இந்தவார சத்குரு ஸ்பாட்டில், வருகின்ற சர்வதேச யோகா தினத்திற்கான திட்டங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சத்குரு, சில முக்கிய நிகழ்வுகள் பற்றிக் கூறுவதோடு, இவ்வருடம் ஈஷாவின் கவனம் குழந்தைகள் மீது இருக்கப்போவது குறித்தும் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி, ஈஷா யோகா சென்றடையும் மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. என் கால்களை brake-ல் வைத்து என் பயணங்களைக் குறைக்க முயற்சித்து வருகிறேன், ஆனால் இந்த வண்டியின் மூன்று pedal-களுமே accelerator-கள் போலத் தெரிகிறது. வருகிற வாரங்கள் இதுவரை இருந்திராத அளவு மிகவும் busy-ஆக இருக்கப் போகிறது. சாதாரணமாக என் வயதில் எல்லோரும் ஓய்வு பெறுவார்கள். எனக்கோ புதிதாய் ஒரு வாழ்க்கை இப்போது துவங்குவது போலவே தோன்றுகிறது. ஆனால் சோம்பல் முற்றிப்போய் bore அடிப்பது தாங்காது இறந்துபோவதற்கு பதிலாக, அயராது வேலை செய்த அலுப்பினால் இறப்பதே மேல்.

நாம் பரிமாறக் காத்திருக்கும் விஷயத்தின் பிரம்மாண்டத்தையும் தாக்கத்தையும் உலகம் உணரத் துவங்கியுள்ளது. இன்று உலகெங்கும் பல துறைகளில் நமக்குக் கதவுகள் திறந்துள்ளன-வர்த்தகம், அரசியல், கல்வி, மற்றும் பிற துறைகளிலும் கதவுகள் திறந்துள்ளன. தனிப்பட்ட முறையில் கதவுகள் திறந்திருப்பது எனக்கு ஒரு பெரிய விஷயமல்ல. அற்புதமான விஷயம் என்னவென்றால், ஆன்மீக செயல்முறைக்குக் கதவுகள் திறந்துள்ளன, இதனால் பலனடைபவர்களுக்கும் உலகம் முழுவதற்கும் இது அற்புதமான விஷயம். சில கோடி மனிதர்களின் வாழ்க்கையையாவது நம்மால் சக்திவாய்ந்த முறையில் மாற்றமுடியும் என்றால், நாம் இறந்தபிறகும் இவர்கள் மாற்றத்திற்கான விதைகளை பெருகச் செய்வார்கள். என் குருவிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட இந்த விதை மிக வீரியமானது. நாம் போகுமிடமெல்லாம் மண் தயாராகக் காத்திருக்கிறது. சீக்கிரமே அபாரமான அறுவடையும் கிடைக்கும்.

அதிக எண்ணிக்கையிலான மனிதர்களை இது சென்றடைவதற்கு சர்வதேச யோகா தினம் அற்புதமான மேடையாகத் திகழ்கிறது. இவ்வருடம் மனிதகுலத்தின் மிக முக்கியமான பிரிவினரான குழந்தைகளை நாம் சென்றடைய விரும்புகிறோம். முதலில் இந்தியா முழுவதிலும் குறைந்தது பத்தாயிரம் பள்ளிகளை தொடுவதே என் திட்டமாக இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 800 முதல் 900 குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியானால், நம்மால் 80 லட்சம் முதல் 90 லட்சம் குழந்தைகளை அடைய முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சென்ற வாரத்தில், 48 மணி நேரத்தில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த மாநிலத்தின் முதல்வர்களை சந்தித்தபோது கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது, இது 10,000 பள்ளிகளுக்கும் மேல்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மற்றும் இராஜஸ்தான், மஹாராஷ்டிரத்திலும் செய்வோம் என்று நினைக்கிறேன் - இப்பகுதிகளில் நாம் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். வெறுமனே பார்த்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சென்றடைவது சாத்தியமில்லாதது போலத் தோன்றும், ஆனால் அதை நிகழ்த்துவதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன.

கடந்த சில வருடங்களில் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றால், சமூகத்தில் அடிப்படையாகவே ஏதோ தவறாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு முக்கிய காரணம், அவர்களால் கல்வி மற்றும் தேர்வுகள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், இராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டத்தில், தற்கொலை செய்துகொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் அங்கு coaching மையங்களில் படிக்கிறார்கள்.

இக்குழந்தைகள், மிகுந்த அழுத்தத்தில் இருப்பதால் சிலர் உடைந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இக்கல்வி நிறுவனங்கள் அனைத்துடனும் நாம் தொடர்புகள் உருவாக்கியுள்ளோம், நம் ஆசிரியர்கள் அங்கு உப-யோகா மற்றும் ஈஷா க்ரியா பயிற்களை கற்றுக்கொடுக்க ஆர்ம்பித்துவிட்டார்கள். அடுத்த ஒன்றரை மாதங்களில் இந்த 1,50,000 மாணவர்களிடமும் ஏதோவொரு எளிமையான யோகப் பயிற்சியாவது இருக்கும்.

அதனால், இவ்வருட சர்வதேச யோகா தினத்தில் நம் கவனம் குழந்தைகள் மீதுதான் பிரதானமாக இருக்கப்போகிறது. அது தவிர, தேசத்திற்குள்ளும் வெளியும் பல நிகழ்ச்சிகளை நாம் நடத்தவிருக்கிறோம். பல தொழில் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைச்சகங்களுக்கும் நாம் யோகாவை கொண்டுசெல்வோம்.

யோகா தினத்தன்று, அதாவது ஜூன் 21-ல், நான் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற இருக்கிறேன். அதோடு, சர்வதேச யோகா தினத்தின் அங்கமாக, தீவிரமான ஹடயோகா கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு, ஈஷா யோகா மையத்தில் 21-நாள் ஹடயோகா பயிற்சி வகுப்பையும் நடத்தவுள்ளோம். விருப்பமிருக்கிறது, ஆனால் 21 நாட்கள் வர நேரமில்லையென்றால், பாரம்பரிய ஹடயோகா கற்றுக்கொள்ள 8 நாட்களுக்கு, மே 26 முதல் ஜூன் 2 வரை வரலாம்.

ஹடயோகாவின் பல்வேறு பரிமாணங்களை கற்றுணர இந்த 8-நாள் நிகழ்ச்சி ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கப் போகிறது. ஒருவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை முறை இருந்தாலும் இதனை தினசரி வாழ்க்கையின் அங்கமாக்கி பலன்பெற முடியும். இல்லாவிட்டால் வயதாகும்போது, யோகா செய்பவர்கள் அவர்கள் வயதையும் மீறி துள்ளித்திரிவதைப் பார்த்தால் நீங்களும் யோகா செய்திருக்கலாம் எனத் தோன்றும். உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது இப்படி வருத்தப்படும் நிலை ஏற்படும்வரை தாமதிக்காமல், உங்கள் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுவதற்கான வாய்ப்பினை இந்நிகழ்ச்சி வழங்குகிறது. நீங்கள் இன்னும் நலமாக இருக்கும்போதே இதில் பங்குபெற்று சாத்தியங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கைக்கு உங்களைத் தயார்செய்திடுங்கள்.

உங்கள் உடலை நல்லபடியாக தயார் செய்துகொள்ளாவிட்டால், தியானத்தின் ஆழமான பரிமாணங்களை அணுகுவதும், ஆன்மீக செயல்முறையின் பிற அம்சங்களை ஆராய்ந்துணர்வதும், மெய்ஞான சாத்தியங்களை உணர்வதும் குறித்த பேச்சிற்கே இடமில்லை. பூமியில் 95 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மனிதர்கள், தங்கள் உடலை ஹடயோகா செய்து தயார்செய்யவில்லை என்றால் நீண்ட நேரத்திற்கு தியானத்தில் உட்கார முடியாது என்றே சொல்வேன். மூன்று முதல் ஐந்து சதவிகித மக்களால் மட்டுமே அவர்களின் கர்மவினையினால் உடலைத் தயார் செய்துகொள்ளாமலேயே தியானநிலைகளில் நிலைகொள்ள முடியும்.

ஹடயோகாவை அதன் பாரம்பரிய வடிவத்தில், உங்கள் உடலமைப்பை உணர்ந்துகொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த அறிவியலாய் வழங்குகிறோம். இந்த 8-நாள் ஹடயோகா நிகழ்ச்சியின் தனித்தன்மை, இதில் ஒருநாள் நானே நேரடியாக வந்து வகுப்பு நடத்தி கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்.

இதன் இன்னுமொரு சிறப்பு, இங்கேயுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் நிறைந்திருக்கும் அருளுக்கு நீங்கள் பாத்திரமாக ஏதுவாய், ஒரு விசேஷமான ஆன்மீக சாதனத்தையும் உங்களுக்கு வழங்கவிருக்கிறேன். உங்கள் உடலமைப்பை நீங்கள் இன்னும் ஆழமாக உணர்ந்து, அது எப்படி வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்துவது என்று பார்ப்பதற்கு உதவியாக உங்களுக்கு சில பாடங்களையும் நடத்துவோம். புத்திசாலித்தனமான, நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஞானம் எந்தவொரு மனிதருக்கும் அத்தியாவசியமானது.

Love & Grace