நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு ஆதியோகி பிரதிஷ்டை. சத்குரு நினைத்திருந்தால், ஆதியோகி பிரதிஷ்டையை, தனிப்பட்ட முறையில்கூட செய்திருக்க முடியும். தன்னுடைய அளவற்ற கருணையினால், நாம் அனைவரும் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை நமக்கு வழங்கி இருக்கிறார்.

'இப்போ நான் இருக்கற நிலைமைல கலந்துக்க வழியே இல்லை. ஆனா, சத்குருவே என்னை வரச்சொல்ற மாதிரி உணர முடியுது. எப்படியாவது கண்டிப்பாக பிரதிஷ்டைல கலந்துக்குவேன். இதை தவறவிட மாட்டேன்' இப்படி அவர் சொன்னதும் எனக்கு அழுகைய நிறுத்தவே முடியல

தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள மக்களை ஆதியோகி பிரதிஷ்டைக்கு அழைக்கும் தன்னார்வத் தொண்டில் பல தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

கல்லும் கவிபாடும் என நம் கோவில்களில் பிரம்மாண்ட பாறைகளை இசைத்தூண்களாக உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். இன்றளவும் அது நம் கலாச்சாரத்தின் உயர்வை பறைசாற்றி உயர்ந்து நின்றுகொண்டிருக்கிறது.

35 ஆண்டுகால அமைதி புரட்சியில் மலர்ந்த ஈஷாவின் தூண்களான தன்னார்வத் தொண்டர்கள், இன்று பேசும் தூண்களாக, யோக வீரர்களாக எழுந்து நிற்கிறார்கள். ஆதியோகி ஆலயத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவர்கள், தாங்கள் செய்துவரும் எளிய தன்னார்வத் தொண்டில் தங்களுக்கு கிடைக்கும் ஆழமான, வேடிக்கையான, தீவிரமான அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்..

சோனாலி தன் அனுபவத்தை கூறும்போது... “மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள மக்களை அழைக்க, தன்னார்வத்துடன் ஈடுபட்டுள்ள யோக வீரர்களின் ஆர்வம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 50 பேருக்கு மேல் தொலைபேசியில் அழைத்து, பேசி வருகிறார்கள். ஆனால், கொஞ்சமும் களைப்படைந்தவர்களாக தென்படவில்லை.

நம் தன்னார்வத் தொண்டர்கள் அழைத்தவர்களில் தியான அன்பர்கள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். சில எதிர்பாராத பதில்களும்கூட அவர்களுக்கு அதில் கிடைத்திருக்கும். ஆனாலும், பேசிக்கொண்டே இருக்கும் அவர்களது கண்களில் அர்ப்பணிப்பும், சில நேரங்களில் ஆனந்த கண்ணீரும், நிறைந்து இருப்பதை பார்க்கிறேன்,” என்ற சோனாலி, தொடர்ந்து ஒரு தன்னார்வத் தொண்டரின் ஆனந்த கண்ணீருக்கான காரணத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“வரிசையாக ஒவ்வொரு எண்ணாக பேசிக்கொண்டே வரும்போது, படுத்தபடுக்கையில் இருக்கும் 96 வயதான பெரியவர் ஒருவருடன் பேசும் வாய்ப்பு அமைந்தது. ஆதியோகி பிரதிஷ்டை பற்றி கேட்டதும், 'இப்போ நான் இருக்கற நிலைமைல கலந்துக்க வழியே இல்லை. ஆனா, சத்குருவே என்னை வரச்சொல்ற மாதிரி உணர முடியுது. எப்படியாவது கண்டிப்பாக பிரதிஷ்டைல கலந்துக்குவேன். இதை தவறவிட மாட்டேன்' இப்படி அவர் சொன்னதும் எனக்கு அழுகைய நிறுத்தவே முடியல," -ஒரு அழைப்பாளர்.

“எனக்கு சளி இருமலா இருந்ததால நாம பேசனுமானு யோசிச்சுகிட்டு தயக்கத்தோடதான் பேச ஆரம்பிச்சேன். ஆனா, ஆச்சரியம் என்னன்னா, ஆதியோகி பிரதிஷ்டை பத்தி ஆரம்பிச்சு, பேசி முடிக்கற வரைக்கும் ஒரு இருமல்கூட வரல,” -மாரியப்பன்

“நான் ஃபோன்ல பேசுற ஒவ்வொரு நிமிஷமும், ஒரு மிகப் பெரிய விஷயத்துல ஈடுபட்டு இருக்குற உணர்வு நிறைஞ்சு இருக்கு,” என கண்கள் நிறைக்க பகிர்கிறார் பிரேமா.

