சத்குரு:

நீங்கள் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் என்று சொன்னதால் உங்களுக்கு சாக்குபோக்கு சொல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவர்களை நீங்கள் தேர்வு செய்யவில்லையே! அதுவே உங்கள் மனைவி, கணவராய் இருந்தால், இன்னொருவர் மேல் பழிசொல்லி தப்பித்துக் கொள்ள இயலாது.

உங்கள் கைகளில் என்ன உள்ளதோ அதனை அற்புதமாய் மாற்றியமைத்துக் கொள்ள என்ன செய்வதென்று பாருங்கள். உங்களுக்கு கிடைப்பது என்ன எனப் பார்ப்பது உங்கள் வேலை அல்ல, அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதே முக்கியம். அதுவே உங்கள் வேலை.

உங்கள் எல்லைகளை அறிந்து கொள்ள, குடும்பம் நல்லதொரு பயிற்சி மையம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுடன் மட்டுமே வாழ்ந்து கூட்டுப்புழுவாய் மாறிவிட்டீர்கள். எதைச் செய்தாலும் இன்னொருவர் பாதிப்படையும் படியான சந்தர்ப்பத்தை உருவாக்கி விடுகிறீர்கள். அவர்கள் செய்யும் ஒரு சில விஷயங்களை வெறுத்தாலும், அவர்களுடன் கூடி வாழ வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது. யாரோ ஒருவரை பிடிக்காமல் போனால், வெளியே வீசிவிட இது 10,000 பேர் கொண்ட பேஸ்புக் குடும்பம் அல்லவே!

குடும்பம் என்பது உங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து, வளர்வதற்கான ஒரு இடம். விருப்பும் வெறுப்பும் உங்களுக்குள் நிலவும் நிர்பந்தங்களின் அடிப்படையிலேயே எழுகிறது. விருப்புவெறுப்பிற்குள் உழல்பவராய் நீங்கள் இருந்தால், விழிப்புணர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏதோ ஒன்றை நீங்கள் விரும்பவோ, வெறுக்கவோ செய்கையில் இயல்பிலேயே நிர்பந்தத்தால் செயல்படுபவர் ஆகிவிடுவீர்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நோக்கி சாதகமாயும், பிடிக்காதவற்றின் மீது எதிர்தாக்குதல் செய்யும் மனநிலையிலும் செயல்படுவீர்கள்.

விழிப்புணர்வாய் இருங்கள்...

உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உங்கள் குடும்பத்தாருடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறீர்கள். அதனை கசப்பான அனுபவமாக மாற்றிக் கொள்கிறீர்களா அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து செல்ல பயன்படுத்துகிறீர்களா என்பதே உங்கள் முன் தொக்கி நிற்கும் கேள்வி.

உங்கள் கணவர் பற்றிய சில அம்சங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். சில காலம் கழித்து, “அவர் அப்படித்தான், பரவாயில்லை,” என்று வெறுப்பான மனநிலையை தாண்டி நீங்கள் வளர்வது அவசியம். “ஐயோ, எனக்கு வேறு வழியே இல்லையா, இவருடன் வாழ்ந்தே தீர வேண்டுமா?” எனும் மனநிலையில் இருந்தால், பிறருடன் வாழும்போது ஏற்படும் போராட்டங்களையும், வலிகளையும் வளர்ச்சிக்கான வழியாக மாற்ற மாட்டீர்கள். “அவர்கள் இப்படித்தான், ஆனால் பரவாயில்லை. நான் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்னும் மனநிலையுடன் நீங்கள் வாழும்போது, விழிப்புணர்வுடன் வளர்வீர்கள்.

கட்டாயத்தின் பேரில் செயல்புரியாமல், விழிப்புணர்வாய் நகர்வதே ஆன்மீகப் பாதையில் செல்வதற்கு உண்டான சிறந்த வழி. அந்நிலைக்கு பயிற்சியளித்துக் கொள்ள குடும்பம் சிறந்த இடம். இதில் நீங்கள் நிரந்தரமாய் சிக்கிப் போவதில்லை. நீங்கள் எப்பேர்பட்ட குடும்பத்தில் இருந்தாலும் அது சிறிது காலத்திற்குத்தான். அதனைப் பயன்படுத்தி உங்கள் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி நீங்கள் வளர வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
“உங்களால் யாருடன் ஒன்றி வாழ முடியாதோ அவருடன் சந்தோஷமாய் வேலை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அது அற்புதங்களை நிகழ்த்தும்,” என்று ஆசிரமவாசிகளிடம் நான் சொல்வதுண்டு.

