் பயணம் அத்துடன் ஓர் முடிவுக்கு வருகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து துவங்கிய பயணம் அந்த ஒன்றுமில்லாததுடன் கலந்து ஐக்கியமாவதுடன் வாழ்க்கையின் வட்டம் முழுமையடைகிறது!