மல்லாடிஹள்ளி ஸ்வாமி – ஒரு ரோல் மாடல்

Malladihalli swami oru role model

கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 10


பலமில்லாத நோஞ்சான் குழந்தையாகப் பிறந்து, யோகப் பயிற்சிகளாலும் மன உறுதியாலும் நூறு வயதைத் தாண்டி வாழ்ந்த மல்லாடிஹள்ளி ஸ்வாமிகளின் வாழ்க்கை ஒரு மாபெரும் சகாப்தம்! ஸ்வாமிகளின் இறுதி நாட்களை விவரிக்கும் இந்த வாரப்பகுதி, தொடரின் இறுதியாகவும் அமைகிறது.

மிகச் சிறந்த எழுத்தாளரான மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள், யோகா சம்பந்தமான சுமார் 12 புத்தகங்களை எழுதியுள்ளார். சமூகத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதில் கலாச்சாரக் கொண்டாட்டங்கள் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்திருந்தார். கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு 25-க்கும் மேற்பட்ட நாவல்களையும், நாடகங்களையும், நாட்டுப் பற்றுப் பாடல்களையும் இயற்றியுள்ளார். அவர் எழுதிய நாடகங்களில் அவரே நடிப்பார், அவரே இயக்கவும் செய்வார். நாடக விழாக்களைப் பார்ப்பதற்காகவே மாநிலம் முழுவதிலும் இருந்து மக்கள் அங்கு கூடுவார்கள். ஆசிரமத்தில் மஹாசிவராத்திரி விழாவை மூன்று நாள் கொண்டாட்டமாகக் கொண்டாடுவார்கள். மஹாசிவராத்திரி இரவு முழுதும் இசையும் நடனமும் என்று குதூகலப்படும். தென்னிந்தியாவின் பிரபலமான கலைஞர்கள் பலரும் இங்கு வந்து நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளனர். இரவு முழுவதும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

அவருடைய கடைசி வருடங்களில் தனக்குப் பின் ஆசிரமத்தின் பணிகளையும், நிறுவனங்களையும் வழி நடத்தும் ஒருவரை தேடியவண்ணம் இருந்தார்.

அவருடைய கடைசி வருடங்களில் தனக்குப் பின் ஆசிரமத்தின் பணிகளையும், நிறுவனங்களையும் வழி நடத்தும் ஒருவரை தேடியவண்ணம் இருந்தார். யாராவது முழு மனதாக ஏற்று நடத்த முன்வந்தால் சில காலம் பயிற்றுவித்துவிட்டு எஞ்சியுள்ள காலத்தை இமயமலையில் கழிக்க வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பத்துடன் இருந்தார். இமயமலையில் உள்ள கேதார்நாத்தையும் கடந்து சென்று அங்குள்ள பகுதியில் ஆன்மீகச் சாதனைகள் செய்து முக்தி பெற விரும்பினார். உண்மையில் கடவுளைத் தேடித்தானே அவர் வீட்டில் இருந்து வெளியேறினார். பிறகு குருவின் விருப்பத்துக்கேற்ப முழுமையாகத் தன்னை மக்கள் தொண்டுக்கு அர்ப்பணித்தார்.

தன் சுயசரிதையில் அவர் இவ்வாறு உருக்கமாக எழுதியுள்ளார், “புகழ்பெற்ற மனிதநேய அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு மடங்களின் தலைவர்கள் என்று பலரின் கதவுகளைத் தட்டி, என் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்துங்கள் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டேன். ஆனால், என் விருப்பம் நிறைவேறவே இல்லை.” அவருடைய ஆசிரமத்துக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இருந்த நன்மதிப்பைக் கண்டு பலரும் தயங்கினர். பல கோடி ரூபாய் மதிப்புமிக்க சொத்தாக இருந்தபோதிலும், யாரும் அதை எடுத்து நடத்த முன்வரவில்லை. ‘நன்றாக நடத்துவோம்‘ என்ற உறுதிமொழியைத் தவிர வேறு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எல்லோரும் கைவிரித்து விட்டனர். அவர் அதைத் தன் சொத்தாக என்றுமே நினைத்ததில்லை. தன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைக்கூட அவர் கடைசிவரை வைத்திருக்கவில்லை. தன் நிறுவனங்களை ‘நாட்டின் சொத்து’ என்றே கருதினார். ‘எத்தனை பேரின் உழைப்பு இதில் உள்ளது? ஏன் யாரும் இதை ஏற்று நடத்த முன்வரவில்லை?’ என்று மிகவும் வருத்தப்பட ஆரம்பித்தார்.