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களுடன் உடன்படாவிட்டால் நீங்கள் நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். “உங்களால் யாருடன் ஒன்றி வாழ முடியாதோ அவருடன் சந்தோஷமாய் வேலை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். அது அற்புதங்களை நிகழ்த்தும்,” என்று ஆசிரமவாசிகளிடம் நான் சொல்வதுண்டு. உங்களைப் போன்றவர்களுடனே இருக்க நினைத்தால், அதுபோன்ற மக்களுடனேயே எப்போதும் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தை அது ஏற்படுத்திவிடும்.

குடும்பம் பிரச்சனையல்ல, ஆனால் உங்களுக்கு பிடித்தமான மக்களுடன் மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும் என்று நீங்கள் நினைப்பதே பிரச்சனை. உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்காதீர்கள். உங்கள் கைகளில் என்ன உள்ளதோ அதனை அற்புதமாய் மாற்றியமைத்துக் கொள்ள என்ன செய்வதென்று பாருங்கள். உங்களுக்கு கிடைப்பது என்ன எனப் பார்ப்பது உங்கள் வேலை அல்ல, அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதே முக்கியம். அதுவே உங்கள் வேலை.

அன்றைய வானிலை எவ்வாறு உள்ளதோ அதைப் பொருத்து, “இது சிறப்பான நாள்,” “இது மோசமான நாள்,” என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். மேகங்கள் சூழ்ந்ததால் அது மோசமான நாள் ஆகாது, வானிலையை இயற்கையிடமே விட்டுவிடுங்கள். ஒரு நாள் வெயில், மறுநாள் மேகம், மற்றொரு நாள் மழை, வேறொரு நாள் பனி, இது இயற்கையின் பணி. வெயில் அடித்தால் மேல் கோட் இல்லாமல் செல்லுங்கள், மழை பெய்தால் ரெயின்கோட்டுடன் செல்லுங்கள், பனி பொழிந்தால் சறுக்கி விளையாடும் பலகையுடன் செல்லுங்கள். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அந்நாளினை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அதேபோல, உங்களைச் சுற்றி தற்போது யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவலை கொள்ள வேண்டாம். அந்த மனிதருடன் உட்கார்ந்திருக்கும் அந்தச் சமயத்தை அற்புதமான தருணமாக மாற்றிக் கொள்ளுங்கள். எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள். நீங்களும் வருகிறீர்கள், போகிறீர்கள். யார் இங்கிருந்தாலும், இந்தக் கணத்தில் அவரிடமிருந்து சிறந்ததையே பெற்றிடுங்கள்.

உங்களுக்கு வேறு சாய்ஸ் இருந்தால் மாறிக்கொள்ளலாம், ஆனால், சந்தோஷமாய் இருக்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால் அது விழிப்புணர்வாய் நடக்கட்டும். கட்டாயத்தின் பேரில் மாற்றம் நடக்கக் கூடாது, உங்கள் தேர்வின் அடிப்படையில் மாற்றம் நடக்கட்டும். தற்போது நீங்கள் இருக்கும் இடத்தில், வேண்டியபடி இருக்க முடியாத பட்சத்தில், வேறெங்குமே உங்களுக்கு வேண்டியதை உங்களால் உருவாக்கிக் கொள்ள இயலாது.

பெற்ற பலன்களை அளவிடுங்கள்...

ஆன்மீகம் உங்களுக்கு வேலை செய்கிறதா இல்லையா என்பதை எப்படி கண்டுகொள்வீர்கள்? பலன்களால் தானே? நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே மக்களுடன் உங்களால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாகவும், சுகமாகவும் இருக்க முடிந்தால், காலையில் எழும்போது அவர்கள் உங்களை எரிச்சலடையச் செய்யாவிட்டால், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம். எல்லா இடத்திலும் பலன்களை வைத்தே முன்னேற்றத்தை கணக்கிடுகிறார்கள். ஆன்மீகத்திலும் அப்படியே!

