Question: கோவில்களில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது போன்ற சிலைகள் உள்ளன. அவற்றை மக்கள் பக்தியோடு வழிபட்டு, அவற்றின் மீது மஞ்சள் பூசி, நூல் கட்டும் வழக்கமும் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானப் பின்னணி உள்ளதா அல்லது நமது நம்பிக்கை சார்ந்த விஷயமா?

சத்குரு:

நம் கலாச்சாரத்தில் பாம்பிற்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, இது நம்முள் இருக்கும் வெளிப்படாத சக்தி, அதாவது ‘குண்டலினி’ சக்திக்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது. மற்றொன்று இந்தப் பரிணாம வளர்ச்சியில், ‘பாம்பு’ என்பது ஒரு முக்கியமான படிநிலை. நம் மூளையின் நடுப்பாகத்தை Reptilian brain - ஊர்வன உயிரினங்களின் மூளை என்றே சொல்கிறோம். இந்த ரெப்டீலியன் மூளையைச் சுற்றித்தான் மனித மூளையும் வளர்ந்திருக்கிறது.

இந்தப் ‘பாம்பு வழி’ என்பது ஒரு மகத்தான விஞ்ஞானம். இதன் பயன்களை கணக்கிடத் துவங்கினால், அது முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும். ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைய வேண்டும் என்றாலும், முக்தி வேண்டுமென்றாலும், இவ்வழி ஒன்றே போதும் எனும் அளவிற்கு அதை நாம் பயன்படுத்த முடியும்.

நம் முதுகுத்தண்டு செங்குத்தாக இல்லாமல், கிடைநிலையில் இருந்திருந்தால், இந்த ரெப்டீலியன் மூளை மட்டுமே நமக்கு இருந்திருக்கும். ஆனால், எப்போது நம் முதுகுத்தண்டு செங்குத்தாக நிமிர்ந்ததோ, அப்போது, பூ மலர்ந்ததுபோல் இந்த ரெப்டீலியன் மூளையைச் சுற்றி, நம் மூளையும் மலர்ந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமக்கு ஏற்படும் நிர்பந்தங்களால், நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாத வகையில் நாம் செய்யும் செயல்கள் யாவும் இந்த ரெப்டீலியன் மூளையில் இருந்து வெளிப்படுவதுதான். இந்த நிர்பந்தத்தைத் தாண்டி நாம் செய்யும் செயல்கள் மட்டுமே ‘மனித’ மூளையில் இருந்து பிறக்கின்றன. இதனால்தான், நம் யோகக் கலாச்சாரத்தில், நம்முள் இருக்கும் பாம்பு (குண்டலினி சக்தியின் உருவகம்) இவ்வாறு படுத்திருக்கக் கூடாது, அது நின்ற நிலையில் இருக்க வேண்டும் என்றனர். எப்போது அது மேல்நோக்கி எழும்பி, நம் மூளையை அடைகிறதோ, நம் மூளை முழுமையாய் மலர்ந்திடும்.

ஓவியங்களில், அமர்ந்திருக்கும் யோகியின் தலையில் ஒரு தாமரைப்பூ மலர்ந்து விரிந்திருப்பது போன்ற சித்தரிப்புகளைப் பார்த்திருக்கிறீர்களா? அது, அந்த யோகி ‘ரெப்டீலியன் மூளையின்’ நிர்பந்தங்களைத் தாண்டி மலர்ந்துவிட்டார் என்பதைக் குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. எல்லைகளுக்கு உட்பட்டு சிந்திக்கும் நிலையிலிருந்து, எல்லையற்ற ஒன்றை உணர்ந்திடும் நிலைக்கு அவரின் மூளை விரிவடைந்துவிட்டது என்பதற்கான அடையாளம் அது.

நம் உடலில் இரு தன்மைகள் செயல்படுகிறது. அதை யோகத்தில் ‘ஈடா - பிங்களா’ என்போம். அதையே ‘சிவா - சக்தி’ என்றும் சொல்வார்கள். ‘அர்த்தநாரி’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே? சிவன், பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருக்கிறார். இந்த இருவிதமான சக்திகள் நம் உடலில் இணைந்து செயல்படுவதை சொல்லும் ஒரு குறியீடு இது. ஆனால், இது வெறும் குறியீடு மட்டுமல்ல. மனித உடலை ஒரு எந்திரம் என்று பார்த்தால், அந்த எந்திரத்திற்கான அடிப்படை இவ்விரண்டு தன்மைகளும்தான். அதேபோல், இரண்டு பாம்புகள் இப்படி மூன்று முறை, பின்னிப்பிணைந்த தோற்றத்தோடு இருப்பதை ஒரு யந்திரமாக நாம் பயன்படுத்தினோம். ஒரு சக்தி சூழ்நிலையை வெளிப்படுத்தி, அது ஒரு யந்திரமாக செயல்படும்போது, அதனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள நமக்கு ஆர்வம் வந்தது. அதன்மீது இருக்கும் கயிற்றை எடுத்து நம் உடலில் நாம் கட்டிக் கொள்வது ஒரு வழி.

