நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 27

'உன்னால் முடியும் தம்பி' என்று பாடல் மட்டும் படித்துக் கொண்டிருக்காமல், நாம் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது என்பதை, இந்த மத்தியப்பிரதேச மனிதரின் அரும் செயலைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார்:

2009 ஆகஸ்ட் மாதம் திருப்பூரில் 25,000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம் தொடங்க உள்ளது, சத்குரு தொடங்கிவைக்கிறார் என்று சொன்னார்கள். திருப்பூர் மாநகரம் சிலிர்த்து எழுவது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மாளிகைகளாலும், சாலைகளாலும், வாகனங்களாலும் மாசுபட்டுவிட்ட திருப்பூர் மாநகரத்தை பசுஞ்சோலையாக மாற்றிக்காட்டுவோம் என்று புறப்பட்டுள்ள மக்களை மனமாற வாழ்த்தினேன்.

சரியான பராமரிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாக மெலிந்து இருந்த பசுக்களும், உழவு மாடுகளும், ஆடுகளும் உள்ளே வரவழைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டன.

பெருவிழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அன்று நான் கலந்துகொண்டதும் ஒரு முக்கியமான நிகழ்வுதான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள காடுகளில் அந்த அமர்வு இருந்தது. காடுகள் அழிந்ததாலும், கட்டுப்பாடு இன்றி ஆடு, மாடுகள் திரிந்ததாலும் வறண்டு கிடந்த 300 ஏக்கர் நிலத்தை ஒருவர் மாற்றிக்காட்டி இருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுற்று வட்டார உழவர்களைக்கொண்டே வாய்க்காலும் மதில் சுவருமாகப் பள்ளங்கள் தோண்டி, வரப்பு அமைத்து நீரோட்டத்தைத் தடுத்து இருந்தார். வாய்க்கால்களில் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து, ஏரி, குளங்களை உருவாக்கி இருந்தார். ஓடுகின்ற தண்ணீரை மறித்து நிறுத்தியதால், தண்ணீர் நிலத்தடியில் இறங்கியது. காய்ந்துகிடந்த புல்லும், பூண்டும், புதர்ச்செடிகளும் மறுவாழ்வு பெற்றன.

அழிவின் விளிம்பில் இருந்த அடிமரங்கள் கிளை பரப்பின. சரியான பராமரிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாக மெலிந்து இருந்த பசுக்களும், உழவு மாடுகளும், ஆடுகளும் உள்ளே வரவழைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. கால்நடைகளின் எரு நிலத்துக்கு வளமூட்டியது. கால்நடைகளின் சக்தி நிலத்தை உழுவதற்குப் பயன்பட்டது. அங்கு விதைகள் விதைக்கப்பட்டு, பயிர்கள் தடைமுறை இன்றிப் பூத்துக் காய்த்தன.

இத்தகைய மாற்றத்தை உருவாக்கியவர் ஒரு காவல் துறைக் கண்காணிப்பாளர். இளமையிலேயே விருப்ப விடுப்பில் பணியைவிட்டு வெளியேறிய ராஜேஸ் குப்தா தனது நண்பர்களுடன் இணைந்து இன்று மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். அவர் அதோடும் நிற்கவில்லை. முதலமைச்சரையும், வேளாண்மை அமைச்சரையும் நிலத்துக்கே கொண்டுவந்து காட்டியுள்ளார். நீர் சேமிக்கப்பட்ட காட்சியையும், இயற்கை வேளாண்மை குறித்தும் வந்திருந்த பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளைக் கேட்ட முதல்வர், காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவின் இறுதியில், ‘‘எங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள். நீருக்குப் பக்கமாகக் கொஞ்சம் நிலம் ஒதுக்குங்கள். நாங்கள் அறிந்தவற்றை சோதித்துப்பார்க்க வாய்ப்பு அளியுங்கள்’’ என்று கேட்டேன். இப்படிப் புதிய சிந்தனையோடு வருபவர்களுக்காகவே 100 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருப்பதாகக் கூறிய அவர்கள், ‘‘நம்மாழ்வார் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எல்லா இடங்களிலும் அவரது கனவுகளுக்கு வடிவம் கொடுக்கலாம்’’ என்று சொன்னார்கள்.

ஈஷா இயக்கம்கூட கிராமப் புத்துணர்வு இயக்கத்தை உயிர் மூச்சாகக்கொண்டு இருக்கிறது. நம் இயக்கத்துக்கு இப்படி ஒரு பார்வை கிடைத்து இருப்பது நமது பணிக்கு விரைவும், விவேகமும் அளிக்க முடியும்.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையர் ஏனும் இலர்.

தொடர்ந்து விதைப்போம்...

இத்தொடரின் முந்தைய பதிவுகள்: நம்மவரு நம்மாழ்வார் தொடர்

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!