ஈஷாவில் கொண்டாடப்பட்ட 21வது மஹாசிவராத்திரியின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் கூறும் சத்குரு, வரக்கூடிய நாட்களில் நாம் அற்புதமான மனிதர்களாக மாற ஒரு சிறிய செயல்முறையையும் பரிந்துரைக்கிறார்.

இந்த மஹாசிவராத்திரி, ஈஷா யோகா மையத்தில் நிகழும் 21 வது மஹாசிவராத்திரி. யோக கணக்கில் 21 என்பது மிக முக்கியமான ஒரு எண். ஏனென்றால் படைப்பில் இது 84 வது சுற்றுப் படைப்பாக கருதப்படுகிறது. மனித உடல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இயல்பைப் பார்த்து 84 ஆசனங்களை நாம் வடிவமைத்துள்ளோம். 84ன் முக்கியத்துவம், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் - இவற்றிற்கிடையே உள்ள உறவோடு தொடர்புடையது. நம் உடலுக்கும், பூமி, சூரியன், சந்திரன் இவற்றுக்கும் இடையே உள்ள உறவு மிகவும் முக்கியமானது. ஒருவர் 84 வயதை பூர்த்தி செய்தால், அவருடைய சக்தி உடல் ஒரு வித பக்குவத்தை அடைகிறது. இன்னொரு பூத உடலை உடனே தேடும் நாட்டம் அதற்கு குறைகிறது. எனவே 84 வயது என்பது ஒரு முழு வாழ்க்கைக்கால அளவு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

84 என்பது நான்கு பகுதிகளாக ஆனது. இவையே வாழ்வின் நான்கு பாதங்கள். நாம் இப்பொழுது முதல் பாதத்தை நிறைவு செய்துள்ளோம் - அதாவது 21 ஆண்டு கால கொண்டாட்டங்கள். 21 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் மஹாசிவராத்திரியானது, ஈஷா யோகா மையத்தில் ஒரு சின்ன குடிலில் 200 நபர்களோடு சிறப்பாக நிகழ்ந்தது. அற்புதமான பல விஷயங்கள் அன்றிரவு நடந்தது. அந்தக் குடிலில் துவங்கி இன்றைய மஹாசிவராத்திரி ஒரு மாபெரும் நிகழ்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும், அந்த மகாதேவனின் அருளும், வெள்ளியங்கிரி அடிவாரத்தில், மஹாசிவராத்திரியை ஒரு மாபெரும் நிகழ்வாக மாற்றிவிட்டது. இதற்கென பெரும் முயற்சி செய்த பலரும் பெருந்திரளான இந்த கூட்டம் விழித்திருப்பதற்கு மட்டுமல்லாது, அவர்கள் உள்ளே ஒரு விழிப்பு மலரவும் முயற்சி செய்வார்கள் என நம்புகிறேன். இந்த இரவு ஒரு மிகப் பெரிய சாத்தியம்.

இந்த நாளில் ஈஷா யோகா மையத்தின் நுழைவாயிலில் ஆதியோகி சிலையை நிறுவியது நம் பாக்கியம். வெறும் 48 நாட்களில் நம் சிற்பிகள் குழு 21 அடி உயர ஆதியோகி சிலையை வடித்திருக்கிறார்கள். நம்ப முடியாத ஒரு சாதனை இது. அவர்களும் தூங்கவில்லை, நம்மில் பலரையும் இரவு பகலான அவர்களின் வேலையால் தூங்க விடவில்லை. இந்த இரவில் அற்புதமான பல கலைஞர்கள், இங்கிருந்த மக்கள் கூட்டத்தை தங்கள் இசையால் உயிர்ப்போடு, துள்ளலாக வைத்திருந்தார்கள். ஜிலா கான் தனது இதயத்தையே ஷம்போவுக்காக உருக்கிக் கொடுத்தார். பார்த்திவ் கோஹில் கூட்டத்தை இரவு முழுவதும் நடனமாட செய்தார். உண்மையில் இது ஒரு மேன்மையான இரவாக இருந்தது.

விழிப்புணர்வு நோக்கி நகர இந்த இரவு ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும். எவ்வளவு புத்திசாலியாக, திறமைசாலியாக, பலசாலியாக நாம் இருந்தாலும் அருள் என்ற ஒன்று நம் வாழ்வில் இல்லாவிட்டால் வெற்றி என்ற ஒன்று இல்லை. உண்மையான வெற்றி, அருள் இருந்தால் மட்டுமே கிட்டும். இல்லையென்றால் உங்களிடம் எல்லா பாகமும் இருக்கும், ஆனால் அனைத்தும் சேர்ந்து இயங்குவதற்கான வழவழப்புத் தன்மை இருக்காது. வழவழப்பற்று உராய்வுடன் இருக்கும் எந்த இயந்திரமும் வேலை செய்யாது. வெள்ளியங்கிரி மலையின், தியானலிங்கத்தின், மகாதேவனின் அளப்பரிய அருள், உங்களுள் இதை போஷித்து, உங்களோடு எப்பொழுதும் வைத்திருக்க அனுமதிக்கும்.

உங்களால் வாழ்வில் எது செய்ய முடியும், எது முடியாது என்பது நமக்குத் தெரியாது. உலகின் பெரும் பணக்காரராக ஆவீர்களா, உலக அழகியாக ஆவீர்களா, இமயமலை ஏறுவீர்களா அல்லது ஹுசைன் போல்ட் உடன் பந்தயத்தில் ஓடுவீர்களா என்பது தெரியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதமான ஒரு மனிதாரக ஆவதற்கு முயற்சி செய்ய முடியும். உங்களுக்கு அதை மறுக்க யாராலும் இயலாது. இந்த மஹாசிவராத்திரியின் ஒரு அம்சமாக, நீங்கள் ஒரு எளிமையான செயல்முறை செய்ய வேண்டும். ஒருவரை அற்புதமான மனிதராக உருவாக்கும் மூன்று விஷயங்கள் என்று நீங்கள் கருதுவதை ஒரு தாளில் எழுதுங்கள். அதனை உங்கள் வாழ்க்கையின் உண்மை நிலையாக்குங்கள். நான் நினைப்பதை அல்ல, நீங்கள் உயர்வாக நினைப்பதை எழுதி செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில், நீங்கள் விரும்புவதையே நீங்கள் செய்யவில்லை என்றால் இது ஒரு வீணாக்கப்பட்ட வாழ்க்கை. அந்த மூன்று விஷயங்களை உங்கள் வாழ்வில் உண்மையாக்குங்கள். மாறிய உங்களை அடுத்த வருடம் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

Love & Grace