எட்டாவது வருடமாக தியான அன்பர்களை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லும் சத்குரு அவர்கள் இவ்வருடம் 30 பேர் கொண்ட ஒரு சிறு குழுவுடன் மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்று கொண்டிருக்கிறார். இதோ அவர் தொட்டிருக்கும் மலைமுகட்டுப் பாதையிலிருந்து நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டினை எழுதியிருக்கிறார். அத்துடன் கைலாயமே உனை என் வெறுமையினால் தென்னகம் கொண்டு வருகிறேன் என்று கவியும் சொல்கிறார்... படித்து மகிழுங்கள்.

மறுபடியும் காத்மாண்டு வந்திருக்கிறோம், நேபாளத்திற்கு வருவது, என்றும் ஒரு சுகமான அனுபவமே. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் நெடுங்காலம் முன்பாகவே நிகழ்ந்திருக்கவேண்டிய ஒன்று, பிரதமர் நரேந்திர மோதி முழுவீச்சில், ஒயிலாக நேபாளத்திற்கு வருகைதந்ததில் நிகழத் துவங்கியுள்ளது.

நேபாளம், தனித்துவமான ஒரு தேசம். உலகம் முழுவதிலும் அதற்கு நிகரில்லை. கலாச்சாரரீதியாக, படையெடுப்புகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக அரசியலளவில் குளறுபடியான நிலையில் இருந்துள்ளது. அரசியல் சூழ்நிலையில் ஸ்திரமும், இந்தியாவிடமிருந்து தகுந்த உதவியும் சேர்ந்தால், நேபாளம் தன் தனித்தன்மையான கலாச்சார அடையாளத்தைத் தொலைக்காமல் பொருளாதாரத்தில் தழைத்தோங்கும். கலாச்சார அளவில், காலத்தில் சற்று பின்நோக்கி வந்தால் இந்தியாவும் பலன்பெறும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இரண்டு நாட்களில் சிமிகோட்டிலிருந்து ஹில்சாவிற்குச் செல்லும் மலைப்பாதையை அடைவோம். அந்த 8 நாட்கள் சொர்க்கமும் நரகமுமாக இருக்கும் - கண்களுக்கு சொர்க்கம், கால்களுக்கு நரகம். குறிப்பாக கொஞ்சம் காயப்பட்டு என் கால்கள் வலியில் இருக்கும்நிலையில், நன்றாக இல்லாத கால்களை இப்பாதை மென்மையாக நடத்தாது. ஆனால் சொக்கவைக்கும் கைலாயத்தின் ஈர்ப்பு, எல்லா வலிகளையும் மூச்சிறைப்பையும் கடந்துவிடும்.

கைலாயமே

பனிபோல நான் வந்து போகிறேன்
பனிபோல உன் காலடியில் உருகுகிறேன்
பனிபோல உன்னை அலங்கரிக்கிறேன்
நான் உன் காலணியும் மகுடமும்கூட
எனக்கு நீ எத்துணையோ,
அப்படியே உனக்கு நானிருக்க முயல்கின்றேன்.

என் நுரையீரல் இந்த உயிர்சுவாசத்தைக்
கொள்ளும்வரை,
பூமித்தாய் அரவணைக்கும் அழுத்தத்தை
என் கால்கள் தாங்கும்வரை
உன்னிடம் திரும்பத்திரும்ப வருவது மட்டுமல்ல..

என் தென்னாட்டுப் பிறப்பை
பத்துத்தலை இலங்கை அரசனின்
அகங்காரமெனத் தவறாக நினைத்திடாதே,

என் இன்மையால் மட்டுமே உனை ஏந்தி,
விந்தியத்தொடருக்குக் கீழே
பெயர்த்துச்செல்வேன்.
இம்மென்மையான மண்ணின் தொன்மையான மக்கள்,
மிக நீண்ட காலமாய் உனக்காக
ஏங்கியிருக்கிறார்கள். இவர்களின்
அசையா பக்திகொண்ட இதயங்கள்
ஒரே உணர்வுடன் துடிக்கின்றன,
அது உனக்காக, உனக்காக, உனக்காகவே!

Love & Grace