Question: சத்குரு, ஆன்மீகத்தின் பெயரால் நோயை குணமாக்குவது, பொருட்களை வரவழைப்பது போன்ற செயல்களைச் செய்கிறார்கள். இது ஆன்மீகமா? உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன?

சத்குரு:

நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்தேன். யாரோ ஒருவர் அங்கே எந்த நோயாக இருந்தாலும் குணப்படுத்துவதாக கூறி, கடற்கரையில் முகாமிட்டிருந்தார். இங்கேயும் அப்படிப்பட்டவர்கள் எல்லா நோயையும் குணப்படுத்துவதாகக்கூறி கடற்கரையில் கூட்டம் போட்டார்கள். என்னிடம் உள்ள உலகத்தின் அனைத்து மருத்துவமனைகளின் முகவரியையும், அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். நோயாளிகளை அங்கே சென்று பார்க்கட்டும் என்று நான் கூறினேன். கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்துவிட்டால் நோயாளிகளை எப்படி பார்ப்பது? ஆரோக்கியமாக இருப்பவர்கள்தான் கடற்கரைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு எந்த நோயினை குணப்படுத்துவதற்காக அங்கே செல்கிறார்கள்? நோய் தீர்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால் ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்ல வேண்டும். அப்படித்தானே?

எப்போது நீங்கள் இந்த உடல் என்கிற கடனைத் திரும்பச் செலுத்துகின்றபோது, ஆனந்தமாகக் கொடுக்கின்றது போன்ற நிலைக்கு வந்துவிட்டீர்களோ, அப்போது கட்டாயம் உங்களுக்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

பொருட்களை வரவழைப்பது போன்ற செயல்களைச் செய்வதென்றால் தொழிற்சாலைகளுக்குச் சென்று அவர்களுக்கு உதவலாமல்லவா? இப்படி நான் அதிகம் பேசுவது உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் இவ்விதம் நாம் பேசாமல் இருந்துவிட்ட காரணத்தாலேயே எல்லாவிதமான தந்திரமும், ஏமாற்றுப்போக்கும் நம்நாட்டில் மிகுந்துவிட்டது. நோயாளிகளைக் குணப்படுத்துகிற சக்தி கிடைத்துவிட்டால் நீங்கள் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளைத்தான் தேடிச் செல்ல வேண்டும், கடற்கரைக்கல்ல.

அப்படியானால் மருந்து இல்லாமல் அதைத் தாண்டி ஒரு மனிதனுடைய நோயை குணப்படுத்த முடியாதா? கட்டாயமாக, அநேக வழி முறைகளின் வாயிலாக, குணம் பெறச் செய்யலாம். நோய் வந்தது உள்ளிருந்து. அதேபோல சரிப்படுத்துவதும் உள்ளிருந்து செய்ய முடியும். இதற்கு நாம் ஏன் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது 21 நிமிடங்களுக்கு நீங்கள் செய்கின்ற யோகாவினால் இலட்சக்கணக்கானோர் தமக்கு நோய் போய்விட்டதாக சொல்கிறார்கள். யோகா செய்வதால் ஒருவர் தனக்குத்தானே நோயைக் குணப்படுத்திக் கொள்வது நல்ல விஷயம்தானே? படைத்தவனே உள்ளிருந்து குணப்படுத்தும்போது, நான் சரிப்படுத்தியதாக இன்னொருவர் கூறுவது அசிங்கமான விஷயமல்லவா? படைத்தலுக்கான சக்தியே உள்ளிருக்கும்போது, உங்களுடைய நோயைக் குணப்படுத்துவதற்கு அவனுடன் சிறிது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மூலத்துடன் தொடர்பு கொள்ளும் உபாயம் புரியாமல் இருந்த உங்களுக்கு நாம் ஏதோ ஒரு விதமாக உதவி செய்திருக்கலாம். இதனால் உலக மக்களின் நோய்கள் அனைத்தையும் குணமாக்குவதாகக் கூறி அதற்காக புகழ் கொண்டாடுவதிலும் கட்டணம் வாங்குவதிலும் பொருளில்லை.

ஆன்மீகம் என்பது உங்கள் உள்ளத்துக்கு சம்பந்தப்பட்டது. உடலுக்கு சம்பந்தப்பட்டது இல்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்தான். ஆனால் உடல் பற்றிய கவனமே அதிகமாகிவிட்டால் பிறகு உள்ளம் உங்கள் கவனத்திற்கே வராது. நீங்கள் நீர் மேல் நடக்கப் பழகிவிட்டீர்கள். அல்லது இன்னொருவரின் நோய் போக்கிவிட்டீர்கள். இதற்கு வேறு ஏதாவது பெயர் கொடுக்கலாம். ஆன்மீகம் என்று கூற வேண்டிய தேவையில்லை. ஆன்மீகம் என்றால் இவையனைத்திற்கும் அப்பாற்பட்டது.

