Question: மஹாசமாதி என்றால் என்ன? யோகிகள் மஹாசமாதியின் போது தங்கள் உடலை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்று பல கதைகள் கேட்டிருக்கிறேன். உண்மையா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பல யோகிகள், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன் உடலை விட்டுச் செல்வதாக முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். அதே போல், அவர்கள் குறிப்பிட்ட நாளில், அந்த நேரத்தில், மற்றவர்கள் முன்னிலையில் உட்கார்ந்த நிலையிலேயே உடலை விட்டுச் சென்றுவிடுவார்கள். இது போல், நினைத்த மாத்திரத்தில், உடலைக் காயப்படுத்தாமல் வெளியேறுவது என்பது, சாதாரண விஷயம் அல்ல.

அப்படியென்றால், அவர்கள் உட்கார்ந்தபடியே இறந்துபோகிறார்களா? அதைத்தான் மகாசமாதி என்கிறோமோ?

உங்கள் உடலோடு நீங்கள் எங்கு பிணைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருந்தால், நீங்களும் உங்கள் விருப்பம் போல் அந்த இணைப்பைத் துண்டித்து விடலாம்.

அவர்கள் இறப்பதில்லை. அவர்கள் உடலைத் துறந்து சென்று விடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன் உடலை உகுத்துவிட்டு செல்லப் போவதாக முன்பே அறிவித்திருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் இதைப் பார்க்கக் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில் அவர் உட்கார்ந்தவாறு சொன்னார், “நான் இப்போது போகிறேன்” என்று. சொன்ன உடனேயே, அவர் அப்படியே போய்விட்டார். அவரை யாரும் கத்தியால் குத்தவில்லை, அவர் விஷமேதும் குடிக்கவில்லை, சும்மா வெறுமனே அவ்வாறே! உட்கார்ந்திருந்த நிலையிலேயே அவர் தன் உடலை நீத்துச் சென்றுவிட்டார்.

உடலில் அணிந்திருக்கும் ஆடைகளைக் களைவதுபோல், அவர் தம் உடலையே உதறிவிட்டார். உங்கள் உடலோடு நீங்கள் எங்கு பிணைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருந்தால், நீங்களும் உங்கள் விருப்பம் போல் அந்த இணைப்பைத் துண்டித்து விடலாம். இதை நீங்கள் செவிவழிச் செய்தியாக, ஒரு கதையாகத்தான் கேட்டிருப்பீர்கள். உங்கள் உயிர் உடலுடன் எங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் இதை தெரிந்து கொள்ள, யோகாவில் ஒரு தனி பகுதியே இருக்கிறது. இந்த இடம் வரையில் எப்படி வந்தீர்கள், உங்கள் உடலோடு நீங்கள் எங்கு பிணைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் சில யோக வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்களே அறிந்து கொள்ள முடியும். இந்தப் பிணைப்பு எங்கே இருக்கிறது என்று தெரிந்தால், பக்குவமாக உங்களை நீங்களே இந்த உடலிலிருந்து கழற்றிக் கொள்ள முடியும். யாரும் உங்களை வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கத் தேவையில்லை. நீங்கள் அருள்நிறைந்த மனிதராக இருக்கும் பட்சத்தில், விரும்பிய நேரத்தில் போகலாம்.

எங்கே போவது?

மனதில் பதினொரு நிலையிலான பரிமாணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் ஒரே இடத்திலேயே இருக்கின்றன.

