மஹாகும்பமேளா உஜ்ஜெயினில் நடக்கவிருக்க, அங்குள்ள மஹாகாலேஷ்வர் கோயிலின் முக்கியத்துவம் குறித்தும், மோட்சத்தை நாடுவோருக்கு சிவனின் வடிவமான மஹாகாலா எப்படி உதவுகிறார் என்றும் விளக்குவதோடு, காலம், பிரபஞ்சத்தின் பொருள்தன்மை, வெளி ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்பையும் இந்த வார ஸ்பாட்டில் சத்குரு தெளிவுபடுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களில் உஜ்ஜெயினில் துவங்கவிருக்கும் பிரம்மாண்டமான சிம்ஹஸ்த கும்பமேளா, மஹாகாலேஷ்வர் கோயிலுடன் இணைபிரியா தொடர்புடையது. கதைகளில் சொல்வது, தீவிரமான சிவபக்தரான மன்னர் சந்திரசேனரால் இக்கோயில் கட்டப்பட்டது. சந்திரசேனரின் நல்லாட்சியின் கீழ், உஜ்ஜெயின் அல்லது அப்போது அவந்திகா என அழைக்கப்பட்ட நகரம், ஞானம், பக்தி மற்றும் ஆன்மீகத்தின் களஞ்சியமாகத் திகழ்ந்தது. அந்நகரம் கிட்டத்தட்ட இரண்டாவது காசியைப் போல இருந்தது. எப்போதும் போல, இது பிடிக்காதவர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்நகரத்தையும் அதன் கலாச்சாரத்தையும் அழிக்கவேண்டுமென படையெடுத்து வந்தார்கள்.

சாதாரணமாக ஒரு அரசரின் வேலை, தன் இராஜ்ஜியத்தை நிர்வகிப்பதும், அதன் எல்லைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்துவதுமாகத் தான் இருக்கும். சந்திரசேனரோ, தன் பூமியிலிருந்து ஈட்டிய வருவாய் முழுவதையும் ஞானத்தைப் பரப்புவதற்கும் ஆன்மீக செயமுறையைப் பரிமாறுவதற்குமே பயன்படுத்தினார். அதனால் அவரிடம் போர்புரிய பெரிய சேனை எதுவுமில்லை. அதனால் படையெடுத்து வரும் எதிரிகளை ஜெயிக்க முயற்சிப்பது தோல்வியைத் தான் தரும் என்று அவருக்கு மூன்கூட்டியே முடிவாகத் தெரியும். அதனால் அவர் சிவனிடம் வேண்டினார். சிவன் மஹாகாலா வடிவத்தில் தோன்றி எதிரிகளை உள்வாங்கிக்கொண்டார். சந்திரசேனருக்கு நிகழவிருந்த பேரிடரிலிருந்து காப்பாற்றி, அவர்தன் பணியைத் தொடரச்செய்தார்.

மஹாகாலா என்பது சிவனுடைய - அல்லது எது இல்லையோ அதனுடைய - ஒரு பரிமாணம். காலா என்ற வார்த்தை, காலம், இருள், வெறுமை, இம்மூன்றையும் குறிக்கும். இவற்றை ஏன் ஒரே வார்த்தையால் விவரிக்கிறார்கள் என்று பார்ப்போம். இப்போது காலம் குறித்த உங்களுடைய புரிதலும் அனுபவமும், அது பொருள்தன்மையின் பரிமாணத்தில் பிரதிபலிக்கும் விதத்தின் எல்லைக்குள் இருக்கிறது. பொருள்தன்மையில், ஒரு அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் சுழற்சியான தன்மையில் இயங்குபவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பூமி ஒருமுறை சுழன்றால் ஒரு நாள் என்கிறோம். சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றிவந்தால் ஒரு மாதம் என்கிறோம். பூமி சூரியனை சுற்றிவந்தால் ஒரு வருடம் என்கிறோம். அதேபோல் தூக்கம், விழிப்பு, உண்பது, செரிப்பது உட்பட பிரபஞ்சத்தின் பிற தன்மைகளும் சுழற்சியாகத்தான் நிகழ்கின்றன. சுழற்சிகள் இல்லையென்றால் பொருள்தன்மை இராது, காலத்தை உங்களால் உணரவும் இயலாது. பொருள்தன்மையின் மூலம் பிரதிபலிப்பது காலத்தின் ஒரு அம்சம்.

