லாசா - கடல் மட்டத்துக்கு மேலே
12000 அடி உயரத்தில்

ஒரு காலத்தில் வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நகரமாக இருந்த லாசா நகரத்துக்கு, ஆறு வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் இப்போது வந்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் வெளியார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த இந்த நகரம், இப்போதோ, மிகவும் அவசரமாக உருவாக்கப்பட்ட அனைத்து அடையாளங்களோடு, மிகுந்த பரபரப்பான ஒரு நகரமாகிவிட்டது.

கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட அகலமான தெருக்களில் சீக்கிரம் வளரக் கூடிய யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளன. வாங்குவதற்கு நிறைய பொருட்கள் இருக்கின்றன, ஆனால் வாங்குபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். வாகனப் போக்குவரத்தும் சீராக, தொடர்ச்சியாக இருக்கிறது.

சீன வாகனங்கள் மட்டுமல்லாமல், பல ஐரோப்பிய, அமெரிக்க வாகனங்களும் தென்படுகின்றன. உறுதியான உள்ளூர் நிர்வாகமும், இந்நகரத்துக்குக் குடி பெயர்ந்து வந்தவர்களும், உள்ளூர்வாசிகளிடம் பொதுவாகக் காணப்படும் மந்தமான வேகத்தை, தங்களது வேகத்தால் தார்க்குச்சி போல குத்தி வேகப்படுத்துகிறார்கள்.

திபெத்தில் நான் வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற உள்ளூர் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். ராணுவ குடியிருப்புகளைப் போலத் தோற்றமளிக்கும் அனைத்து அலுவலகக் கட்டிடங்களும் சீருடை அணிந்த ஆண்கள், பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அடக்குமுறை மிகுந்த வழிகளில் தேசங்கள் உருவாக்கப்படுவது சரியா, தவறா என்பதை ஒருவேளை வரலாறுதான் முடிவு செய்யுமோ என்னவோ.

நாளைக் காலை, கடல் மட்டத்துக்கு மேலே 15,481 அடி உயரத்தில் உள்ள நம்த்ஸோ ஏரிக்கு பயணிக்கப் போகிறோம். இந்த ஏரி, உலகத்தில் மிக உயரமான இடத்தில் இருக்கும் உவர்நீர் ஏரிகளில் ஒன்றாகும். 1,920 கிமீ பரப்பளவில் இருக்கும் இதுதான் திபெத் பீடபூமியின் மிகப் பெரிய ஏரி.

திடீரென இத்தனை உயரத்துக்குச் செல்வது சவாலான விஷயமாக இருக்கப் போகின்றது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மூச்சுத்திணறலை சமாளிப்பதற்காக, குழுவில் இருப்பவர்கள் அனைவரும் டையமாக்ஸ் மாத்திரையோ அல்லது வேறு ஏதோ ஒரு மூலிகை மருந்தையோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓரிருவர் மட்டும் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விடாப்பிடியாக இருக்கிறோம்.

குழுவில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை; அவர்கள் உற்சாகமாக, லாசாவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளேயே அடைந்து கிடக்காமல், இப்படி வெளியில் சுற்றி வருவது முக்கியம்.

என்னுடன் இருக்கும் இந்த சிறிய குழு ஒரு சாகசப் பயணம் செல்வதற்காக வந்திருக்கிறது. ஆபத்தில்லாமல் எந்த சாகசமும் இல்லை. ஆபத்தை நீக்கிவிட்டால், பிறகு சாகசம் இல்லை. ஆனால் ஆபத்தை சரியாகக் கையாளாவிட்டால், பிறகு அது விபத்தில் முடிந்து விடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தக் குழுவில் சிலர் திடமான நெஞ்சத்துடன் இருக்கிறார்கள். வேறு சிலரோ, மிகவும் எளிமையாக, 'எல்லாம் சத்குரு பார்த்துக் கொள்வார்' என்கிற எண்ணத்துடன் இருக்கிறார்கள். இது மட்டுமே எனது இந்த சாகசப் பயணத்தை மேலும் பல மடங்கு சாகசமாக்கி விட்டது.

