தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது... மழையின் மீது தான் கொண்ட காதல், அந்த மழை நமக்கு தரும் ஆன்மீக வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பகிரும் சத்குரு, அதைப் பற்றி ஒரு கவிதையும் வடித்துள்ளார். படித்து மகிழுங்கள்!

ஒரு விஷயம் எனக்கு எப்பொழுதும் புரிவதே இல்லை. மழை பெய்ய ஆரம்பித்தவுடன் அனைவரும் ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். ஏதோ சர்க்கரையாலோ, உப்பாலோ செய்தது போல, கரைந்து விடுவோம் என்று ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். நான் ஏதோ வகுப்பிலோ அல்லது பொது நிகழ்ச்சியிலோ கலந்துகொள்வதாக இருந்தால் நானும் கொஞ்சம் ஓடத்தான் செய்வேன். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது குறிப்பிட்டவிதமாக இருக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி குழந்தையாக இருந்த பொழுதே, மக்கள் ஏன் மழையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள் என்று எனக்கு புரிந்ததில்லை. எனக்கு நான்கு வயதாக இருக்கும் பொழுது மழை ஆரம்பித்த நொடியில் என் பெற்றோர் "ஓடு, ஓடு, ஓடு" என்று, ஏதோ தீ பற்றி எரிவது போல கத்த ஆரம்பித்து விடுவார்கள். சுற்றிலும் ஏராளமான திறந்த வெளி இருந்த இடத்தில் நாங்கள் வசித்தோம். மைசூரில் பருவ மழை அபரிதமாக இருக்கும். மழை கொட்டிக் கொண்டிருக்கும், அதில் நான் நனைந்து கொண்டிருப்பேன்.

கோடையின் முதல் மழை என்பது எனக்கு பரவசமான ஒன்று. மழைத்துளி என் மேல் விழும் பொழுது உற்சாகத்தால் நான் துள்ளிக்குதிப்பேன். சிறிது காலத்துக்கு பிறகு, குறிப்பிட்ட ஒரு அனுபவம் என் வாழ்வை மாற்றிய பின், அது மேலும் ஆழமானது. அதற்கு முன்னால் நான் அதை அனுபவித்தேன், ஒரு குறிப்பிட்ட விதத்தில் அது எனக்கு பரவசத்தைக் கொடுத்தது. ஆனால் பின்னர் மழையில் இருப்பது என்பது எனக்கு மிகப் பெரிய ஒரு அனுபவமாக இருந்தது. வீட்டுக்குள் ஒரு முற்றம் இருக்கிறது. மழை உள்ளேயே பெய்யும். நானும் அதில் நனைவேன்.

உங்கள் உடலில் 72% தண்ணீர்தான். நீங்களே ஒரு தண்ணீர் பாட்டில்தான். உங்கள் வாழ்வில் இதுதான் (உடல்) முக்கியமான ஒரு நீர் நிலை. இந்த தண்ணீர் என்னும் அம்சத்தை "நான்" என நீங்கள் அனுபவித்தால் மழை ஒரு அற்புதமான நேரமாக இருக்கும்; இயற்கையோடு பெரிய அளவில் நீங்கள் உறவாட முடியும். மழை உங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தும். மழை ஒரு தொடர்பு. ஏனென்றால் நீங்களே உங்கள் மீது மழையாக பொழிகிறீர்கள், வேறு ஏதோ ஒன்றல்ல. மழை எனக்கு ஒரு சக்தி மிக்க ஆன்மிக அனுபவம். எப்பொழுதுமே அப்படிதான் இருந்திருக்கிறது.

ஈஷா ஹோம் ஸ்கூல் ஆரம்பித்த சமயம், பருவ மழை காலமாக இருந்ததால் பெரும் மழையும் காற்றுமாக இருந்தது. குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்று ஆசிரியர்கள் வந்து என்னிடம் கேட்டார்கள். குழந்தைகளை அருகே இருக்கும் ஓடைக்கு மழை பெய்யும் பொழுது அழைத்துச் செல்லுங்கள். மழை எப்படி இருக்கிறதோ அதை அவர்கள் அப்படியே அனுபவிக்கட்டும் என்று சொன்னேன். நீங்கள் மழையில் சொட்ட சொட்ட நனையும் பொழுது, உங்களுக்கும், உங்களை சுற்றி இருக்கும் பஞ்ச பூதங்களுக்கும் எந்தவொரு பெரிய வித்தியாசமும் இல்லை என்பது புரிய வரும். நீங்கள் ஈரமாக இல்லாத சமயம் இதை உணர முடியாது. ஈரமாக இருக்கும் பொழுது இது புரியும். அதனால்தான் இந்தியாவின் பல கோவில்களில், உள்ளே செல்லும் முன் குளத்தில் முழுகும் வழக்கம் இருந்தது. துரதிருஷ்டவசமாக இந்த குளங்கள் முக்கால்வாசி இப்பொழுது இல்லை. நீரில் நனைந்த பின், தெய்வீகத்தை புரிந்து கொள்ளும், தொடர்பு கொள்ளும் உங்கள் திறன் சற்று மேம்படுகிறது.

தீர்த்த குளங்களின் ஒரு அடிப்படை இதுதான். தண்ணீர் வேறு ஒரு வகையில் சக்தியூட்டப்படுகிறது, பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் அது தண்ணீர்தான்.

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம். ஆனால் நீங்கள் அதை உணர நுட்பமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த சக்தி வெறும் காற்றுநிலையில்தான் இருக்கிறது. தண்ணீர் மக்களுக்கு எளிதான ஒன்று. தியானலிங்கம் சிலருக்கு சக்தி வாய்ந்த அனுபவமாக இருந்தாலும் மற்றவர்கள் ஒரு வியப்பில் தான் உள்ளே அமர்ந்து இருப்பார்கள். என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு புரிவதில்லை. அந்த அனுபவத்தை அவர்களால் உணர முடிவதில்லை. அதற்காகவே தீர்த்தகுண்டங்களை உருவாக்கினோம். மக்கள் நீரை உணரட்டும். பிறகு தியானலிங்கத்தில் உள்ள வெளியை உணர்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். இது ஒரு ஆரம்பப் படிநிலை தான். ஆனால் தியானலிங்கத்தை விட தீர்த்தகுண்டம் பிரபலமாகி வருகிறது.

பருவமழை காலத்தை முழுவதும் அனுபவித்து, நனைந்து படைப்பின் கூறுகளோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் உடல் இருப்பின் எல்லைகள் கடந்து வாழ்வை உணருங்கள். உடலின் கட்டுபாடுகளை உடைத்து, கடந்து செல்லும் வாய்ப்பு இது. படைப்பின் அரவணைப்பில், படைப்பின் மூலத்தோடு நெருக்கத்தில் இருக்கும் ஆனந்தத்தை உணருங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பருவ மழையோடு கலந்து பரவசத்தின் துளிகளை உணருங்கள்.
மழையே மழையே போ என்று ஒருபோதும் சொல்லாது இருப்பீர்களாக!

பருவமழை

கொட்டும் மழையும் சிவந்த மண்ணும்

சங்கமித்து கலக்கின்றன காதலர்கள் போலே

கிறங்கச் செய்யும் அடங்கா ஆவலும்

தன்னைத்தானே கரைத்துக் கொள்ளும்

அசையா நோக்கமும்

ஒன்றோடொன்று கலந்து

மற்றொன்றை அறிய துடிக்கிறதே!

தன்னை அழித்து, மற்றொன்றுடன் கலக்கும் ஏக்கம் இதுதானோ!

அழிவில்லா கைகள் இவற்றை பிரித்து வைத்ததும்

அழிவுடைய வெற்றுக் காய்களாய் இவற்றை இணைத்துப் போடத்தானோ!

சிவந்த மண்ணும் கொட்டும் வானும்

சேர்ந்தது சேறாய் குழைந்து கிடப்பதற்கல்ல

வாழ்விற்கு புத்துயிரூட்டி உயிரற்றதை உணர்ச்சியற்று வைத்திருக்கவன்றோ!

பூமியும் வானமும் புணர்ந்தது

மரமாய், மலராய், கனியாய் வெளிப்படவன்றோ!

இந்த மண்ணும் உயிர்களை இனவிருத்தி செய்யும்...

இவ்வுயிர்களில்தான் அந்த தெய்வீகமும் குடிகொள்ளும்!

  மிக்க அன்பும் அருளும்,

Sadhguru