பொருள்தன்மை என்பது அதைவிடப் பெரிய பொருளற்ற தன்மையின் மடியில் நிகழ்கிறது, இதனை ஆங்கிலத்தில் Space என்று சொல்கிறார்கள். நாம் இங்கே காலா அல்லது இருள் என்று சொல்கிறோம். இடம் அல்லது வெளியை நாம் இருள் என்று சொல்வதன் காரணம், வெற்றுவெளி இருட்டாக இருக்கிறது. ஒளியை உணர நீங்கள் ஒளியின் மூலத்தைக் காணவேண்டும், அல்லது அந்த ஒளியை பிரதிபலிக்கும் ஒரு பொருளைக் காணவேண்டும். உதாரணமாக சூரியன் ஒளியின் மூலமாக உள்ளது, சந்திரன் அந்த ஒளியை பிரதிபலிக்கிறது. இவற்றுக்கிடையே இருள் உள்ளது. ஒளி இருளின் ஊடே செல்கிறது, இல்லாவிட்டால் அது சந்திரனின்மேல் விழாது, ஆனால் நம்மால் அதனைக் காணமுடியாது. எதை உங்களால் பார்க்கமுடியாதோ, அது உங்களுக்கு இருளாக இருக்கிறது. அதனால்தான் வெளியை காலா அல்லது இருள் என்று குறிக்கிறோம்.

இருள், காலம் மற்றும் வெளியைக் குறிக்க, நாம் ஒரே வார்த்தையை பயன்படுத்தக் காரணம், மூன்றும் ஒன்றுதான். வெளியை உணரமுடிவது, அதாவது இரண்டு புள்ளிகளையும், அவற்றுக்கு இடையே உள்ள தூரத்தை உணரமுடிவது காலம் என்பது இருப்பதால்தான். தூரம் என்பது இருப்பதால் காலம் வரவில்லை. காலம் என்பது இருப்பதால் தான் தூரம் மற்றும் வெளிக்கான சாத்தியம் எழுகிறது. காலம் என்பது இல்லையென்றால் ஒருபுள்ளி தான் இருக்கமுடியும், பொருள்தன்மையில் இது சாத்தியமில்லை. பொருட்கள் துருவங்களாக மட்டுமே இருக்கமுடியும். காலம் இல்லாவிட்டால், வெளி இருக்காது, இருவேறு பொருட்கள் இருக்காது. எதுவுமே இருக்கமுடியாது.

பொருள்தன்மை இருப்பதே சுழற்சியான இயக்கத்தால் தான். ஆன்மீகத் தேடுதல் முழுவதும் முக்தி அல்லது மோட்சத்தை அடைவது, ஆன்மீகம் என்றால் நீங்கள் பொருள்தன்மையைக் கடக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். வேறு விதமாகச் சொன்னால், பிரபஞ்சத்தின் சுழற்சியான தன்மையையும், திரும்பத்திரும்ப அதையே எதிர்கொள்ளச்செய்யும் உயிரின் தன்மையையும் தாண்டிச் செல்ல விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். அதனால் ஆன்மீகம் என்பது கட்டாயங்களைக் கடந்துபோவது என்று அர்த்தமாகிறது. இது கட்டாயங்களிலிருந்து விழிப்புணர்வை நோக்கிய பயணம்.

நிர்பந்தநிலையிலிருந்து விழிப்புணர்வுநிலைக்கு சென்றுவிட்டால், பொருள்தன்மையின் சுழற்சியான இயக்கமாக இருக்கும் காலத்தின் எல்லைக்குட்பட்ட அனுபவத்திலிருந்து பொருள்தன்மையின் கட்டுக்களைக் கடந்து காலத்தை உணரத்துவங்குவீர்கள். அல்லது காலத்தை மஹாகாலாவாக உங்கள் அனுபவத்தில் உணர்வீர்கள். மஹாகாலாவின் மடியில்தான் படைப்பு நிகழ்ந்துள்ளது. மிகப்பெரிய பால்வெளி மண்டலங்கள் கூட, வெற்றுவெளியின் அகண்ட பரப்பில் சிறு புள்ளிகள் மட்டுமே. இந்த வெறுமையே மஹாகாலா.

