உங்கள் அருகிலிருப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு நீங்கள் உங்களையே முழுமையாகக் கொடுத்தால், நீங்கள் அவரிடம் முழு ஈடுபாடு காண்பித்தால், எந்த ஒருவரும் சிறப்பானவராகத்தான் இருப்பார்
பெரும்பாலான மனிதர்களிடம் இது ஒரு அடிப்படையான பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் சிறந்த நபர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது  தங்கள் வாழ்வில் செய்வதற்கான சிறந்த விஷயங்களின் தேடுதலில் இருக்கிறார்கள். இந்த பூமியில் சிறந்த நபர் என்று எவரும் இல்லை, அதே போல இந்த பூமியில் செய்வதற்கான சிறந்த செயல் என்றும் கூட ஏதும் இல்லை. நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், இதயபூர்வமாக, உண்மையாக உங்களை அதில் செலுத்தினால், அது ஒரு மகத்தான செயலாக ஆகிறது. உங்கள் அருகிலிருப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு நீங்கள் உங்களையே முழுமையாகக் கொடுத்தால், நீங்கள் அவரிடம் முழு ஈடுபாடு காண்பித்தால், எந்த ஒருவரும் சிறப்பானவராகத்தான் இருப்பார் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்தக் கணத்தில் உங்களுக்கு அடுத்திருப்பவர் யாராக இருந்தாலும், நீங்கள் முழுமையான ஈடுபாடு கொண்டால், அவர்களுடன் இருப்பது மகத்தானதாக இருக்கிறது. “இந்த நபர் சிறப்பானவரா?”, என்று நீங்கள் நினைத்தால் உலகத்தில் எந்த ஒருவரும் சிறந்த நபர் அல்ல. நீங்கள் கடவுளையே திருமணம் செய்திருந்தாலும், உங்கள் தாய் மட்டுமல்ல, நீங்களே கூட அவர் மீது புகார் செய்வீர்கள்.

ஒரு தாய் மற்றும் ஒரு பெண்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தாயைத் திருப்தி செய்வது பற்றிக் கூறவேண்டுமென்றால் – ஒரு தாய் என்று நீங்கள் கூறும்போது, முக்கியமாக அவர் ஒரு பெண். பிறகு அவர் ஒரு தாயாக மாறினார். ஒரு மனைவி என்று நீங்கள் கூறும்போது, முதலில் அவர் ஒரு பெண், பிறகு அவர் ஒரு மனைவியாக மாறினார். அது ஒரு இரண்டாம் நிலை பாத்திரம். ஒரு பெண்ணாக இருப்பது அவரது அடிப்படையான அடையாளம். அடுத்த அடையாளம் ஒரு வேளை ஒரு மனைவியாகவும், அதற்கும் அடுத்ததாக ஒரு தாயாகவும் இருக்கலாம். இந்த வரிசைப்படி இது நிகழ்கிறது.

நீங்கள் கடவுளையே திருமணம் செய்திருந்தாலும், உங்கள் தாய் மட்டுமல்ல, நீங்களே கூட அவர் மீது புகார் செய்வீர்கள்.

ஒருமுறை அமெரிக்காவில் இது நிகழ்ந்தது. ஒரு இளைஞன் ஒரு பெண்ணை மணக்கவிருந்தான். தன் தாயிடம் இதைக் கூறிய அவன் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர விரும்பினான். தாயின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் அவரது சம்மதத்தையும் பெறுவதற்காகவும் அப்படிச் செய்ய நினைத்தான். இப்படிச் செய்வதால் வீட்டில் சச்சரவுகள் ஏதும் பின்னர் நிகழாவண்ணம் தடுத்துவிட முடியும் என நினைத்தான். அதே தருணத்தில், அவன் தாயின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாக இருந்ததால், சிறிது சவாலும் வேடிக்கையும் கலந்து இதை நிகழ்த்த விரும்பினான்.

ஆகவே, அவனது சக அலுவலர்களாகிய மூன்று இளம் பெண்களுடன் தன் பெண் சினேகிதியையும் சேர்த்து வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்தான். தான் விரும்பும் பெண் யார் என்பதை தாய் கண்டுபிடிக்கவேண்டும் என்பது அவனது நோக்கம். அவனது தாய் வித்தியாசம் காணமுடியாத அளவுக்கு அவன் அனைவரிடமும் ஒரே விதமாக நடந்துகொண்டான். அவர்கள் விருந்து முடிந்து சென்றபிறகு, “அம்மா, நான் விரும்பும் பெண் யார் என்பது உங்களுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டான். “எனக்குத் தெரியும். சிவப்பு மேற்சட்டை அணிந்திருந்தவள்தான்”, என்று தாய் கூறினார். ஆச்சரியமடைந்தவனாக, “ உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் அவளைப் பார்க்கக்கூட இல்லையே, உங்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று நான் எப்போதும் மற்றவர்களைத்தானே பார்த்துக்கொண்டிருந்தேன்”, என்றான். அதற்கு அந்தத் தாய் கூறினார்,” அவள் உள்ளே நுழைந்தபோதே எனக்கு அவளைப் பிடிக்காமல் போனது. ஆகவே அது அவளாகத்தான் இருக்கவேண்டும்!”.

ஒரு பெண் போதுமான முதிர்ச்சியும் விழிப்புணர்வும் கொண்டால், அதிலிருந்து வெளிவந்து வளர்ச்சி அடைய முடியும்.
வீட்டிற்கு வரும் புதுப்பெண்ணிடம்  உள்ளுணர்வில் உங்களுக்கு ஒரு தடை உண்டாகிறது. ஏனென்றால், உங்களுக்குச் சொந்தமான ஒருவரை இனி நீங்கள் சமனற்ற விகிதத்தில் – சமமான விகித்த்தில் கூட இல்லை – பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. தனது மகன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதை ஒரு தாய் விரும்புகிறார். ஆனால் மற்றொரு தளத்தில்,  தாய் என்பவர் இன்னமும் ஒரு பெண்ணாகத்தான் இருக்கிறார். உங்களுக்கு உரிய ஒன்றைப் பகிர்ந்துகொள்வதற்கு நீங்கள் அனுமதி பெறவேண்டியுள்ளது. இது எல்லா விஷயங்களையும் சிறிது சிக்கலாக்குகிறது. துரதிருஷ்டவசமாக, நூற்றாண்டு காலங்களாக இதே முட்டாள்தனமான உறவுச் சிக்கல்கள்  முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை மாற்றமுடியும், ஆனால் அப்படி மாற்றுவதற்கு மக்கள் இன்னமும் தயாராகவில்லை.

அது ஒரு விதமான உயிரியல் தன்மையைச் சேர்ந்தது. ஏனென்றால் இவையெல்லாமே இனப்பெருக்கம் மற்றும் பாதுகாத்தல் செயல்முறையுடன் தொடர்புடையது. தனக்குச் சொந்தமானதுடன் ஒரு பெண் உடைமைத்தன்மை இல்லாமல் இருந்தால், அவள் தனது குழந்தைகளைப் பராமரித்திருக்க மாட்டாள். குழந்தைகளைப் பிரசவித்ததும் கைவிட்டிருப்பாள். அந்த உயிரியல் தொடர்பு வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு வகையில் தன்னை நீட்டித்துக்கொள்கிறது. இருப்பினும், ஒரு பெண் போதுமான முதிர்ச்சியும் விழிப்புணர்வும் கொண்டால், அதிலிருந்து வெளிவந்து வளர்ச்சி அடைய முடியும்.