நேற்றைய சத்குரு தரிசனத்தில் சத்குரு பேசிய உரைகளின் சில பகுதியை இங்கே பதிகிறோம். காசியில் நடக்கும் சப்தரிஷி பூஜையின் சிறப்பைப் பற்றி விரிவாகப் பேசிய சத்குரு, குருபௌர்ணமியை எப்படிக் கொண்டாட வேண்டுமென்றும் கூறினார்.

பஞ்சபூதங்களின் மீது ஆளுமை கொள்ளுதல்...

சத்சங்கத்தின்போது சத்குரு பேசுகையில்,

"இந்த பிரபஞ்சம் 5 மில்லியன் பொருட்களால் உருவாகியிருக்கவில்லை, வெறும் ஐந்து பொருட்களால் மட்டுமே உருவாகியுள்ளது. பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து அம்சங்களால்தான் நமது உடலும், உலகமும் ஏன்... இந்த பிரபஞ்சமே உருவாகியுள்ளது. இந்த பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் விளையாட்டுதான். யோகப் பயிற்சியிகளின் மூலம் பஞ்சபூதங்களை ஆளுமைகொள்ளலாம். பஞ்சபூதங்கள் மீது ஒருவருக்கு எந்த அளவிற்கு ஆளுமை உள்ளதோ அந்த அளவிற்குதான் அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக நடக்கும்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்படி, பஞ்சபூதங்களின் மீது ஆளுமை கொள்ளுதலின் முக்கியத்துவத்தை உணர்த்திய சத்குரு அவர்கள், முன்னதாக, "பூத பூத பூதேஷ்வராய; யோக யோக யோகேஷ்வராய..." மந்திர உச்சாடனம் செய்து அதன் பொருளை விளக்கினார்.

கேள்வி நேரம்...

வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி குரு பௌர்ணமி வருகிறது. அதனை சிறப்பாகக் கொண்டாட நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று ஒருவர் எழுந்து கேட்க,

குரு பௌர்ணமியை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென்று நாம் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் ஆளுக்கொரு கடிதம் எழுத வேண்டும். நாம் முன்பெல்லாம் அமாவாசை பௌர்ணமி போன்ற ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த தினங்களில் விடுமுறையைக் கடைபிடித்தோம். வெள்ளைக்காரர்கள் வந்த பின்பு, நமது ஆன்மீக பலத்தை அகற்றும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்தால் என்ன பிரயோஜனம். நாம் வீட்டில் சிற்றுண்டி உண்டுகொண்டு தொலைக்காட்சி முன் வீற்றிருப்போம். வெள்ளைக்காரர்கள் தந்திரமாக செய்த சூழ்ச்சி இது.

குரு பௌர்ணமி அன்று நாம் யாரும் அலுவலகம் செல்லக்கூடாது. குருபௌர்ணமி நாளைக் கொண்டாட விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே வந்துவிடுங்கள்!" என்று கூறி குருபௌர்ணமி விழாவிற்கு அழைப்புவிடுத்தார் சத்குரு.

அனைவரும் பார்க்க வேண்டிய சப்தரிஷி பூஜை!

'தந்த்ரா' குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், காசியில் தினமும் நடக்கும் சப்தரிஷி பூஜையின் சிறப்புகள் குறித்து விவரித்தார் சத்குரு.

"காசியில் கோயில் பூசாரிகள் மிகவும் தொழில்ரீதியாக நடந்துகொள்வார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பணத்தில்தான் குறியாக இருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி அங்கு அவர்களால் நடத்தப்படும் சப்தரிஷி பூஜையானது அளப்பரிய சக்தியை அங்கே உருவாக்குகிறது. நான் அதைக் கண்டு உண்மையிலேயே வணங்கினேன். அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அந்த செயல்முறை வேலை செய்கிறது. நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்கள் ஸ்மார்ட் ஃபோன் வேலை செய்கிறது, இல்லையா? அதுபோலத்தான் அந்த செயல்முறையும் வேலை செய்கிறது.

சிவனை விட்டு பிரிந்து செல்ல முடியாமல் தவித்த சப்தரிஷிகளின் நிலையைப் பார்த்து சிவன் இந்த பூஜை செயல்முறையை வழங்கி, இதன் மூலம் தன் இருப்பை உணரலாம் எனக் கூறினார். இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்கள் வழிமுறைகளை மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல், அப்படியே கடைபிடித்து வருகின்றனர்.

நீங்கள் காசிக்கு சென்று இந்த சப்தரிஷி பூஜையை கட்டாயம் காண வேண்டும். வரும் அக்டோபர் 10ஆம் தேதி காசி உத்சவம் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருக்கும் நான் அன்று மட்டும் காசிக்கு வந்து ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருக்கிறேன். நீங்களும் வரலாம்!"

ஏழுநாள் சத்சங்கத்தின் நிறைவுநாளான நேற்று, மக்களுக்கு இடையே நடந்து வந்து அருள் வழங்கிச் சென்றார் சத்குரு. சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினர் "அலை அலை அலை அலை அலை - மனம் தினம் அது ஓடுதே...!" என தங்கள் முழக்கத்தை துவங்க பங்கேற்பாளர்களின் கால்களில் ஆட்டம் பற்றிக்கொண்டது.