பல்துறை வல்லுனர்கள், வியாபாரத்தில் இருப்பவர்கள், இளைஞர்கள்... ஜீன்ஸ், டிஷர்ட், நேர்த்தியான ஹேர் ஸ்டைல் என்ற வழக்கத்தில் இருந்த இவர்கள், இன்று ஒரு காவி வேஷ்டி துண்டோடு, சட்டை அணியாமல் வெள்ளியங்கிரி நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேலை, நல்ல வருமானம், இருந்தும் இந்தக் கோலம் ஏன்?

சென்னையில் இருந்து...

19 சிவாங்காக்கள்... 500 கிமீ... 21 நாட்கள்... பலதரப்பட்ட நிலப்பரப்புகள், கிராமங்கள்... ஒரே நோக்கம்... ஓம் நமசிவாய மந்திரம்... கால்நடையாகப் பயணம்.

பெங்களூருவில் இருந்து...

5 சிவாங்காக்கள்... 400 கிமீ... ஒரே நோக்கம்... ஓம் நமசிவாய மந்திரம்... பரபரா ஐடி நகரத்திலிருந்து எழில்கொஞ்சும் வெள்ளியங்கிரி மலை நோக்கி கால்நடையாகப் பயணம்.

நாகர்கோவிலில் இருந்து...

20 சிவாங்காக்கள்... 450 கிமீ... ஒரே நோக்கம்... ஓம் நமசிவாய மந்திரம்... பக்திப் பெருக்கெடுக்க மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து சிவனைத் தேடி கால்நடையாகப் பயணம்..

பக்தியெனும் தீயில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சென்னை, பெங்களூரு, கன்னியாகுமரி என மூன்று திசைகளிலிருந்து கோவை வெள்ளியங்கிரிக்கு நடைபயணம் துவங்கியது இக்குழு. சிலர் இவர்கள் கால்களுக்கு பாதாபிஷேகம் செய்தனர். சிலர் இவர்களை வணங்கினர். பலபேர் பேச வார்த்தைகளின்றி மௌனத்தில் ஆழ்ந்தனர். சிலரால் கண்களில் கண்ணீரைத் தவிர்க்க இயலவில்லை.
பக்தி ஒருபுறம் இருக்க, ஆர்வமும், வியப்பும் தாங்காமல், "இவர்கள் எங்கே செல்கிறார்கள். தென்கைலாயமா? எங்கே இருக்கிறது? நாங்களும் இந்த விரதம் இருக்கலாமா?” இப்படி பல கேள்விகள்.

இது என்ன சாதனா?

இதனால் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? வாகனங்கள் பெருகிவிட்ட இந்தக்காலத்தில் இது தேவையா?

இடுப்பில் காவி வஸ்திரம், கழுத்தில் ருத்திராட்சம், உள்ளத்தில் மௌனம், காலணியின்றி தமிழகத் தெருக்களில் வலம்! பக்தர்களின் நடவடிக்கை பார்ப்பவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியும் என்று சத்குரு கூறுவதுபோல இது நாம் விளங்கிக் கொள்ள இயலாத ஒரு பித்துநிலை.

"ஆஉம் நமஷிவாய" மகாமந்திர உச்சாடனையுடன் நடந்து செல்லும் இவர்களைப் பார்க்கும் பொதுமக்கள் பலர் இவர்கள் காலில் விழுந்து வணங்குகின்றனர். 90 வயது மூதாட்டி ஒருவர் "ஒரு நிமிஷம் நில்லுங்கய்யா!" என்று சொல்லி வீட்டிற்குள்ளே சென்று, தண்ணீர் எடுத்து வந்து இவர்களது பாதங்களை கழுவுகிறார். "இது சிவனுக்கு கிடைக்கும் மரியாதை என எண்ணி பூரித்துப் போனோம்," என்கின்றனர் சிவாங்கா சாதகர்கள்.

பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தது எப்படி? உடலை கடுமையாய் வாட்டி எடுக்குமே? இவர்களிடமே கேட்டோம்...

"ஒரு நாளைக்கு 40 கிமீ நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். இல்லையானால் மஹாசிவராத்திரிக்குள் வெள்ளியங்கிரி மலையேற இயலாது. சிவாங்கா தீட்சை எடுத்துக் கொண்டபோது எங்களுக்கு சிவநமஸ்காரம் கற்றுக் கொடுக்கப்பட்டது. சிவநமஸ்காரம் 21 முறை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். பாதயாத்திரை செல்ல திட்டமிடும் அன்பர்கள் 42 சிவநமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

எங்களில் சிலர் ஒரு நாளைக்கு 84 சிவநமஸ்காரம் செய்கிறார்கள். இது உடலுக்கு மிகுந்த தெம்பை அளிக்கிறது. எங்களால் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சத்குரு, 'நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் உங்களுடன் இருப்பேன்' எனக் கூறியதைக் கேட்டதும் எங்களுக்குள் புது உத்வேகம் பிறந்துவிட்டது," என்கிறார்கள்.

அடுத்த வேளை உணவு?

அடுத்து எங்கே உண்ணப் போகிறீர்கள்? எங்கே ஓய்வெடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டபோது...

இவர்கள் சொன்ன பதில் "தெரியாது" என்பதுதான்.

"நாங்கள் எங்கள் உணவைப் பற்றி எந்தத் திட்டமும் தீட்டவில்லை. கிடைத்ததை உண்போம்!" என எந்த பதற்றமும் இன்றி கூறுகிறார்கள்.

இது பக்தியின் உச்சமா? சிவன் மீது கொண்ட மோகமா? புரிதலுக்கு அப்பாற்பட்ட பித்துநிலையா? நாமும் இவர்களுடன் சேர்ந்து பக்தியில் கரைவோம்!

சிவாங்காக்கள் நடந்து வரும் வழி

SHIVANGA-ROUTE-MAP

சிவாங்கா விரதம் பற்றி அறிய: Shivanga.org

ஆசிரியர் குறிப்பு

பொதுமக்கள் வழங்கும் ஆதரவு

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள சிவாங்காக்களை பல ஊர் பொதுமக்கள் வரவேற்று, தங்கவைத்து, அன்னதானம் வழங்கி வருகின்றனர். மக்களின் உள்ளக் கொதிப்பில் அவர்கள் இந்த பக்தர்களுக்கு வழங்கும் ஆதரவு வழிநெடுக தங்க இடமாய், உண்ண உணவாய், பருக குடிநீராய் என பல ரூபங்கள் எடுக்கின்றது. பக்தி இன்னும் மடிந்துவிடவில்லை என்பதை இது அடித்துச் சொல்கிறது.