லிங்கபைரவி உற்சவமூர்த்தி ஊர்வலத்தின் முக்கியத்துவம் பற்றியும், தனக்கு குருதட்சணையாகக் கொடுக்க வேண்டியது என்ன என்பதையும் சத்குரு நேற்றைய தரிசனத்தில் பேசினார். இங்கே நேற்றைய தரிசனத்தின் பகுதிகளை பதிகிறோம்!

தட்சிணாயனத்தின் முதல் நாள் நேற்று

சத்சங்கத்தின்போது சத்குரு பேசுகையில்,

"இன்று தட்சிணாயனத்தின் முதல் நாள். இந்த நாளில்தான் சூரியன் தென்திசை நோக்கி பயணிக்கத் துவங்குகிறான். யோக சாதனைகளுக்கு ஏற்ற காலமாக இந்த தட்சிணாயனம் இருக்கிறது. அடுத்து வரக்கூடிய முதல் பௌர்ணமியானது குரு பௌர்ணமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் ஆதியோகி சப்தரிஷிகளுக்கு ஞானத்தை வழங்குவதற்காக தென்திசை நோக்கி அமர்ந்தார். முதல் குருவான ஆதிகுரு தோன்றியது இந்த பௌர்ணமி தினத்தில்தான். மனிதனின் உள்நிலை மாற்றத்திற்கு இந்த குரு பௌர்ணமி நாள் சிறந்த வாய்ப்பாக அமைகிறது."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குரு பௌர்ணமி குறித்தும் தட்சிணாயனம் குறித்தும் விரிவாக உரையாற்றிய சத்குரு, வரும் ஜூலை 12ஆம் தேதி குரு பௌர்ணமியை சிறப்பாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

கேள்வி நேரம்...

லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் எதற்கு?

லிங்கபைரவி ஆரத்தி மற்றும் உற்சவமூர்த்தி ஊர்வலத்தின் முக்கியத்துவம் பற்றி கேட்கப்பட்டபோது...

"தியானலிங்கத்தைக் கவனித்துக்கொள்ள மனிதர்கள் தேவையில்லை. தியானலிங்க வளாகத்தைப் பராமரிப்பதற்கும், தரிசிக்க வருகின்ற மனிதர்களைக் கையாள்வதற்கும் மட்டும்தான் அங்கே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், லிங்கபைரவியை மனிதர்கள் தினசரி கவனிக்கத் தேவை இருக்கிறது. அவளுக்கு நாம் தினசரி அர்ப்பணிப்புகளை செய்து அவளை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அவள் மூன்றரைச் சக்கரங்களுடன் அரை உயிராக இருந்தாலும் தீவிர அதிர்வுகளை பிரதிபலித்தபடி வீற்றிருக்கிறாள். தினசரி தேங்காய் உடைத்தோ ஆரத்தி காண்பிதோ மற்றும் பிற அர்ப்பணிப்புகளைச் செய்தோ அவளை நாம் உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமானது பௌர்ணமியன்று நடக்கும் உற்சவ மூர்த்தி ஊர்வலம். அதன் மூலம் தேவி தியானலிங்கத்துடன் நேரடி தொடர்புகொள்கிறாள். இது மழையோ புயலோ வெள்ளப்பெருக்கோ எந்த இக்கட்டான சூழ்நிலையானாலும் நடந்தே தீர வேண்டும். அப்படியில்லையென்றால் தேவி உயிர்ப்பை இழந்துவிடுவாள்."

இப்படி, தேவியின் உற்சவமூர்த்தி ஊர்வல முக்கியத்துவத்தை உணர்த்தி பேசினார் சத்குரு.

நான் உங்களுக்கு குரு தட்சணை கொடுக்க நினைக்கிறேன்...

டெல்லியிலிருந்து வந்திருந்த பங்கேற்பாளர் ஒருவர் நான் உங்களுக்கு குரு தட்சணையாக எதை வழங்குவது எனக் கேட்க,

"நான் சில குருமார்களைப் போல் உங்கள் கட்டை விரலையோ, மூக்கையோ காதையோ கேட்க மாட்டேன்." என்று வேடிக்கையாகக் கூறிவிட்டு, "உள்நிலையில் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒருபடி வளர்ச்சியடைந்தால் அதுவே எனக்கு நீங்கள் கொடுக்கும் குரு தட்சணையாக இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்கள் வளர்ச்சி இருக்க வேண்டும். நேற்று இருந்ததை விட இன்று உள்நிலையில் வளர்ந்திருக்கிறீர்களா என்று கவனியுங்கள். இதைத் தொடர்ந்து செய்தால், 365 வது நாளில் பிரமாதமான மனிதராக மாறியிருப்பீர்கள்" என்று கூறினார்.

இறுதியில் ஒரு இந்தி மெல்லிசையை இசைக் குழுவினர் அரங்கேற்ற திருநீற்றை ஆசீர்வதித்து வழங்கியதோடு அனைவருக்கும் அருள் வழங்கி விடைபெற்றார் சத்குரு.