நாம் பணம் சம்பாதிப்பது, தொழில் நடத்துவது, நம்முடைய ஆரோக்கியம் போன்றவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைதானென்றாலும், குறிப்பிட்ட காலம்வரைதான் அவை முக்கியம். அவை குறுகிய கால நோக்கங்கள். ஆனால் தொலைதூர நோக்கமாக நமக்கு ஆன்மீகம்தானே இருக்க வேண்டும்? அடிப்படையான உயிர் பற்றிதானே அதிக கவனம் வேண்டியுள்ளது?

ஒருநாள் இந்த உடல் மறைந்துவிடும் தெரியுமா? தெரியுமல்லவா? நான் இருந்தாலும், இல்லையென்றாலும் நான் கூறினாலும், கூறவில்லையென்றாலும் எப்படியிருந்தாலும் ஒருநாள் இறந்துவிடுவீர்களல்லவா? இறப்பு என்றால் என்ன? இந்த உடல் என்பது மண்தானே? நீங்கள் இந்த பூமியிடம் கடன் வாங்கிவிட்டீர்கள். நீங்கள் யாரிடத்திலாவது ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை வைத்து நூறு கோடியாக்கி நன்றாகச் சம்பாதித்து விட்டீர்களென்றால், கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து கொடுத்த பணத்தினைத் திரும்பக் கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? மாலையிட்டு வரவேற்று, உபசரித்து அவருடைய கோடி ரூபாய் பணத்தை நன்றியோடு கொடுத்து அனுப்புவீர்களல்லவா? ஏனென்றால், அந்தக் கடனாகப் பெற்ற பணத்தை நன்கு உபயோகப்படுத்தி வளர்ச்சி பெற்றதன் காரணமாக, கடன் கொடுத்துதவிய நண்பர் வந்தால் ஆனந்தமும், நன்றியும் நமக்குள்ளே ஊற்றெடுக்கும். ஆனால் இதற்கு மாறாக, அந்த ஒரு கோடி ரூபாய் கடன் பணத்தை ஏதேதோ விதங்களில் செலவு செய்து முடித்துவிட்டீர்கள் என்றால், இப்போது கடன் கொடுத்தவர் வந்தால் எமராஜன் போலத்தான் தெரிவார் இல்லையா?

ஆரோக்கியத்திற்குத் தேவையானதை செய்து கொள்ளலாம். ஆனால் ஆன்மீகத்தின் பேரில் அவற்றைச் செய்யத் தேவையில்லை.

இப்போது இதுதான் நமக்கும் நிகழ்கிறது. உடலை பூமியிடமிருந்து கடன் வாங்கினோம். இதனை முழுமையாக உபயோகித்து நாம் நமக்குள்ளே உயிர்சக்தியை ஒரு மகத்தான நிலைக்குக் கொண்டு வந்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரம் வரும்போது ஆனந்தமாக அவனுக்குக் கொடுத்துவிட்டு நாம் சென்றுவிடலாம். அப்படி ஏதும் செய்யாமல் முன்னேற்றம் இல்லாமல் வீணடித்து விட்டோம் என்றால், அவன் வருகிறான் என்பதே பயத்தினால் நடுங்க வைக்கிறது. மரணம் என்றவுடனே நடுக்கம்தானே ஏற்படுகிறது? மரணம் என்பது வேறு ஒன்றுமில்லை. கடனைத் திருப்பித் தரவேண்டும். ஆனந்தமாகக் கொடுக்கப் போகிறீர்களா அல்லது கஷ்டப்பட்டு கொடுக்கப் போகிறீர்களா? எப்படியிருந்தபோதிலும் உயிரை எடுக்கத்தான் போகிறார். அவர் விட்டு வைத்திருக்கப் போவதில்லை. அதில் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். எங்கே சென்றாலும் எடுத்து விடுவார்கள் என்றால் ஆனந்தமாகக் கொடுப்பது எப்படி என்று கவனிக்க வேண்டுமல்லவா?