இந்தச் சமயத்தில் அவருடைய நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. 100 வயதைத் தொடும் சமயம், மைசூரில் ஒரு யோகா நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தபோது, அந்த மேடையிலேயே சரிந்து விழுந்தார். திடீர் மாரடைப்பு. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். சுவாமிகள் தன் வாழ்நாளில் முதல் முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு வருடங்கள் கழித்து, 1993-ல், இரண்டாவது முறையாக அவருக்கு மாரடைப்பு. மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 102.

ஒரு சந்நியாசிபோல்தான் வாழ்ந்தார் என்பதால், அவர் சடலத்தைப் புதைத்து சமாதி எழுப்ப முடிவு செய்தனர்.
அவருடைய உடலை ஆசிரமத்துக்கு எடுத்து வந்தபோது, அவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்ததால், அவர் உடலை எரிக்கத்தான் வேண்டும் என்று சிலர் கருதினர். ஆனால், அந்த ஊர் மலைவாசி மக்களோ அவர் பிறப்பில் பிராமணராக இருக்கலாம், ஆனால் எங்களோடுதான் ஒன்றாக வாழ்ந்து வந்தார், எனவே, எங்கள் வழக்கப்படி புதைத்துவிடலாம் என்றனர். இப்படி ஒவ்வொருவரும் அவரைத் தங்களைச் சேர்ந்தவராகவே கருதினர். இறுதியில், அவர் முறைப்படி சந்நியாசத்துக்கு தீட்சை பெறவில்லை என்றாலும் ஒரு சந்நியாசிபோல்தான் வாழ்ந்தார் என்பதால், அவர் சடலத்தைப் புதைத்து சமாதி எழுப்ப முடிவு செய்தனர். ஒரு பெரிய சகாப்தம் இவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தது. இறுதி வரை மக்களின் நலனே அவருடைய மூச்சாக இருந்தது.மல்லாடிஹள்ளி ஸ்வாமி ஒரு ரோல் மாடல் , malladihalli swami oru role model

ஒரு நோயுற்ற தாய்க்கு ஒரு நோஞ்சான் குழந்தையாகப் பிறந்து, சில வருடங்கள் பிழைப்பதே அரிது என்று அனைவரும் நினைத்திருந்தபோது… தன் மனோதிடத்தால் தன் உடல்நலத்தைச் சரிப்படுத்திக் கொண்டதோடு, முதிய வயதிலும் இவ்வளவு பலம் பெற்றவராக விளங்க முடியுமா என்று அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினார். அனைவருமே சிறந்த உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பல ஆண்டுகள் ஊர்ஊராக சென்று யோகா கற்றுக்கொடுத்தார். நலிவுற்ற மக்களின் மேன்மைக்காக அவர்களின் சுகாதாரம், மருத்துவம், திருமணச் செலவைக் குறைப்பதற்காக ஒரே மேடையில் பல திருமணங்கள், புகை, சூதாட்டம் மற்றும் மது தடுப்பு, நீதிமன்றச் செலவைக் குறைப்பதற்காக கிராம நீதிமன்றங்கள், அனாதைக் குழந்தைகளுக்கு என்று விடுதிகள், ஏழைக் குழந்தைகளுக்கான பல கல்வி நிறுவனங்கள் என்று பல வகையிலும் தன்னை அர்ப்பணித்தார். நாடு விடுதலை மற்றும் கலாச்சார மேம்பாடு என்று எதுவும் அவருடைய பணிகளில் இருந்து தப்பவில்லை.

அவருடைய விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியாக இருந்து யாரையும் வழிநடத்துவதாக இருக்கிறது. ஏழைகளுக்குச் செய்யும் சேவையும் இறைவனை அடைவதற்கான முக்கிய வழிபாடுதான் என்று அடிக்கடி சொல்லிவந்த அவர் இறுதி வரை அப்படியே வாழ்ந்துகாட்டினார்!

(முற்றும்…)

கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert