கிருஷ்ணருடன் சிவன் ஆடிய ராஸ லீலை!

krishnarudan-shivan-aadiya-rasa-leelai

சிவன் – என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 8

சிவனும் கிருஷ்ணரின் ராஸ லீலை பற்றி நிறையக் கேட்டிருந்தார். யோசித்தார் அவர்… ‘அதென்ன கொண்டாட்டம் அது? இத்தனை பேர் இவ்வளவு அருமையாய் பேசும் அளவிற்கு?’ …

விருந்தாவனத்திற்கு குடிபெயர்ந்த போது, பிள்ளையாய் இருந்த கிருஷ்ணரும் மற்ற குழந்தைகளும் ஒரு நாள் விளையாடக் குழுமினர். விளையாட்டின் ஆனந்தத்திற்காகவே எந்த விதிமுறைகளும் இல்லாமல் தமக்கு தோன்றிய வண்ணம் எல்லாம் அவர்கள் விளையாட ஆரம்பிக்க, சற்று நேரத்தில் அதுவே தீவிரமாகி, நடனமாக உருமாறியது. துள்ளலும் துடிப்புமாய், எவ்வித தடையும் இன்றி அவர்கள் அன்று ஆட ஆரம்பித்ததே பிற்காலத்தில் ராஸ லீலை என்று பெயர் பெற்றதாக சொல்வர்.

அக்குழந்தைகள் உற்சாகமாக ஆடத் துவங்கிய சற்று நேரத்திற்குள்ளாகவே சிலர் களைத்துப் போனார்கள். அந்தக் களைப்பில், அவரவர் இருந்த இடத்திலேயே மணலில் சுருண்டு விழத் தொடங்கினார்கள். ஒவ்வொருவராய் சுருண்டு கீழே விழுவதைப் பார்த்த கிருஷ்ணன், தன் இடையில் செருகியிருந்த மாயப் புல்லாங்குழலை எடுத்து வசீகரமாக வாசிக்கத் துவங்கினான்.

மயக்கும் இசை அலை அலையாய் வெளிப்படத் தொடங்கியவுடன் சுருண்டு விழுந்திருந்தவர்கள் அனைவரும் துள்ளலுடன் எழுந்து மீண்டும் அதே தீவிரத்தில், தீயின் ஜுவாலை போல் இப்படியும், அப்படியுமாய் வளைந்து நெளிந்து ஆடத் தொடங்கினார்கள். மையத்தில் கிருஷ்ணன் தனது மாயப் புல்லாங்குழலை இசைக்க, கோபர்களும், கோபியர்களும் அவனைச் சூழ்ந்து கொண்டு உற்சாக நடனம் ஆடினார்கள்.

போகப் போக, அந்த நடனத்திலேயே இதுவரை அனுபவிக்காததொரு ஆனந்த நிலையை எய்தினார்கள். அவர்கள் இதுவரை கண்டறியாத வேறொரு ஆனந்தமயமான உலகில் பிரவேசித்தார்கள். இப்படி ஆரம்பித்த ராஸ லீலையில் தான் சிவன் பங்கு பெற ஆசை கொண்டார். அந்தக் கதை, இதோ சத்குருவின் வார்த்தைகளில்…

சத்குரு:

16 வயதுவரை, ஒரு யாதவ குலத்தினனாய், ஆடி, ஓடி, விளையாடி ஆனந்தமாய் சுற்றித் திரிந்தார் கிருஷ்ணன். 16 வயதில், கோவர்ந்தன மலையில் அவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதில், அவர் யார், எதற்காக அங்கே கிருஷ்ணனாய் பிறந்தார், இனி அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிய வந்தது. அன்றிலிருந்து காலை எழுந்தவுடன் அவர் சிவபூஜையுடன் தான் தன் நாளைத் துவக்குவார். தன் வாழ்வில் ஒரு நாள் கூட அதிலிருந்து அவர் தவறவில்லை. போர்க்களத்தில் கூட, லிங்கபூஜை முடித்த பின்தான் போரில் இறங்கினார். இவரை சிவன் சந்தித்ததற்கு ஒரு அழகான கதை ஒன்று உண்டு…