ஆபத்தான கணங்களில்தான் பெரும்பாலான மனிதர்கள் மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்கிறார்கள். இந்த உணர்தலில்தான் பணிவு பிறக்கிறது. பணிவிலிருந்து உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உருவாகிறது. தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற, ஆபத்தான நிலை, எதையும் ஆழமாக பார்க்கும் தன்மையை வழங்குகிறது.

 

21 ஜூலை, 2012

லாசாவில் இருக்கும் பிரம்மபுத்ரா க்ராண்ட் ஹோட்டலில் ஒன்றரை நாட்கள் தங்கியிருக்கிறோம். இந்த ஹோட்டல், பழங்கால திபெத்திய பொருட்களால் நிரம்பியிருக்கும் ஒரு அருங்காட்சியகத்தைப் போல இருக்கிறது. இந்த ஹோட்டலின் சொந்தக்காரரான சீனர், திபெத்தின் பிரதிபலிப்பாய் விளங்கும் இத்தனை அழகும், மதிப்பும் உடைய பொருட்களை வாங்குவதற்கு 30 மில்லியன் டாலர்கள் செலவழித்திருப்பதாக என்னிடம் சொன்னார்.

ஆறு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வந்தபோது பார்த்ததை விட இன்றைய லாசா எதிர்பாராத அளவு வளர்ந்துவிட்டது. 3,00,000 மக்களுக்கு மேல் வசிக்கும் பரந்து விரிந்த நகரமாகிவிட்ட இந்நகரம், பக்தியும், தியாகமும் நிறைந்த ஒரு இளைஞன், நாட்டமே இன்றி தன்னை பகட்டான ஆடைகளால் சுற்றிக் கொண்டதைப் போலத் தோற்றமளிக்கிறது.

நம்த்ஸோ ஏரிக்கு நாங்கள் செல்லும் 250 கிமீ நீளமுள்ள தார் சாலைகளில், கார்கள், மினி வேன்கள், பேருந்துகள் என தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது. திபெத்தில் வண்டி ஓட்டுவது எப்போதும் ஆச்சரியத்தில் மூச்சடைக்க வைக்கும் ஓர் அனுபவமாகவே இருக்கிறது.

பார்க்கப் பார்க்க முடிவற்ற மலைத் தொடர்கள், விவரிக்க முடியாத துக்கத்தையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பச்சை, நீலம், பனியின் வெண்மை, எப்போதும் கலைந்து, சேர்ந்து கொண்டே இருக்கும் மேகக் கூட்டங்கள், எண்ணற்ற வானவில்கள், இவை எல்லாம் மனதுக்கு இதமளிப்பதாகவும், அனைத்துக்கும் உச்சமான அந்த ஒன்றின் அற்புதத்தை எட்டிப் பார்க்கும் வாய்ப்பை வழங்குவதாகவும் உள்ளன.

 

திபெத்

அந்த பச்சைகளும்
அந்த நீலங்களும்
அந்த பனி வெண்மையும்
அந்த மணற் பழுப்பும்
அந்த செம்மையும் வெளிர் நீலமும்
ஓ! முடிவில்லா அம்மலைகள்
சமதரிசியாய் நிற்கின்றன

மேக துவாரங்களினூடே தன்
மனோநிலையை பாவிக்கின்றன
தன் வாட்டத்தையும் உவகையையும் வெளிப்படுத்துகின்றன

நிலையில்லா மனோநிலையை அலங்கரிக்க
எண்ணிக்கையில்லா வானவில்கள் வேறு

தடங்காணா ஆழம் கொண்ட கடந்த காலமும்
ஆவலாய் காத்திருக்கும் இளமையும்

படிந்துப் போன ஒரு புலியும்...
சில நூற்றாண்டுகளின் சரிவும்
அசாத்திய நம்பிக்கையின் துணை வேண்டி நிற்கின்றன

வேதனை துடிப்புக் கொண்ட அதன் மாற்றத்தால்
அன்பு திபெத் பேறுபெறட்டும்

Love & Grace