7 பிள்ளைகள், 16 பேரப் பிள்ளைகள் என அனைவருக்கும் தன் கை வைத்தியம் பார்த்து சோடைப் போகாத மருத்துவச்சி நம்ம உமையாள் பாட்டி. பாட்டி கைவச்சா பலிக்காததும் பலிக்கும், செழிக்காததும் செழிக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டது ஒரு காலம். இதோ இந்தத் தொடரின் மூலம் நம் பாட்டியின் கொல்லைப்புற இரகசியங்களை உங்கள் வீட்டில் விதைக்க வருகிறோம்...

டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

"ஏ புள்ள பேச்சி! பொடிசு, ரெண்டு நாளா இருமிகிட்டே இருக்கானே, அந்த கொல்லையில கெடக்குற தொளசி, திப்பலி தழைய பறிச்சு கொண்டாடி, சுக்கு தட்டி காச்சி கொடுக்கறேன்," என வீட்டு வைத்தியர்களாய் மருந்துடன் அன்பையும் குழைத்து கொடுத்தது பாட்டிகளின் இராச்சியம்!!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்றோ, "உச்" என்றாலும் சரி "அச்" என்றாலும் சரி, "ஓடு டாக்டர்ட, முழுங்கு ஆண்டிபயாடிக்க!" என நவீன பாட்டிகளும், தாய்மார்களும் இதற்கு முடிவுரை எழுதி வருகிறார்கள். போதாத குறைக்கு ராக்கெட் விலை ரியல் எஸ்டேட்டால், குறுகிப்போன வீட்டுக் கொல்லைப்புரங்களில், "துவைத்த துணிகளை காயவைக்கவும், கழுவிய பாத்திரங்களை பரப்பி வைக்கவுமே இடமில்லையாம், இதுல மூலிக செடிக்கு எங்க போறது?

"இந்த T20 காலத்தில இலை, தழை எல்லாம் வொர்க் அவுட் ஆகாதுங்க!" எனும் மேம்போக்கு மேதாவித்தனத்தின் தாக்கம் அதிகரிக்க, இன்னும் பல காரணங்களால் இன்று ஓரங்கட்டப்படுகிறது நம் கை வைத்திய கலாச்சாரம்.

"மனிதன் தன் வாழ்க்கையில், ஆரோக்கியமாக இருப்பதுதான் இயற்கை. எப்போதாவது வந்து போனால்தான் அது நோய். ஆனால் இன்றைய காலகட்டத்தில், தினசரி வாழ்க்கையில் நோயாளியாக இருப்பது இயல்பாகிவிட்டது!" என தனக்கே உரிய பாணியில் ஆரோக்கியம் குறித்த சமூகத்தின் மாறி வரும் பார்வையை பதிவு செய்கிறார் சத்குரு.

"ஓகே! ஆரோக்கியமா இருக்க மூலிகைகளை பற்றி தெரிஞ்சிக்கறதுக்கும், இப்போ இருக்குற வாழ்க்கைமுறைக்கு ஏத்த மாதிரி பயன்படுத்திக்கிறதுக்கும் ஆர்வம்தான்! ஆனா எப்படி?" எனும் உங்கள் கேள்விக்கு பதில் நம் உமையாள் பாட்டிதான்!

80 ஐ கடந்தும் தன்னுடைய எந்த வேலைக்கும் யார் துணையுமின்றி உடலிலும் மனத்திலும் உற்சாகம்தான் போங்க. இன்றும் "B", "C" டவுன்களில் இவர்போல் நடமாடும், தாத்தா பாட்டிகளை நம்மால் காணமுடியும். அவர்களில் ஒருவர்தான் இந்த உமையாள்!

7 பிள்ளைகளை சுகமாய்ப் பெற்றவள்; 16 பேரப் பிள்ளைகளைத் தூக்கி வளர்த்தவள்; "அப்பல்லாம் ஏது கண்ணு ஆஸ்பத்திரி? ரொம்ப அவசரத்துக்குதேன் வெள்ள கோட்டு டாக்டரு! மத்ததுக்கெல்லாம் நாந்தாம்பா டாக்டரு. இலை, தழைதான் மருந்து! ஆறு பிள்ளைகளும் நல்லா தான்யா வளந்துது!

16 பேரன், பேத்தி... 16க்கும் என் கை வைத்தியந்தேன்! ஒன்னும் சோட போகலியே...!" எனும் இந்த வெள்ளந்தி உமையாள் பாட்டி இனி நம்மோடு பயணிக்கிறாள்! தன் தோட்டத்தின் கதவுகளை நமக்காகத் திறந்து, அந்தக் கொல்லைப்புற ரகசியங்களை பரிமாறுகிறாள்! அவள் பின் செல்லலாம்! வாருங்கள்!


வரும் வாரங்களில் பாட்டியின் கொல்லைப்புற ரகசியங்களை நம்முடன் ரகசியமாய் பகிரவிருக்கிறார் ஈஷா ஆரோக்யா மருத்துவர், டாக்டர். திரு. சாட்சி சுரேந்தர். ரகசியமாய் அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்...