குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 3

Question: சத்குரு, நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன? நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் செய்கிறீர்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எந்தவிதமான ஆன்மீகமும் ஈஷா ஹோம் ஸ்கூலில் கற்பிக்கப்படவில்லை. சிறிதளவும் ஆன்மீகம் இல்லை. ஒரு குழந்தையின் வாழ்வில் ஆன்மீகத்தினைக் கொண்டுவர நாம் விரும்பவில்லை. உடல் மற்றும் மனநலத்திற்கான சிறு சிறு யோகப்பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறோம், அது வேறு. ஆனால் ஆன்மீகத்தினை கல்வியின் அங்கமாக நாம் கொண்டுவரவில்லை. அப்படி ஒருபோதும் நிகழாது. ஏனெனில் ஆன்மீகத்தினை அவ்வாறு கொண்டுவரக் கூடாது. வேண்டுமானால், கல்வியினை முடித்த பிறகு, அவர்களுக்கு விருப்பமிருந்தால் மூன்று அல்லது ஆறுமாத ஆன்மீகப் பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளலாம். அது அவர்களது விருப்பம்.

யார் வாழ்க்கையைப் பற்றி ஒரு திறந்தநிலையை வளர்த்துக்கொள்கிறார்களோ, அவர்களே வெற்றிகரமான ஆன்மீகத் தன்மையாளராய்த் திகழமுடியும்.

எனவே, இந்தப் பள்ளி எந்த ஆன்மீகத்தினையும் கற்பிக்க முற்படவில்லை. அதேநேரத்தில், மனிதனுக்குள் ஒரு திறந்தநிலையைக் கொண்டுவர விரும்புகிறோம். யார் வாழ்க்கையைப் பற்றி ஒரு திறந்தநிலையை வளர்த்துக்கொள்கிறார்களோ, அவர்களே வெற்றிகரமான ஆன்மீகத் தன்மையாளராய்த் திகழமுடியும். அவருக்கு எதைப் பற்றியும் முடிவான கருத்தில்லை, அவர் அனைத்தையும் காண்பதற்கு தயாராக இருக்கிறார். இந்தப் பள்ளியில் மதரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ அல்லது வேறு எந்தவிதமாகவோ இல்லாமல், அவன் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஒரு திறந்தநிலையில் பார்க்க அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது, முழுமையாகத் திறந்தநிலையில் அவன் வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தினையும் பார்ப்பான். இவ்வாறு நடந்தால், நீங்கள் அவனிடம் ஆன்மீகத்தினைப் பற்றி பேசுவீர்களோ, இல்லையோ, அவன் எப்படியும் ஆன்மீகத்தன்மைக்கு மாறிவிடுவான். ஆன்மீகம், அவனது வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாகிவிடும். ஆன்மீகத்திற்கென ஆசிரமத்திற்கோ அல்லது வேறு எங்கோ போகவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. ஏனெனில், அவன் வாழ்வின் எல்லா அம்சங்கள் பற்றியும் ஒரு திறந்தநிலையை வளர்த்திருக்கிறான். சொல்லப்போனால், கல்வியென்பது ஆரம்பத்திலிருந்தே அவ்வாறுதான் இருக்கவேண்டும். கல்வி கற்பதன் முக்கிய நோக்கமே எல்லைகளை விரிவாக்கத்தான், இல்லையா? ஆனால் நீங்கள் சொல்லுங்கள், மனிதர்கள் கற்கக் கற்க அவர்களது எல்லைகள் விரிவடைகிறதா அல்லது குறுகுகிறதா?

பாருங்கள், ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு உலகில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டுக் குடும்பங்களில்தான் வாழ்ந்தார்கள். இப்பொழுதும் இந்தியாவில் அதுபோன்ற குடும்பங்கள் உள்ளன. முந்நூறு, நானூறுபேர் ஒரேவீட்டில் பெரிய குடும்பமாக வசித்தார்கள். அது பெரிய சிக்கலானதாக இருந்தேயில்லை, ஒருவரோடு ஒருவர் எப்படி ஒத்துப்போவது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனெனில், ஒரே இடத்தில் நானூறுபேர் இணக்கமாக வாழ்வதென்பது பெரும் சவாலான ஒன்று. அதுதான் ஆசிரமத்தின் அடிப்படையே. இப்போது நாம் பழைய கூட்டுக் குடும்பமுறைக்கு திரும்பியுள்ளோம். இது இன்னும் சவாலான விஷயம். ஏனெனில், வெவ்வேறு விதமான கலாச்சாரம், வெவ்வேறுவிதமான மக்கள், வெவ்வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு விதமான கருத்துடையவர்கள், வெவ்வேறு விருப்பு வெறுப்புடையவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கிறோம். எவ்வித உரசலுமின்றி இவ்வாறு ஒன்றாய்ச் சேர்ந்துவாழ அதீத முயற்சியும், வாழ்வை திறந்த நிலையில் எதிர்நோக்கும் தன்மையும் தேவை. இல்லையெனில், இது சாத்தியமில்லை.