“எங்கே” என்று கேட்கும்போது நீங்கள் எப்போதும், தூரம், சென்றடையும் இடம் போன்றவற்றைப் பற்றியே பேசுகிறீர்கள். நிதர்சனத்தில் 'இங்கு', 'அங்கு' என்று எதுவும் இல்லை. 'அப்போது', 'இப்போது' என்றும் கூட எதுவும் கிடையாது. இவை அனைத்தும் உங்களுடைய மேல் மனத்தின் உருவாக்கம். மனதின் அந்த எல்லைகளைக் கடந்துவிட்டால், எல்லாமே, இங்கே இப்போது என்று ஆகிவிடும். 'இந்த இடத்திலிருந்து அந்த இடத்திற்குப் போவது' என்பதற்கு அர்த்தம் இருக்காது. இந்த இடமே எல்லாம். இது சித்தாந்தம் அல்ல. நவீன விஞ்ஞானம் இதை கோட்பாடுகளாய் இன்று வழங்கிவிட்டது. 'எல்லாம் இங்கேயே இருக்கிறது, ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் இருக்கிறது' என்கிறது.

மனதில் பதினொரு நிலையிலான பரிமாணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமாய் ஒரே இடத்திலேயே இருக்கின்றன. எனவே “எங்கே” என்பது தூரத்துடன் தொடர்புடையது அல்ல. நீங்கள் உடல் சார்ந்தது என்பதிலிருந்து விலகிப் போகிறீர்கள், அவ்வளவுதான். ஐம்புலன்களின் உணர்தல் எல்லைக்குள் இருக்க மாட்டீர்கள். மனிதர்களின் கண்களுக்கு புலப்பட மாட்டீர்கள். இதனால் நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது. அங்கேயே இருக்கிறீர்கள், ஆனால் வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து போய் விட்டீர்கள். அதே உயிர்சக்தி ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கு நகர்கிறது. உடலளவிலிருந்து இன்னும் சற்றே நுட்பமான நிலைக்குப் போகிறது. இங்கேயே இருக்கிறீர்கள், ஆனால் உடல்சார்ந்த உருவத்தில் அல்ல. தன்னில் இருந்த வளர்ந்த உடலை மட்டும் பூமி மீண்டும் எடுத்துக் கொள்ளும்.

ஒருவர் இறந்துவிட்டால் 'அவர் இல்லை' என்பீர்கள். அது உண்மை அல்ல. அவர் இருக்கிறார், ஆனால் நீங்கள் உணரும் வகையில் அவர் இல்லை, அவ்வளவுதான். தனக்குள் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் முற்றிலுமாய் கரைத்துவிட்டு, உடலைத் துறந்தால் மட்டுமே, 'அவர் இல்லை'. அதுதான் ஆட்டத்தின் முடிவு.

ஆனால் ஒருவர் ஏன் ஆட்டத்தை முடிக்க விரும்ப வேண்டும்? அனைத்தையும் பார்த்தாகிவிட்டது, இது போதும் என்று அவர் நினைப்பதால். ஒவ்வொருவரும் பல பிறவிகள் வாழ்ந்திருப்போம். எல்லாப் பிறவிகளின் ஞாபகங்களும் நம் ஆழ்மனத்தில் பதிந்திருக்கிறது. என்ன, தற்போதைய விழிப்புணர்வில் உங்களுக்கு அவை எட்டுவதில்லை. பூட்டி வைக்கப்பட்டது போல், அதை நீங்கள் நெருங்க முடியா வண்ணம் அவை அடைபட்டு இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ஞாபகசக்தி, இந்தப் பிறவியில் பிறந்ததிலிருந்து இன்று வரை மட்டுமே. எனவே, "நான் ஏன் ஆட்டத்தை நிறுத்த வேண்டும்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு வேளை இதே போல் நூறு முறை செய்திருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன், இறந்தும் இருக்கிறேன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால், எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்திருந்தால், மீண்டும் ஒருமுறை இதே அர்த்தமற்ற வாழ்க்கை வாழ விரும்பமாட்டீர்கள் அல்லவா? இந்த வாழ்க்கையைத் தாண்டி வேறு என்ன இருக்கிறது என்று பார்க்க விரும்புவீர்கள் தானே?

ஒருவர் விழிப்புணர்வுடன் தன் உடலைத் துறந்தால், அவர் உண்மையிலேயே இல்லை என்று பொருள். எந்தப் பரிமாணத்திலும் அவர் இல்லை. இதுதான் முக்தி. ஆட்டம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.