10 வருடமோ, 25 வருடமோ, 100 வருடமோ எவ்வளவு காலம் கழித்துக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. உடலை வைத்திருக்கும்போது அன்பும், அக்கறையும் கொண்டு கவனித்துக் கொள்ளவேண்டும். ஆனால் அனைத்திலும் முக்கியமானது கடன் திருப்பிக் கொடுக்கின்றபோது, ஆனந்தமாகத் திருப்பிச் செலுத்துவது போன்றதொரு நிலையில் இந்த உயிர் இருக்க வேண்டும். எப்போது நீங்கள் இந்த உடல் என்கிற கடனைத் திரும்பச் செலுத்துகின்றபோது, ஆனந்தமாகக் கொடுக்கின்றது போன்ற நிலைக்கு வந்துவிட்டீர்களோ, அப்போது கட்டாயம் உங்களுக்கும், ஆன்மீகத்திற்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

எந்த நேரமும் இங்கே போக வேண்டும், அங்கே போக வேண்டும், இன்னும் அதிகம் வாழ வேண்டும், இறுதி கட்டத்திலும் மேலும் நான்கு நாள் வாழ வேண்டும் என்ற முறையிலேயே இருந்தால் ஆன்மீகம் வராது. இது அஞ்ஞானத்தையே குறிக்கிறது. அஞ்ஞானத்திற்குப் பலமுகங்கள் இருக்கின்றன. அவற்றுள் இதுவும் ஒன்று. ஆரோக்கியமாக வாழ்வதற்கு இன்றைக்கு அனைத்துவிதமான மருந்து முறைகளும் இருக்கின்றன. தொற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆங்கில மருத்துவம், மற்ற நோய்களுக்கு ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் அல்லது யோகா என்று நூறு மருத்துவமுறைகள் இருக்கின்றன.

ஆரோக்கியத்திற்குத் தேவையானதை செய்து கொள்ளலாம். ஆனால் ஆன்மீகத்தின் பேரில் அவற்றைச் செய்யத் தேவையில்லை. மருந்தினை உட்கொண்டும், பயிற்சிகள் செய்தும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதையும் மீறி உயிர் போய்விட்டதென்றால் ஆனந்தமாகப் போக முடியும். ஆனந்தமாக வாழ்ந்திருந்தால் ஆனந்தமாகச் செல்லலாம். இல்லையென்றால் எப்பொழுதும் பிரச்சினைதான். கடன் வாங்கும்போதும் பிரச்சினை, கடன் கொடுக்கும்போதும் பிரச்சினை.

இப்போது ஆன்மீகத்தைவிட குணமாக்குதல் பிரமாதப் படுத்தப்படுகிறது. ஆகவே, ஆன்மீகத்தின் பெயரில் மிகவும் அசிங்கம் நடந்துவிட்டது. அது தடுக்கப்பட வேண்டும். இது எனக்காகவோ, உங்களுக்காகவோ அல்ல. ஆன்மீகம் என்பது இந்த உலகத்தில் வளர வேண்டுமென்றால் நாம் அதை ஒரு தூய்மையான நிலையில் வைத்திருக்க வேண்டும். யோகா செய்கின்ற நீங்கள் வீட்டில் பெரியதாக எதுவும் செய்ய வேண்டாம். சிறிதே மென்மையாக, அன்பாக, ஆனந்தமாக நடந்து கொள்ளலாம். வேறு அதிசயமான செயல்களேதும் செய்ய வேண்டாம். கயிறு மீதும், தண்ணீர் மீதும் நடக்கத் தேவையில்லை. உயிரே அதிசயமானது என்பதை உணர வேண்டும். உயிர் அதிசயமானது என்று உணராதவர்கள்தான் அதிசயமான வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர்.

நீங்கள் தினமும் அதிசயமான வேலையைத்தானே செய்திருக்கிறீர்கள், இல்லையா? இட்லி சாப்பிட்டால், மனிதனாக மாறுகிறது. அதிசயம்தானே? ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் அடிப்படையாக படைத்தலுக்கு மூலம் இருக்கிறது. நீங்கள் காலை சாப்பிட்ட இட்லி மாலை மனிதனாகிவிட்டது. இது ஒரு சாமானியமான செயலா? எவ்வளவு மகத்தான செயல் நடந்திருக்கிறது? இந்த உடல், எதை ‘நான்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அது உள்ளிருந்துதானே உருவாக்கப்பட்டிருகிறது? படைத்தலுக்கு மூலமே நமக்குள் இருக்கிறபோது நாம் கொஞ்சம் அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அதிசயமான வாழ்க்கை வாழமுடியும், இல்லையா? அவர் எங்கேயோ இருந்தால் விட்டுவிடலாம். அவர் இங்கேயே இருக்கும்போது என்ன பிரச்சனை? நாம் உயிரை ஆனந்தமாக உணரத் துவங்கிவிட்டால், நமக்கு அதனுடன் மிகவும் ஆழமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடும். உயிருக்கு அடிப்படையானது எதுவோ அதனுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் அதுதான் ஆன்மீகம். இதற்கும் அதிகமாக என்ன அதிசயம் செய்ய வேண்டும்? மாஜிக் வேலைகளைச் செய்வது ஆன்மீகம் அல்ல.