“நான் பேச துவங்கினதுக்கு அப்புறம், என்னோட நமஸ்காரம் இன்னும் கனிவா மாறி இருக்கு. என்னுடைய குரல் மிருதுவாகி மென்மையா இருக்கறத உணர முடியுது. ஒரு சில நாள்லயே நான் வாழும் விதமே மாறி இருக்கறதா உணர்றேன்," -இன்னொரு அழைப்பாளர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“ஆதியோகி பிரதிஷ்டை, மஹாசிவராத்திரி, சத்குரு... இப்படி நாள் முழுக்க பேசிக்கிட்டே இருக்கறது, எனக்குள்ள ஒரு அற்புதமான இடத்த உருவாக்கி இருக்கு,” -வித்யா ஷில்பா.

மாயம் செய்த அழைப்பு

ஒரு அக்காவோட பேசும்போது, அவங்க குரல் ரொம்ப சோகமா, உற்சாகம் இல்லாம இருந்தது. சில மாசத்துக்கு முன்னாடி அவங்க கணவர் தவறிட்டதா சொன்னாங்க. அவங்க கணவருக்கு என்ன ஆச்சுனு பேசினதுக்கு அப்புறமா வேற என்ன சொல்றதுன்னே தெரியல. அப்போ, எனக்கே ஆச்சரியமா, "நான் இந்த சூழ்நிலைய விட்டு வெளிய வரணும்னுதான் நீங்க என்கூட பேசி இருப்பீங்க போல இருக்கு. நிச்சயமா நான் வரேன்னு," சொன்னாங்க.

-சரண்யா ஸ்ரீ (40 நாள் யோகவீரா சாதகர்)

வேலை செய்யுமா என்று நினைத்தபோது...

சிவகாசி பகுதியை சேர்ந்தவங்களோட பேசும் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. நிறைய பேர் பிரதிஷ்டைக்கு வர ஆர்வமா இருக்குனு சொன்னாங்க. ஆனா யாருமே பஸ்ல சீட்டு வேணும்னு உறுதி செய்யல. சரின்னு எதுக்கும் இருக்கட்டும்னு அவங்க பஸ் ஒருங்கிணைப்பாளர் ஃபோன் நம்பர கொடுத்து வச்சேன்.

நாம சரியா பேசலையோனு ஏமாற்றமா இருந்துச்சு. நம்ம வாழ்நாள்ல இப்படி பெரிய அளவுல ஆன்மீக எழுச்சியின் துவக்கம் நடக்குதுங்கற விஷயத்த நாம சரியா சொன்னோமான்னு தெரியலயேன்னு அப்படியே உக்காந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் மறுபடியும் பேச ஆரம்பிக்கலாம்னு நெனைச்சப்போ, ஒரு ‘கால்’ வந்தது.

சிவகாசி பஸ் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதான் போசினார்., அவர் குரலே உற்சாகமா இருந்தது. நெறய பேர் பிரதிஷ்டைக்கு வர முன்பதிவு செய்யறதாவும், ஒரு பஸ் நெறஞ்சு, அடுத்த பஸ் புக் பண்ண போறதாவும், எல்லோருக்கும் ‘கால்’ செஞ்சு பேசியதுக்கு நன்றின்னும் சொன்னார். அப்போதான் எனக்கு நாம ஒரு கருவி, நாம நம்ம கடமைய மட்டும் செய்தா போதும்னு பளிச்சுனு புரிஞ்சுது.

-ஜெயலட்சுமி (40 நாள் யோகவீரா சாதகர்)

வேடிக்கை

சரண்யா ஸ்ரீ: நமஸ்காரம் அண்ணா, நான் ஈஷால இருந்து பேசறேன்.

எதிர்முனையில்: விசாவா..? எதுக்கு..? எனக்கு விசா வேண்டாம் (சிரிப்பு)

இப்படி ஆரம்பிச்சவர், ஈஷா பத்தி, மஹாசிவராத்திரி பத்தி, ஆதியோகி பத்தி எல்லாம் கேட்டதுக்கு அப்புறம் கடைசியில வரேன்னு சொன்னார்...