ஆனால், தற்போதைய கல்வியினால் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். நமது பெற்றோர்களோடுகூட சேர்ந்துவாழ முடியவில்லை. ஒரு குடும்பமென்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்றே நினைக்கிறோம். கடந்த பதினைந்து, இருபது வருடங்களாக அதுவும் கூட இல்லை. குடும்பம் என்றால் நீங்கள் மட்டும்தான். உங்கள் கணவன் ஒரு தனி வீட்டில், நீங்கள் ஒரு தனிவீட்டில் வாழவேண்டியுள்ளது. இருவரும் ஒரு பத்து நாளைக்கு ஒன்றாய் சேர்ந்திருக்க முடிவதில்லை. குழந்தைகள் வேறெங்கோ தனியாய் இருக்க வேண்டியுள்ளது. ஒரே இடத்தில் இரண்டு, மூன்றுபேர் ஒன்றாய் வாழமுடிவதில்லை. இல்லையா? இன்றைய கல்வி இதைத்தான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இது உங்கள் எல்லைகளை விரிவடையச் செய்யவில்லை. இது எங்கோ உங்களை குறுகிய மனப்பான்மை உள்ளவராகவும், தனிமனிதத் தன்மையுடையவராகவும் மாற்றிவிட்டது.

நீங்கள் எதையும் சேர்த்துக்கொள்ளக் கூடியவராய் இல்லை, நீங்கள் அனைவரையும் பிரித்தே வைக்கிறீர்கள், இல்லையா? அனைத்தையும் சேர்த்துக்கொள்தல் என்பது முழுமையாய் அகன்றுவிட்டது. மனிதன் ஒரு குறுகிய எல்லைக்குள் வாழ்கிறான். நீங்கள், உலகைப் பற்றிய அனைத்தையும் தெரியச்செய்து, வாழ்க்கையைப் பற்றிய அவனது எண்ணம் விரிவடையுமாறு அவனுக்கு கற்பியுங்கள். இதுதான் கல்வியின் முக்கிய நோக்கமே. கல்வியென்றால் சேர்த்துக்கொள்தல், இல்லையா? ஆனால் நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் கல்வி, அவர்களை அனைத்தையும் விலக்கி வைக்கச்செய்கிறது. ஒரு மனிதனோடு கூட அவனால் வாழ்க்கையில் ஒன்றாய் இருக்கமுடிவதில்லை. எனவே இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. இது ஒரு உலகளாவிய பிரச்சினை. இது ஒவ்வொரு தலைமுறையிலும் நடக்கும் சிக்கல். ஏனெனில் அப்படிப்பட்ட கல்வியே வழங்கப்படுகிறது. எனவே, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கல்விமுறையால் நீங்கள் வளரும்போது உங்களுடன் இந்த முழு உலகையும் சேர்த்துக்கொண்டு வளர்வீர்கள், அதுதான் ஆன்மீகம். எனவேதான் அத்தகையதொரு கல்வியை, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கல்வியைக் கற்பிக்க விரும்புகிறோம். கல்வியென்பதே ஆன்மீகம் தான். ஏனெனில், கல்வியென்பது எல்லைகளை விரிவாக்குவது பற்றியது, கடவுள், அது, இது என்று பேசிக்கொண்டிருப்பதல்ல. கல்வியென்பது திணிக்கப்பட்டதாக இல்லாமல், அறிந்துகொள்வதற்கான தாகத்தினை அதிகப்படுத்துவதாகவும், அவர்களது புத்திசாலித்தனம் குறைவுபடாமல் வளருமாறும் இருக்கவேண்டும்.

ஏராளமான செய்திகளை அவனுக்குள் புகுத்தி அவன் தேர்ச்சி பெறவேண்டும், தேர்ச்சி பெறவேண்டும் என்று எதிர்பார்க்காமல், அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தினை, கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற வேட்கையை ஊக்கப்படுத்த வேண்டும். ஈஷா ஹோம் ஸ்கூல் முற்றிலும் வேறுவகையானது. அவர்களுக்கு 16, 17 வயதாகும்போது உலகிலுள்ள எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் ஏற்றவகையில் அவர்களை நாம் தயார் செய்துவிடுவோம். ஆம், அவர்களது தனித்திறமைக்கு ஏற்றவாறு, எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் அவர்கள் தகுதியுடையவர்களாய் இருப்பார்கள். இது தவிர, அடிப்படையாக, வளமாய் வாழ்வது எப்படியென்பதையும் அவர்கள் கற்பார்கள். தங்களை எப்படிக் கையாள்வது, தாங்கள் இன்னும் எப்படி சிறப்பாய் வாழ்வது, மிகவும் முக்கியமாக, தம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் எப்படி வாழ்வதென்றும் கற்றுக்கொள்கிறார்கள். மக்கள் பட்டங்களினாலோ அல்லது பல்கலைக்கழக சான்றிதழ்களாலோ தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பதில்லை, திறமையானவர்களாக இருப்பதால்தான் வெற்றி பெற்றவர்களாக திகழ்கிறார்கள், இல்லையா? அதனால்தான் ஈஷா ஹோம் ஸ்கூல் திறமை சார்ந்ததாயிருக்கிறது, பட்டங்கள் சார்ந்ததாயில்லை. ஏதோ ஒரு சான்றிதழை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனைத் தயார் செய்யாமல், குழந்தை, இயல்பாக எந்தத் துறையில் திறமையாய் உள்ளதோ, அந்தத் துறையில் அவர்களது திறமையை அதிகரிக்கச் செய்வது எப்படியெனப் பார்க்கிறோம்.

அடுத்த வாரம்...

பண்டைய காலத்தில் நிலவிய குருகுல கல்விமுறையைப் பற்றி சத்குருவின் விளக்கம்...

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்