‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர்! குளங்கள் இன்றியும் இந்த உலகம் அமைவதற்கு வாய்ப்பில்லை! அழிந்து வரும் குளங்கள் பற்றியும் அவற்றைக் காக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்தும் இங்கே சில வரிகள்!

பண்டைய தமிழரின் நீர் மேலாண்மை நமக்கு சொல்லித்தருவது என்னவென்றால், இயற்கை தரும் அற்புதக் கொடையான நீரை அணைகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கிணறுகள் என சேமித்து வைத்து பயன்படுத்துதல் அவசியம் என்பதைத்தான்!

ஒவ்வொரு ஆண்டும் குளங்கள் தூர்வாரப்படுமானால், குளங்கள் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரை கொடுத்து, தானும் நன்கு தேக்கி வைத்துக்கொள்ளும். இல்லையென்றால் குளங்கள் இருந்தும் பயனற்றதாகவே இருக்கும்.

‘குளந்தொட்டு கோடு பதித்து’ எனும் சிறுபஞ்சமூலத்தின் பாடல், குளங்கள், வாய்க்கால்கள், பொதுக் கிணறுகள், ஏரிகள் ஆகியவற்றை அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் எனக் கூறுகிறது. நாம் செய்யும் செயலிலும், வாழும் வாழ்க்கையிலும்தானே சொர்க்கமும் நரகமும் உள்ளது?! அப்படியென்றால் இப்போது நாம் இந்த நீர்நிலைகளைக் காக்கத் தவறினால், நமக்குத் தண்ணீர் தட்டுப்பாட்டினால் நரகம் வந்துசேரும் என்பதை மறுப்பதற்கில்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று தமிழகத்தின் பல பகுதிகளில், கிராமங்களிலும் கூட குளங்களும் ஏரிகளும் பராமரிக்கப்படாமல் தூர்ந்து போகும்நிலை உள்ளது. குறிப்பாக குளங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

ஏன் தூர்வார வேண்டும்?!

மழைக் காலத்தில் பெய்யும் மழைகள் முதலில் ஓடைகள் வழியாக, குளங்களை அடைந்து, குளங்கள் நிரம்பிய பின், கண்மாய்கள் ஏரிகளைக் கடந்து, பின் ஆறுகளில் பெருக்கெடுக்கிறது. இப்படி வெள்ளத்தில் கொண்டு வரப்படும் நீரிலுள்ள தாதுக்களும் மணல்களும் குப்பைகளும் மேற்புறத்தில் தேங்குவதால் குளங்கள் நிலத்தடிக்கு நீரினை செலுத்த முடியாமல், மேலோட்டமாகவே நீரினைப் பிடித்து வைக்கிறது. இதனால் கோடைகால வெயிலில் சீக்கிரமாக நீர் ஆவியாகி, குளங்கள் விரைவில் வறண்டுவிடுகின்றன. நிலத்தடியில் நீர் சேகாரமாகாததால், கிணறுகளுக்கும் நீர் வரத்து இல்லாமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குளங்கள் தூர்வாரப்படுமானால், குளங்கள் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரை கொடுத்து, தானும் நன்கு தேக்கி வைத்துக்கொள்ளும். இல்லையென்றால் குளங்கள் இருந்தும் பயனற்றதாகவே இருக்கும்.

இன்று பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குளங்கள் தூர்வாரப்படாமல், பயனற்றதாய் இருக்கின்றன. அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் எதிர்பார்த்து இராமல், தங்கள் ஊர்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள குளங்களை பொதுமக்கள் ஒன்றிணைந்து தூர்வார முன்வருதலே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும். குறிப்பாக இளைஞர்கள் பொறுப்பேற்று செயல்களில் ஈடுபடுதல் தற்போது அவசியமானது. தன் குடும்பம், தன் வீடு, தன் பிள்ளைகள் என குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், விசாலமான பார்வையுடன் பார்த்தால், நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்காக குளங்களையும் ஏரிகளையும் ஆறுகளையும் காப்பாற்றி வைத்து அவர்களுக்கு நாம் பரிசளித்துச் செல்லலாம். இல்லையென்றால், அடுத்த தலைமுறையினர் தண்ணீருக்காக கஷ்டப்படுவதையும் நாம் காண நேரிடும்.

நீர்நிலைகள் சரியாகப் பராமரிக்கப்பட்டால், நீர் வளம் பாதுகாக்கப்படும். தண்ணீர் பஞ்சம் நம்மை நெருங்காது. அதுமட்டுமல்லாமல், நம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவை வழங்கும் விவசாயமும் இந்த நீர்நிலைகளை நம்பித்தான் இருக்கிறது.

இதனை நாம் இப்போது செய்யாமல் விட்டுவிட்டால், மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் நிலத்தடியில் போய்ச் சேராமல், வீணாக போவது மட்டுமல்லாமல், பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் அபாயமும் உள்ளது.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றது. நீர்நிலைகள் காக்கப்படாத பட்சத்தில் பசுமை என்பது பகல்கனவுதான் என்பதை உணர்ந்து, ஈஷா பசுமைக்கரங்கள் இப்பதிவினை வெளியிடுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள ஈஷா பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.