சொர்க்கவாசலில் பெரிய வரிசையொன்று நின்று கொண்டிருந்தது. உள்ளே சேர்த்துக் கொள்வதற்கு முன், அனைவரது கணக்குகளையும் வாசலிலேயே சரிபார்த்துக் கொண்டிருந்தார் புனித பீட்டர். இத்தாலியில் இருக்கும் வேகாஸ் நகரிலிருந்து டாக்ஸி டிரைவர் வந்திருந்தார், அவருக்குப் பின் பிஷப் நின்றிருந்தார். டிரைவரை கண்ட பிஷப், “இவன் எதற்காக சொர்க்க வாசலுக்கு வந்தான், இவனுக்கு இங்கு என்ன வேலை” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஆனால், கடவுளின் வழி சற்றே விசித்திரமானது என்பது உங்களுக்கே தெரியும். விதியின் வலிமையை நொந்து கொண்ட டாக்ஸி டிரைவர், “சரி நீங்கள் என்னை எங்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள்,” என்றார். கஸ்டமர்கள் எங்கு செல்ல சொல்கிறார்களோ அதற்கு பழகியவர் தானே டாக்ஸி டிரைவர். அவருக்கென்று போக வேண்டிய இடமொன்றும் இல்லையே! அவருடைய பணி அப்படி அல்லவா?

டிரைவருடைய கணக்குகள் சரி பார்க்கப்பட்டன. பெரிய புன்னகையுடன் பீட்டர் டிரைவரை வரவேற்று அருமையான பட்டுடுப்பை வழங்கினார். அழகு தேவதைகள் இருவர் அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மிகுந்த ஆச்சரியத்துடன் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தார் பிஷப். அவருடைய முறை வந்தபோது, பிஷப்பை வரவேற்ற பீட்டர், அவருக்கு வீட்டுவேலை செய்பவருடைய உடையையும், தரை துடைப்பானையும் வழங்கினார். “127வது கூடத்தைப் போய் கூட்டு,” என்று கட்டளையிட்டார். கலங்கிப் போன பிஷப், “பாவப்பட்ட நகரத்திலிருந்து வந்த அந்த டிரைவருக்கு சொர்க்கம், நான் ஒரு பிஷப் எனக்கு தொழிலாளியின் உடையும், வேலையுமா? எதனால்?” என்று பதறினார். புனித பீட்டர், பிஷப்பை பார்த்து, “அமைதியாக
நான் சொல்வதைக் கேள், உன்னால் என்ன பலன் கிடைத்தது என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். நீ பிரசங்கம் செய்த போதெல்லாம் மக்கள் தூங்கிப் போயினர். ஆனால், டிரைவர் டாக்ஸி ஓட்டிய போதெல்லாம் ‘ஐயோ கடவுளே, ஐயோ கடவுளே’ என தெய்வத்தை அழைத்தனர்,” என்றார்.

அதனால், விளையும் பலன்களின்படியே செல்லுங்கள். உங்கள் ஆன்மீகச் செயல்முறை வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள, வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும் உங்கள் உள்நிலையில் பாதிப்பில்லாமல் இருக்கிறீர்களா என்று பாருங்கள். உங்களுக்குள் போராட்டம் இருந்தால், நீங்கள் இன்னும் பிரயத்தனப்பட வேண்டும். யாரும் உங்களை அடித்துச் சித்திரவதை செய்து விடவில்லை, வார்த்தைகளை வீசுகிறார்கள், அவ்வளவுதானே? அவர்களால் சிறப்பாக செய்ய முடிந்ததைச் செய்கிறார்கள். உங்களுக்கு எதைச் சிறப்பாக செய்யத் தெரியுமோ அதை நீங்கள் செய்யுங்கள்.

உங்களை சிறப்பாக வைத்துக் கொண்டால் அவர்களையும் மாற்றக்கூடிய வாய்ப்பு உங்கள் கைகளில் உள்ளது. யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து கூச்சலிடலாம், வசை பாடலாம், ஆனால், உங்களுக்கு நீங்களே ஒரு அகராதியை உருவாக்கிக் கொண்டு, அத்தனை அபத்தமான வார்த்தைகளையும் இனிமையானவைகளாக மொழிபெயர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது தானே? வேண்டுமானால், அனுதாபங்களை அவர்களுக்கு வழங்கலாம்.

