தன் வேலைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு கழுதையை விலைக்கு வாங்க, சந்தைக்குப் போனார் சங்கரன் பிள்ளை. அங்கே ஒரு கழுதையைத் தேர்ந்தெடுத்து, அதை விற்க வந்தவரிடம் அது எப்படிப்பட்டது என்று கேட்டார். “இது ரொம்ப ரோஷக்காரக் கழுதை, இதை நீங்க திட்டக் கூடாது. அடிக்கவும் கூடாது. அவ்வளவு ரோஷமான கழுதை” என்றார் விற்பவர். சங்கரன் பிள்ளைக்கு அதைக் கேட்டதில் மகிழ்ச்சி. உடனே அதை வாங்கிக்கொண்டார்.

அடுத்த நாள் காலை அந்தக் கழுதையிடம் சென்று, “வா, கிளம்பலாம்“ என்றார். அது அசையவே இல்லை. கெஞ்சினார். தள்ளி நின்று மண்டியிட்டுக் கெஞ்சினார். கழுதை ஒரு அடிகூட நகரவில்லை. அதைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாதென்றால், என்னதான் செய்வது? விற்றவரிடமே போய் முறையிட்டார். “ஐயா, கழுதை ஒரு அடிகூட நகர மாட்டேங்குது, எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேன், கால்ல விழக்கூடத் தயாராத்தான் இருந்தேன். ஆனா அப்படிப் பண்ணலை. ஓங்கி ஒரு உதைவிட்டா என்ன பண்றதுன்னு பயம், நான் என்ன செய்யட்டும்?” என்றார்.

கழுதை வியாபாரி, “அப்படியா?” என்று கேட்டுவிட்டு ஒரு பெரிய மரக் கழியை எடுத்து மடேர் என்று அதன் முதுகில் அடித்தார். கழுதை நடக்கத் தொடங்கியது. பிள்ளைக்குக் கோபம், “யோவ்!, நீதானய்யா அது ரோஷக்காரக் கழுதை, திட்டக் கூடாது, அடிக்கக் கூடாதுன்னு சொன்னாய்! இப்ப இப்படிப் போட்டு அடிக்கிற?” என்று கொந்தளிக்க, கழுதை விற்றவர், “உண்மைதான்! ஆனா முதல்ல அதனோட கவனத்தை ஈர்க்கணுமே” என்றார்.

சில நேரங்களில் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப இப்படியெல்லாம் நாம் செய்தாக வேண்டியுள்ளது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.