இந்த பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில், 99 சதவிகிதத்திற்கு மேல் இருப்பது வெறுமை. படைப்பின் எல்லையுள்ள சிறுதுளிகளோடு சம்பந்தப்பட்டு இருக்கும்வரை, காலத்தை அதன் சுழற்சியான தன்மையாகத்தான் உணர்கிறீர்கள், அதைத்தான் சம்சாரா என்கிறோம். சம்சாரத்தைக் கடந்துவிட்டால், நீங்கள் வைராக்கியமாக இருப்பீர்கள் - அதாவது ஒளி ஊடுருவும் விதமாக, உயிரின் நிர்பந்தமான, சுழற்சியான தன்மையிலிருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள். சுழற்சியான செயல்பாட்டிலிருந்து கிடைக்கும் இந்த விடுதலைதான் முக்தி அல்லது மோட்சம்.

முழுமையான மோட்சத்தை நாடுபவர்களுக்கு மஹாகாலா என்று நாம் குறிக்கும் பரிமாணம் மலைபோல் முக்கியமானது. மஹாகாலேஷ்வர் கோயிலில் இருக்கும் லிங்கம் பிரம்மாண்டமானது. அது உங்கள் இருப்பின் வேர்களிலிருந்து உங்களை உலுக்கவல்லது. உங்களை ஏதோவொரு விதத்தில் கரைப்பதே அதன் ஒரே நோக்கம். தியானலிங்கத்திலும் மஹாகாலாவின் பரிமாணமொன்று உள்ளது, ஆனால் அது திரைபோட்டு மறைக்கப்பட்டுள்ளது, அதனை நாடுபவர்களுக்கு மட்டுமே அது இருக்கிறது. மஹாகாலேஷ்வர் லிங்கம் சற்று மூர்க்கமாக பலவந்தமாக உங்களை தாக்கவல்லது. இக்கோயிலின் பிரம்மாண்ட சக்தியை சரியாக உள்வாங்கிக்கொள்ள, உள்ளே நுழையும்முன் ஒருவர் தன்னை முறையாக தயார்செய்திருக்க வேண்டும்.

மஹாகாலாவிற்கு தினசரி அர்ப்பணிக்கவேண்டியது, மயானபூமியிலிருந்து எடுத்துவரப்பட்ட பஸ்மம். அதுதான் அவனுக்குப் பிரியமானது, அதுதான் அவனை இயங்கவைப்பது. துரதிர்ஷ்டவசமாக, சில புரட்சியாளர்கள் எதிர்த்ததால், அவர்கள் மாட்டுச்சாணத்தை பயன்படுத்துகிறார்களாம். பழைய பாரம்பரியத்தை எப்படி மீண்டும் உயிர்ப்பிப்பது என்று நாம் பார்க்கவேண்டும், ஏனென்றால் இது கலாச்சாரம் சார்ந்த விஷயமல்ல, இதன் பின்னணியில் ஒரு அறிவியல் உள்ளது. அனுபவப்பூர்வமாக, மயான பூமியிலிருந்து எடுக்கும் பஸ்மத்திற்கும் வேறுவித பஸ்மத்திற்கும் இடையே அபாரமான வித்தியாசமுள்ளது.

இந்த செயல்முறை தொடர்வது அவசியம், ஏனென்றால் மஹாகாலாவின் சக்தி ரூபத்துடைய தன்மையால், அதன் இருப்பில் எல்லாம் கரைந்துபோகும். ஒருவிதத்தில் எல்லாம் பஸ்மமாகிவிடும். பொருள்தன்மையில் இருந்தே நீங்கள் விடுபடுவீர்கள். அது மோட்சம் நோக்கி உங்களை உந்தித்தள்ளுகிறது. இதனை மென்மையாக செய்ய விழைந்தால் தியானலிங்கம் இருக்கிறது. உங்களை நெட்டித்தள்ளவேண்டும் என்றால் மஹாகாலா இருக்கிறார். சில ஆயிரம் மக்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்திலிருந்து சிம்ஹஸ்த கும்பமேளாவிற்கு உஜ்ஜெயின் செல்லும் சிறப்பு ரயில் ஒன்றை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது. மஹாகாலேஷ்வரரின் முன்னிலையில் தங்களில் ஒரு பகுதியை கரைத்துக்கொள்ள அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடட்டும்!

Love & Grace