சேற்றிலிருந்து செந்தாமரை...

நமக்கு வேண்டாவிட்டாலும், மக்களுடனோ ஏதோ ஒரு சூழ்நிலையுடனோ, பல விஷயங்களில் சிக்குண்டு போயிருக்கிறோம். நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான சாய்ஸ் நம் கைகளில் இருப்பதில்லை. ஆனால், அவர்களுடன் வாழ்ந்து கொண்டே எதனை உருவாக்கப் போகிறோம் என்பது நம் கைகளில் உள்ளது. இதுகுறித்து வேலை செய்தால், வெளிச்சூழ்நிலையும் உங்கள் சாய்ஸாகிவிடும். காலம் செல்லச் செல்ல, சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாய், உங்களைச் சுற்றி அழகான விதத்தில் அரங்கேறுவதை நீங்கள் பார்க்க முடியும்.

உலகைப் பற்றிய என் அனுபவம் பேரற்புதமாக உள்ளது. நான் எங்கு சென்றாலும் மக்கள் அன்பினாலும் சந்தோஷத்தினாலும் கண்ணீர் துளிகளைச் சிந்துகிறார்கள். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?

உலகைப் பற்றிய என் அனுபவம் பேரற்புதமாக உள்ளது. நான் எங்கு சென்றாலும் மக்கள் அன்பினாலும் சந்தோஷத்தினாலும் கண்ணீர் துளிகளைச் சிந்துகிறார்கள். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்? உலகில் உள்ளவர்கள் அனைவருக்கும் இது உண்மை கிடையாது என்றாலும், இந்த உலகம் என்னைச் சுற்றி இப்படித்தான் தன்னை தோரணித்துக் கொண்டிருக்கிறது. நான் எங்கிருந்தாலும் இப்படித்தான் இருப்பேன் என்று என்னை நானே வகைப்படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால், நான் எங்கிருந்தாலும் பேரற்புதம்தான்.

மெல்ல, இந்த உலகமும் நான் எப்படி உள்ளேனோ அப்படியே பாவனை செய்ய துவங்கிவிட்டது. நீங்களும் இதைச் செய்யலாம். உங்களைச் சுற்றி உலகம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை, காலப்போக்கில் அது நடக்கும். உங்களைச் சிறப்பான ஒரு மனிதராக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள், அதுவே நீங்கள் செய்யும் முதல் செயலாக இருக்கட்டும். அதனைப் பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்சனை.

தற்சமயம் அவர்களுக்கு சாக்கடை கால்வாயில் நடக்க வேண்டும் என்று விருப்பம், சலிப்படையும் வரை சாக்கடையிலேயே நடக்கட்டுமே. சாக்கடையில் நடப்போர் ஏதோ ஒரு சமயத்தில் உங்களைத் திரும்பிப் பார்க்கையில், நீங்கள் வாழும் விதத்தால் உங்களைப் போல் வாழ்வதில் அர்த்தம் உள்ளது என்று புரிந்து கொள்ளட்டுமே. அவர்கள் இன்னல் மிகுந்தவர்களாய் இருக்கக் காரணம், அவர்கள் வாழ்க்கையும் இன்னல் உடையதாய், திருப்தி அடையாததாய் உள்ளது. அதனால், பூசல்களின் வடிவில் அவர்களுக்குள் இருக்கும் இன்னல்களே வெளிப்படுகிறது.

முற்றிலும் வேறுவிதமாய் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் அமைத்துக் கொடுங்கள். யோகக் கலாச்சாரத்தில், அதிகப்படியான சகிப்புத்தன்மைக்கு தாமரை உதாரணமாய் சொல்லப்படுகிறது. சகதியும் சேறும் அதிகமுள்ள இடத்திலேயே தாமரை வளமாக வளரும். கசடிலிருந்து பரிசுத்தமான, நறுமணம் கமழும் மலராக அது மலர்கிறது. இது ஆன்மீகம். சாக்கடை என்றால் அலர்ஜியாகிப் போவதல்ல ஆன்மீகம். சாக்கடையோடு சாக்கடையாகிப் போவதும் ஆன்மீகமல்ல. சாக்கடையையும் நறுமணமாய் மாற்றுவதே ஆன்மீகம்.