விசா எல்லாம் தேவை இல்லை... கண்டிப்பா வாங்க அண்ணான்னு சொல்லி முடிச்சேன்.

மரபை மீறலாமா

“ஒவ்வொரு வருஷமும், மஹாசிவராத்திரி அன்னிக்கு 120 கிலோ மீட்டர் நடந்து கோயிலுக்கு போறது எங்க வழக்கம். அதனால வர்றது கஷ்டம்.” இது மீனாட்சிக்கு கிடைத்த பதில்.

அதுக்கு மீனாட்சி என்ன சொன்னாங்க கேளுங்க... "சரி அண்ணா பரவால்ல, நீங்க இது பத்தின விவரம் மட்டும் கேட்டுக்க முடியுமா... டிவில கூட நேரடி ஒளிபரப்பு இருக்கு, வீட்ல இருக்கறவங்க யாருக்காவது நீங்க சொல்ல முடிஞ்சா நல்லா இருக்கும்," அப்டீன்னு சொல்லி இருக்காங்க. சரின்னு கேட்டார். ஆதியோகி பிரதிஷ்டை பத்தியும், சத்குரு எல்லோருமே இதுல கலந்துக்க வழங்கி இருக்கும் வாய்ப்பு பத்தியும் கேட்ட உடனே, ரொம்ப உற்சாகத்தோட, அவர் தன் மனைவியையும் அழைச்சுட்டு வர்றதா சொன்னார்.

பாஸ்போர்ட் தயார்

“அடுத்த மாசம் நான் வெளிநாடு போறேன். அதனால வர முடியாது” பிரேம் தாஸ் இப்படி சொன்னார். என்ன அண்ணா, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள்ல இருந்து 2000 பேருக்கு மேல இங்க, நம்ம நாட்டுக்கு, மஹாசிவரத்திரிக்கு ஆதியோகி பிரதிஷ்டைல கலந்துக்க வர்றாங்க. நீங்க இப்படி சொல்றீங்களே அண்ணானு கேட்டேன். சில வினாடி அமைதியா இருந்தார். எவ்ளோ நாள் நடக்குதுன்னு விசாரிச்சவர், தன்னோட பயண தேதியை மாத்தி அமைச்சுகிட்டு கண்டிப்பா வர்றேன்னு சொன்னார்.

ஆம்புலன்சுக்கு ஒரு அழைப்பு

“நமஸ்காரம், ஈஷா யோக மையத்துல இருந்து பேசறேன் அண்ணா”

அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல.. இப்போ அவங்கள ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு இருக்கோம்னு எதிர்முனைல அவசரமா பேசினார் ஒருவர். தொந்தரவுக்கு மன்னிக்கணும் சொல்லி ஃபோன வைக்க போனப்போ, அவரே ஈஷால இருந்துன்னு சொன்னீங்களே என்ன விஷயம்னு கேட்டார். எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல. ஆனாலும், சுருக்கமா மஹாசிவராத்திரி அன்னைக்கு நடக்கற ஆதியோகி பிரதிஷ்டை பத்தி சொன்னேன். உடனே பஸ் ஒருங்கிணைப்பாளரோட நம்பர மட்டும் கேட்டு குறிச்சுகிட்டார். என்னால நம்பவே முடியல... ஆனா நடக்குது.

பல்வேறு கலாச்சார, வாழ்க்கை பின்ணனியில் இருந்து வந்தாலும், ஒரு குடும்ப திருவிழாவிற்கு இணைந்துள்ள சொந்தங்களாகவே ஈஷா மஹாசிவராத்திரி முன்னேற்பாடுகளில் தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் சில வேடிக்கைகளும் சேர்ந்தே நடக்கிறது.

உதாரணமாக, இங்கே அனுபவங்களை பகிர்ந்துள்ள தன்னார்வத் தொண்டர்களை சந்தித்து, அவர்களது அனுபவங்களை கேட்டபோது, ஒருசிலரின் பெயர்களைக்கூட சரியாய் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவர்களது ஈடுபாடும் அர்ப்பணிப்புணர்வும் அவர்களை நம்மால் புறக்கணிக்க முடியாதவர்களாய் மாற்றி இருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு:

ஆதியோகியைப் பற்றிய செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் இந்தப் பணியில் நீங்களும் ஈடுபட விரும்பினால் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். தன்னார்வத் தொண்டர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.