‘ராஸ் நடனத்தில் கிருஷ்ணர் மட்டுமே ஆணாக இருப்பார். மற்றவர்கள் எல்லாம் பெண்களாகவே இருக்கவேண்டும். நீங்கள் ஆணாக இருப்பதால் நீங்கள் உள்ளே செல்ல முடியாது’
ஒருமுறை கிருஷ்ணர் தனது ‘ராஸ்’ நடனத்தில் ஈடுபட்டிருந்தார். ராஸ் என்பது பரவச நடனம். ஒவ்வொரு பௌர்ணமியும் கிருஷ்ணர் ராஸ் நடனத்தை நிகழ்த்தினார். அந்த நடனத்தில், கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு, இரவு முழுவதும் பரவச நடனத்தில் ஈடுபடுவர். வெறும் சந்தோஷம் கிடைப்பதற்கே விழாக்கள் செய்வர். ஆனால் இதுவோ பரவசக் கொண்டாட்டம். மெய்மறக்கும் அனுபவம். யார் வராமல் இருப்பார்? சிவனும் இதைப் பற்றி நிறையக் கேட்டிருந்தார். யோசித்தார் அவர்… ‘அதென்ன கொண்டாட்டம் அது? இத்தனை பேர் இவ்வளவு அருமையாய் பேசும் அளவிற்கு? நாமும் தெரிந்து கொள்வோம்’ என்று. மெய் மறப்பது போன்ற ஆழமான அனுபவங்கள் இவரின் குழுக்களிலே நிகழ்பவை அல்லவா! அதுவும் இவரது குழுக்கள் எப்பேற்பட்டது..! சாப்பாடு கிடையாது, பானம் கிடையாது, ஆட்டம் கிடையாது, ஒன்றும் கிடையாது…! சும்மா கண்மூடி, ஆடாமல் அசையாமல் இருப்பது அல்லவா..!

அதனால் அவர், ‘இது என்னது… வித்தியாசமாக? நாமும் பார்ப்போம்’ என்று கிளம்பினார். வந்து யமுனை ஆற்றங்கரையை அடைந்தார். அங்கே நின்றிருந்த இரண்டு பெண்கள் அவரை வழிமறித்து, ‘நீங்கள் உள்ளே செல்ல முடியாது’ என்றனர். அதற்கு சிவன், ‘ஏன் கூடாது? எனக்கு எங்கு வேண்டுமோ, அங்கு நான் செல்வேன்’ என்றார். அப்பெண்களோ, ‘ராஸ் நடனத்தில் கிருஷ்ணர் மட்டுமே ஆணாக இருப்பார். மற்றவர்கள் எல்லாம் பெண்களாகவே இருக்கவேண்டும். நீங்கள் ஆணாக இருப்பதால் நீங்கள் உள்ளே செல்ல முடியாது’ என்றனர். அதனால் சிவன், உள்ளே செல்வதற்காக பெண்களின் உடையை அணிந்து கொண்டு உள்ளே சென்று, ராஸில் நடனமாடினார்.

சிவன் ஆண்மையின் உச்சமாக கருதப்பட்டவர். ஆனால் பெண்களின் ஆடை அணிய ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. அதையும் அணிந்து, அன்றிரவு முழுவதும் அவர்களோடு நடனமாடி, அவரும் பரவசத்தில் ஆழ்ந்தார்.

தீவிரம் எனில் சந்தோஷத்திற்கு தடைவிதிக்க வேண்டும், எப்போதும் இறுக்கமாக இருக்கவேண்டும் என்று பொருளல்ல. தீவிரம் எனில், உங்கள் தன்மையே தீவிரமாக இருக்க வேண்டும். உங்கள் நிலை எதுவோ, அது நீங்கள் செய்யும் செயலையும் தொற்றிக் கொள்ளும். அதனால், தீவிரம் எனில் நீங்கள் செய்யும் செயலில் முழு உத்வேகத்துடன் இறங்குவது. அந்நிலையில் சந்தோஷம் என்பதும் தீவிரமான சந்தோஷமாக இருக்கும்.

அடுத்த பதிவில்…

சிவனையும் தன்பால் ஈர்த்த காசியின் மகத்துவம்!

சிவன் – என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert