சத்குரு:

என்னை வெகு நாட்களாக அறிந்துள்ள சில பேர் “சத்குரு எதற்கு காசி யாத்திரை செல்கிறார்? ஓ! வயதானதால் அவருக்கு மனது மென்மையாகி விட்டதோ,” என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். அது இருக்கட்டும், நான் காசிக்குச் செல்லக் காரணம் என்ன?

இந்தப் பிரபஞ்சத்தை இரண்டு விதங்களில் அணுக முடியும். கடவுள் எங்கோ உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் அவருக்கு வேலை இல்லாதபோது இயற்கையை உருவாக்குகிறார் என்று நம்புபவர்கள் ஒரு ரகம். கடவுள் நம் அனுபவத்தால் புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளவர். அவருக்கும் இந்த படைத்தலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீசியெறியும் பொருட்கள்தான் இந்த பிரபஞ்சமாக உருபெற்றுள்ளது என நம்புபவர்களும் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை இரண்டாவது வகை.

படைத்தலை பார்ப்பதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள். இவர்கள் படைப்பை ‘காஸ்மோஜெனிக்‘ என்கிறார்கள். காஸ்மோஜெனிக் என்னும் வார்த்தை, “cosmos + genesis” என்னும் இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவாகியுள்ளது. கிரேக்கத்தில் காஸ்மாஸ் என்றால் ஆணையிடப் பிறந்தது என்று அர்த்தம். இதனை வேறொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், நடக்கும் சம்பவங்கள் ஏனோ தானோவென்று நிகழவில்லை, அவை திட்டமிட்டபடிதான் நிகழ்கின்றது என்று சொல்லலாம். யாருடைய கைகளில் இருந்தோ தவறி விழுந்துவிட வில்லை, முறைப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். எதையும் ஆழமாய் பார்க்க தெரிந்த ஒரு மனிதர் சற்றே கவனித்தார் என்றால், இந்த படைத்தலில் எதுவுமே தற்செயலாக நிகழவில்லை என்பது தெரியும். அதுபோல், படைத்தல் ஒவ்வொன்றுமே பரிணாம வளர்ச்சி அடைவதைக் காண முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காசியில், ஒரு நகரத்திற்குரிய அமைப்பில், ஒருவர் வளர்வதற்கான கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, இந்த சிறு உடலிற்கும் அகண்ட அந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பை உருவாக்குகிறது.

இயற்கை தன்னுள் இருந்து, எந்தவித இடையூறும் இல்லாமல் பரிணாம வளர்ச்சி அடைவதைக் கண்ட யோகிகள் தங்களுக்கும் அவ்வாறு நிகழ வேண்டும் என்று விருப்பப்பட்டனர். தங்களுக்கும் அவ்வாறு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். இதனால் பல அற்புதமான முயற்சிகள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது. இன்னும் சொல்லப் போனால், உலகின் வேறு சில பகுதிகளில் கூட இதற்கான முயற்சிகளில் யோகியர் இறங்கியுள்ளது தெரிகிறது.

கிரேக்க நாட்டில் உள்ள டெல்ஃபி நகரம் காசியின் சிறு பிரதிபிம்பமாய் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மிகப் பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பிரதிபலிப்பே இயற்கை என்பதை அறிந்திருந்தனர். மனித உடலுக்கும் இது பொருந்தும் என்று புரிந்து வைத்திருந்தனர். ஆம், இயற்கையிலுள்ள சிறு துரும்பிற்கும் இந்தச் சாத்தியம் உண்டு. இதன் அடிப்படையில் பல விஷயங்களைச் செய்தனர்.

காசியில், ஒரு நகரத்திற்குரிய அமைப்பில், ஒருவர் வளர்வதற்கான கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, இந்த சிறு உடலிற்கும் அகண்ட அந்த பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பை உருவாக்குகிறது. தூசி போன்ற இந்த மனிதன் அகண்டு விரிந்த அந்த பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும் மகத்தான சாத்தியத்தை, பிரபஞ்சத்துடன் இணையும் பேரானந்தத்தை, அழகை உணர வகை செய்தனர்.

இயற்கையின் வடிவியல் அமைப்புப் படி, பரந்து விரிந்த அந்த அண்டமும், மிக மிகச் சிறிய உயிரும் சந்திக்க சரியான ஒரு அமைப்பாய் உருவாகியுள்ளது காசி. பாரதத்தில், இதுபோல் பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தியான லிங்கமும் அப்படியொரு கருவிதான். ஆனால் நமக்கு ஏற்பட்ட சில தடைகளால், காசியைப் போல் விஸ்தாரமாக அல்லாமல், சிறிய அமைப்பாய் தியானலிங்கத்தை உருவாக்கி உள்ளோம். சிறிய அமைப்பாய் இருந்தாலும், ஒருவர் திறந்த மனதுடன் இருந்தால், எல்லையில்லா சாத்தியத்தை தியானலிங்கம் ஒருவருக்கு வாரி வழங்கும். ஏனெனில், தியானலிங்கம் என்பது ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய, உச்சபட்ச சாத்தியத்தை உணர வகை செய்யும் ஒரு கருவி.

காசி நகரத்தை இதுபோல் உருவாக்க வேண்டும் என்று நினைப்பதே ஒருவரை மூர்ச்சையடையச் செய்யும் ஒரு திட்டம்தான். பைத்தியக்காரத்தனமான கனவு அது. ஒரு காலத்தில் காசியில் 72,000 கோவில்கள் இருந்தன. நம் உடலிலும் 72,000 நாடிகள் உள்ளன. மனித உடல் மிகப் பெரிய உருவம் பெற்றால் எப்படி இருக்குமோ அதுபோல் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால்தான், “காசிக்கு போனால், உங்கள் கதை முடிந்தது,” என்று பாரம்பரியமாகவே சொல்லப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு ஏற்படும்போது, அந்த இடத்தை விட்டு உங்களால் போக முடியுமா என்ன?

காசியின் வரலாறு, சிவன் இங்கு வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகச் சொல்கிறது. இதன் அடிப்படையிலேயே காசியின் புராணம் விரிகிறது. இது சிவனின் குளிர் வாசஸ்தலம். இமயத்தின் உயர்ந்த பகுதிகளில் கடுந்துறவியாக வாழ்ந்த அவர், ஒரு இளவரசியை மணம் முடித்தவுடன், அவளுக்காக சமவெளிக்கு குடிபுகுந்தார். அந்தக் காலத்தில் மிக அருமையாக, விவரிக்க முடியாத அழகுடன் காசி உருவாக்கப்பட்டு இருந்ததால், அங்கு புலம் பெயர்ந்தார்.

காசியைப் பற்றி மிக அழகான கதை ஒன்று இப்படி விரிகிறது...

காசியில் இருந்து சுகம் அனுபவிக்க அல்ல, காசி நகரம் அவர்கள் வளர்வதற்கு வழங்கிய சாத்தியத்தால்தான் அவர்கள் அங்கு வாழ ஏக்கம் கொண்டனர்.

சில அரசியல் சூழ்நிலைகளால் சிவன் காசியை விட்டு போகும் சூழ்நிலை உருவானது. சிவன் இல்லாத காசி எங்கே தன் அதிர்வுகளை இழந்துவிடுமோ என்று பயந்த கடவுள்கள், அதனை சரியாக பராமரிக்க திவோதாசனை அரசனாக்கினர். ஆனால் மகுடம் சூடிய திவோதாசன் சில கட்டுப்பாடுகளை விதித்தான். “நான் அரசனாக வேண்டுமென்றால், சிவன் இந்த இடத்தைவிட்டு போக வேண்டும், அவர் இங்கு இருந்தால் என்னை ஒருவரும் அரசனாக மதிக்க மாட்டார்கள். அவரைச் சுற்றியே கூட்டம் கூடும்,” என்றான்.

சிவனும், பார்வதியும் மந்தார மலைக்கு சென்றனர். ஆனால் சிவனுக்கு அங்கு வாழப் பிடிக்கவில்லை. காசிக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசையில் முதலில் தன் தூதுவர்களை அனுப்பினார். தூது வந்தவர்கள், அந்த இடத்தின் வசீகரத்தில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டனர்.

அடுத்ததாக 64 தேவலோக பெண்களை அனுப்பினார் சிவன். “எப்படியாவது அந்த அரசனை காமுகன் ஆக்கி விடுங்கள். அவனிடம் நாம் சில குற்றங்களை கண்டுபிடித்தவுடன், அவனை மூட்டை கட்டி அனுப்பிவிட்டு, நான் மீண்டும் அவ்விடத்திற்கு வருகிறேன்,” என்று தன் திட்டத்தை விளக்கி அனுப்பினார். அரசனை வசியம் செய்ய வந்தவர்கள், காசியில் வாசம் செய்த தாக்கத்தால் அவ்விடத்தின் மேல் காதல் கொண்டு, தன் நோக்கத்தையே மறந்து அங்கு தங்கிவிட்டனர்.

அதன்பின் காசிக்கு பிரவேசமானார் சூரிய தேவர். காசி மிகவும் பிடித்துப் போகவே அவரும் அங்கேயே தங்கிவிட்டார். சிவனின் திட்டத்தைவிட காசி மேல் அவருக்கு ஏற்பட்ட காதல் அதிகமாகிப் போக, தென் திசை நோக்கி சாய்வாய் அமர்ந்து அங்கேயே தங்கிப் போனார். இன்று கூட காசியில் பல ஆதித்ய கோவில்கள், சூரிய தேவருக்காகவே எழுப்பட்டுள்ளதைக் காணலாம்.

இம்முறை சிவனின் தூதராய் பிரம்மர் காசிக்குச் சென்றார். பிரம்மனுக்கும் அந்த இடம் பிடித்து போய்விட்டது. திரும்பவே இல்லை பிரம்மர். “நான் யாரையும் நம்ப இயலாது,” என்ற சிவன், தன் நம்பிக்கைக்கு பாத்திரமான இரண்டு தேவ கணங்களை அனுப்பி வைத்தார். காசிக்கு வந்த கணங்கள் சிவனை மறந்தனர், தன் மக்களை மறந்தனர். தங்கள் எண்ணத்திலும் உணர்விலும் காசியே நிலைத்திருப்பதை உணர்ந்தனர். “சிவன் வாழ வேண்டியது காசியில்தான், மந்தார மலையில் அல்ல,” என்று முடிவு செய்தனர். காசிக்கு துவார பாலகர்கள் ஆயினர்.

தன் இடைவிடாத முயற்சியில், இம்முறை கணேசருடன் இன்னொருவரை அனுப்பி வைத்தார் சிவன். காசிக்கு வந்த அவர்கள் அந்நகரத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். “நாம் திரும்பிச் செல்வதில் அர்த்தம் இல்லை, சிவன் இங்கு வந்தே ஆக வேண்டும்,” என்று காசியிலேயே தங்கிவிட்டனர். எந்த சூழ்ச்சிக்கும் அடிபணியாத அரசன் திவோதாசன், எதற்கும் ஆசைப்படாத திவோதாசன், முக்தி என்னும் வலையில் விழுந்தான். அவன் முக்திக்கு ஆசைப்பட்டான். முக்தி அடைந்தான். மீண்டும் சிவன் காசிக்கு வந்தார். காசியில் வாழ, மக்கள் எப்படியெல்லாம் ஏங்கினர் என்பதை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட கதைகள் இவை. காசியில் இருந்து சுகம் அனுபவிக்க அல்ல, காசி நகரம் அவர்கள் வளர்வதற்கு வழங்கிய சாத்தியத்தால்தான் அவர்கள் அங்கு வாழ ஏக்கம் கொண்டனர். காசி நகரம் மக்கள் வாழும் பகுதியாக, வாழ விரும்பும் பிரதேசமாக இருந்தது. ஒரு மனிதன் தன் எல்லைகளை உடைத்து வாழ, ஓர் உயர்ந்த தொழில்நுட்பமாய் இருந்தது. படைப்பின் சிறுதுளிக் கூட படைப்பின் பிரம்மாண்டத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கருவியாய் செயல்பட்டது காசி.