மற்றொன்று, நம் உடலில் ஏதேனும் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டிருந்தால், அதை எடுப்பதற்காக நம் உடலில் ஒரு கயிறு கட்டும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்தது. அக்கயிற்றை மூன்று, பதினொன்று, முப்பத்துமூன்று அல்லது நாற்பது நாட்களுக்கு உடலோடு வைத்திருந்துவிட்டு, அதன்பின் அதை எங்கோ கழற்றி வீசிடாமல், அதை இதுபோன்ற சக்திவாய்ந்த இடங்களில் கட்டிவைத்தால், அச்சக்தி சூழ்நிலையில் அந்த எதிர்மறைத்தன்மை நாசமாகும். அவ்வாறு இல்லாமல், அது வேறுயார் கைகளிலும் கிடைத்துவிட்டால், அதை அவர்கள் வேறுவிதமாக உபயோகப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில்தான் இவ்விடங்களில் கயிறுகட்டும் வழக்கம் உண்டானது. மற்றபடி சும்மா அங்கு கயிறு கட்டுவதில் பலனில்லை.

நம் கர்மவினைகளை கரைப்பதற்கு இது சக்திவாய்ந்த கருவி. இதற்கு இன்னும் பலவிதமான தன்மைகள் இருக்கிறது. உடலளவில், மனதளவில், சக்திநிலையில்... ஏன் ஆன்மீக நிலையிலும் கூட நமக்கு உதவும் வகையில் அதனை உருவாக்கலாம். ஆனால், இதுபோன்ற சிலைகள் பல இடங்களில் சாதாரணமாகச் செதுக்கப்பட்ட கற்களாகவே தென்படுகிறது. ஏதோ ஒருசில இடங்களில் மட்டுமே இவற்றை விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார்கள். இதைக் கொஞ்சம் கவனமாக உருவாக்கினால், மனிதனின் நன்மைக்கு அதைப் பல வழிகளிலும் பயன்படுத்த முடியும். இவ்வழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, பழம்பெரும் கலாச்சாரங்கள் எல்லாவற்றிலுமே இத்தன்மையை மனிதனது நன்மைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தப் ‘பாம்பு வழி’ என்பது ஒரு மகத்தான விஞ்ஞானம். இதன் பயன்களை கணக்கிடத் துவங்கினால், அது முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கும். ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைய வேண்டும் என்றாலும், முக்தி வேண்டுமென்றாலும், இவ்வழி ஒன்றே போதும் எனும் அளவிற்கு அதை நாம் பயன்படுத்த முடியும். ஆனால், அனைவராலும் அதுபோன்ற ஆன்மீகச் சாதனைகளில் ஈடுபட முடியாது. இருப்பினும் அதுபோன்ற சக்திவாய்ந்த வழி ஒன்று இருக்கிறது என்பதற்கு அடையாளச் சின்னமாக, அங்கங்கு சிறு அளவுகளில் இது வெளிப்பட்டிருக்கிறது. இதையே மிகச் சக்திவாய்ந்த வகையிலும் நாம் உருவாக்க முடியும். நம்மிடம் அதற்குத் தேவையான ஞானமும், அறிவும் இருக்கிறது. ஆனால், அதைச் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையையும், பங்களிப்பையும் உருவாக்க வேண்டும். அது இருந்தால் இதை ஒரு மாபெரும் சக்தி எந்திரமாகவே உருவாக்கலாம்.

சாதாரணமாக, எந்திரம் என்பது நம்மால் செய்யமுடியாததை செய்யும் கருவி, அல்லது நாம் செய்வதையே இன்னும் திறம்படச் செய்யக்கூடிய கருவி. உதாரணத்திற்கு, ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்வோம். நம்மால் நடக்கமுடியாது என்றா அதை உருவாக்கினோம்? நமக்குக் கால் இருக்கிறது. நம்மால் நடக்கமுடியும். நாம் நடக்கும் வேகம் நமக்குப் போதவில்லை, அதனால் சைக்கிள் வந்தது. சைக்கிளின் வேகம் போதவில்லை என்றால் இன்னொன்று. இப்படியே விமானம், அதுவும் போதாமல் வேறொன்று என்று புதுப்புது எந்திரக் கண்டுபிடிப்புகள் நடந்துகொண்டே இருக்கின்றன. விமானம் நாம் உருவாக்கிய எந்திரம்தான், ஆனால் நம்மைவிட அதிக ஆற்றலோடு செயல்படக்கூடிய திறன் அதற்குண்டு. அதற்காகத்தான் எந்திரங்களை உருவாக்கினோம். பின்னிப்பிணைந்த பாம்புகளும் ஒரு எந்திரம்தான், ஆனால், சக்திநிலையில் செயல்படும் எந்திரம்.

“எந்திரம் என்கிறீர்கள், ஆனால் கோவிலில் இருக்கும் அந்தக் கல் அங்கு சும்மாதானே உட்கார்ந்திருக்கிறது...” எனக் கேட்கிறீர்களா? ஆம், அது எவ்வித செயலும் செய்யாமல், சும்மா அமர்ந்திருக்கும். இப்போது உங்கள் செல்ஃபோனில் ‘சிப்’ உட்கார்ந்திருக்கிறதே... அது உங்கள் காதுக்குள் வந்து பேசுகிறதா என்ன? இல்லையே! அதுபாட்டிற்கு சிவனே என உட்கார்ந்திருக்கிறது. ஆனால், நடக்கவேண்டிய வேலை சரியாக நடக்கிறது அல்லவா? இதுவும் அப்படித்தான்.