நாடெங்கும் கடந்த வாரம் களைகட்டிய நவராத்திரி திருவிழாக் கொண்டாட்டங்கள், ஈஷா யோகா மையத்திலும் முதன்முதலாக பல அம்சங்களில், மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த 10 நாட்கள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே...

லிங்கபைரவியில் நவராத்திரி கொண்டாட்டங்கள்!-1

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள லிங்கபைரவியில், அக்டோபர் 5 முதல் 13 வரை நவராத்திரி திருவிழா, 9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படது. இந்த 9 நாட்களில் பக்தர்கள் தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்ததோடு, ஒவ்வொரு நாள் மாலையிலும் நிகழ்ந்த மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உச்சாடனைகளில் பங்குபெற்று தேவியின் அருளைப் பெற்றனர்.

மஹாளய அமாவாசையில் காலபைரவ சாந்தி
முதல் நாள், நவராத்திரியின் முந்தைய நாளான அக்டோபர் 4ம் தேதியன்று, ஈஷா யோகா மையத்தில் மஹாளய அமாவாசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நாளில், நாம் பேசும் மொழியிலிருந்து உடுத்தும் உடை வரை நம் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கும் நமது முன்னோர்களுக்கு நம் நன்றியை வெளிப்படுத்துவதற்கு, மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை லிங்கபைரவியில் நடந்த “அக்னி அர்ப்பணத்தில்” ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நள்ளிரவில் நடந்த “காலபைரவ சாந்தி”யில், தமிழகம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த 500 அன்பர்கள் தங்கள் பித்ருக்களுக்கு காலபைரவ சாந்தி எனும் பித்ரு அர்ப்பணை செய்தனர். இதில் மொத்தம் காலமான 2500 பேருக்கு காலபைரவ சாந்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரிக் கொண்டாட்ட நிகழ்வுகள்

நவராத்திரி - இருளிலிருந்து ஒளிக்கு செல்லும் ஒரு பயணம். தெய்வீகத்தாயின் முக்கியத்துவத்தை குறிக்கும் ஒன்பது சக்தி வாய்ந்த இரவுகளாக நவராத்திரி விளங்குகிறது. இந்த ஒன்பது நாட்களில் தேவியோடு இருப்பது ஒருவரது நல்வாழ்வுக்கும், இயற்கையின் கருணையினை உள்வாங்கிக் கொள்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். லிங்கபைரவி தேவி, நவராத்திரி காலங்களில் முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளித்தாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒவ்வொரு நாள் மாலையும் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி சிறப்பு ஊர்வலம் நிகழ்ச்சி காண்போர்க்கு முத்தாய்ப்பாய் விளங்கியது. கோவையின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களும் தேவியை தரிசித்து அருள் பெற்றனர். வந்திருந்த அத்தனை பேருக்கும் லிங்கபைரவி நிர்வாகம் அன்னதானம் வழங்கி சிறப்பித்தது. லிங்பைரவியில், ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.

'கலையின் கைவண்ணம்' - கைவினைக் கண்காட்சி

நமது இந்திய பாரம்பரிய கைவினைக் கலைகளுக்குப் புத்துயிரூட்டும் விதமாக, இந்த ஆண்டு, 'கலையின் கைவண்ணம்' (Hands of Grace) என்ற கைவினைக் கண்காட்சி, சிறப்பு நிகழ்ச்சியாக, அக்டோபர் 9 முதல் 13 வரை நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து 15 மாநிலங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கலைக் குழுவினர் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர். நலிந்து வரும் கைவினைக் கலையை ஊக்குவிக்கும் விதமாக ஈஷா மேற்கொண்ட ஒரு முதற்கட்ட முயற்சி இது இந்த கண்காட்சியில் இடம்பெற்ற கலைப் பொருட்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.!

களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்

இதுமட்டுமில்லாமல், 9 நாட்களிலும் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தேறியது. இதில் ரமா ரவி (குரலிசை), சுகந்தா காளமேகம் (குரலிசை), D.பால கிருஷ்ணா (வீணை), புரிசை சம்பந்தன் (தெருக்கூத்து), பாரதி திருமகள் (சுப்பு ஆறுமுகம் குழுவினர்- வில்லுப்பாட்டு), உமா மஹேஷ்வரி (பரத நாட்டியம்), ஸ்ரீரஞ்சனி சாந்தகோபாலன் (குரலிசை), ஷ்ரேயா தேவ்நாத் (வயலின்), காரைக்கால் கலைமாமணி கேசவசாமி (பொம்மலாட்டம்), ரஞ்சனி ராமச்சந்திரன் (குரலிசை) எனப் பல்வேறு தலைசிறந்த கலைஞர்கள் நிகழ்த்திய இசைக் கச்சேரி, பரத நாட்டியம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு, வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆயுத பூஜை

நவராத்திரியின் 9வதுநாளில், சரஸ்வதி தேவி - படிப்பிற்கும் அறிவிற்கும் மூலமான தேவியை வணங்குகிறோம். இந்நாளை ஆயுத பூஜை தினம் என்றும் அழைக்கிறோம். இந்நாளில் தாங்கள் உபயோகிக்கும் தொழிற் கருவிகள் அனைத்தையும் தேவியின் முன்னிலையில் சமர்பித்து தங்கள் தொழில் விருத்தி பெற அவளின் அருளைப் பெறுவர். நாம் பயன்படுத்தும் அனைத்திலும் உயரிய கருவிகளாகிய நமது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திநிலையை இது இலைமறைகாயாக குறிக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இத்திருநாளில் அவற்றையும் கூர்மை பெறச் செய்து ஒரு உயரிய நிலைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நமது மையதில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜையில் மையத்தின் நாற்பதிற்கும் மேற்பட்ட செயல் பிரிவுகளில் இருந்தும் அவரவர் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டு வந்து சமர்ப்பித்து தேவியின் அருளை நாடினர். ஈஷாவின் அன்பர்களும், ஈஷாவின் அங்கங்களான சேவாதாரர்கள் நூற்றுக்கனக்கானோரும் இதில் கலந்து கொண்டனர்.

விஜயதசமியில் வித்யாரம்பம்

நவராத்திரி நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் வண்ணம் விஜயதசமி கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. விஜயதசமி நாளான அக்டோபர் 10ம் தேதி, குழந்தைகளுக்கு முதல் கல்வி அறிமுகப்படுத்தும் சடங்கான "வித்யாரம்பம்" நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொத்தம் 200 குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி, தேவியின் அருளுடன் கல்வி துவக்கி வைக்கப்பட்டது. லிங்கபைரவிக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து வந்திருந்த 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் கல்வி, முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி கொலு
நவராத்திரியின் முக்கிய அம்சமான கொலுவும் மையத்தில் அமைக்கப்பட்டது. இதேப் போல் வெளியிடங்களிலும் ஈஷா தியான அன்பர்கள் கொலுவை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையம், Isha Yoga Mayam

ஈஷா யோகா மையம், Isha Yoga Mayam

காவேரிப்பட்டிணம்
காவேரிப்பட்டிணம், Kavaripattinam

சேலம் கொலு

காவேரிப்பட்டிணம், Kavaripattinam
லிங்கபைரவியில் அன்னதானம்
லிங்கபைரவியில் அன்னதானம், Lingabhairavil annadhanam