Question: சத்குரு, எந்த ஒரு காரணமும் இல்லாமலே சிலர் மீது நான் எரிச்சல் படுகிறேன், இதை எவ்வாறு தவிர்க்க முடியும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யாரோ செய்யும் சில செயல்கள் உங்களுக்கு உடன்பாடாக இல்லை. அச்செயல்கள் உங்களை மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறது. எரிச்சலில் இருந்து விடுபட விரும்புகிறீர்கள். எரிச்சலடைய செய்பவர்களை நேசித்தால் ஒரு வேளை எரிச்சல் நம்மை விட்டுப் போய்விடும் என நினைத்து பல நேரங்களில் அவரை வலிய நேசிக்கவும் நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி நேசிப்பதாக கஷ்டப்பட்டு பாசாங்கு செய்வதில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.

நீங்கள் தவறு என்று நினைக்கும் ஒன்றை இன்னொருவர் செய்யும்போது அது உங்களுக்கு வெறுப்பைத் தருகிறது.

அதற்குப் பதிலாக முதலில் அவர்கள் ஏன் உங்களை எரிச்சலடையச் செய்கிறார்கள் என்பதை நிதானமாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் செயல் ஏன் உங்களுக்கு எரிச்சலை தருகிறது? அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அவர்கள் இல்லை, நீங்கள் விரும்பும்படியாக அவர்கள் இல்லை.

சரி தவறு...

நீங்கள் ஒவ்வொன்றையும் இது சரி அது தவறு என்று முடிவெடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தவறு என்று நினைக்கும் ஒன்றை இன்னொருவர் செய்யும்போது அது உங்களுக்கு வெறுப்பைத் தருகிறது. உங்கள் முடிவுக்கு மாறான வழியில் ஒருவர் செல்லும்போது, அவர் உங்களுக்கு எரிச்சலைத் தருகிறார். அவர் மீது உங்களுக்குக் கோபம் ஏற்படுகிறது. பிறகு அவரை வெறுக்கிறீர்கள். அவரைத் தாக்கவும் கூட யோசனை வருகிறது. பல நேரங்களில் இப்படி உங்களுக்கு நடக்கிறது.

ஏனெனில் இந்த உலகில் ஒவ்வொருவரும் உங்களைப் போலவே இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். இந்த உலகில் ஒவ்வொருவரும் உங்களைப் போல் இருந்தால் முதலில் உங்களால் இந்த உலகில் இருக்க முடியுமா? உங்கள் சொந்த வீட்டிலேயே உங்களைப் போல் இன்னொருவர் இருந்தால் அந்த வீட்டில் மேற்கொண்டு உங்களால் வசிக்க முடியுமா?

இந்த உலகில் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் இருப்பதே மிகவும் சிறந்தது. இந்த உலகில் உள்ள அத்தனைக் கோடிப் பேர்களிலும் ஒருவர் கூட மற்றொருவரைப் போல் கிடையாது. ஒவ்வொருவரும் தனிக் குணாதிசயத்துடன் இருக்கிறார். ஒருவரைப் போல் மற்றவர் தற்போது இருக்கவும் இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. உங்களோடு தற்போது இருக்கும் ஒருவர் மிகவும் தனித் தன்மையானவர், அவரைப் போல் யாரும் இதற்கு முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனிமேல் இருக்கப் போவதும் இல்லை என்று நீங்கள் முழுமையாக அறிந்தால், அவர் மீது உங்களுக்கு எப்படி எரிச்சல் வரமுடியும்?

வாழ்க்கையின் உண்மை

நீங்கள் வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் நீங்கள் இன்னொருவரிடம் எரிச்சல் அடைய முடிகிறது. அனைவரும் படைத்தவனின் பல்வேறு படைப்புகள். ஒவ்வொரு படைப்பும் தனித்தனி குணாதிசயங்கள் கொண்டதாக இருக்கிறது. எந்த ஒரு படைப்பும் மற்றொன்று போல் இதற்கு முன்பு இருந்ததும் இல்லை, இனி இருக்கப்போவதும் இல்லை என்னும் வாழ்க்கை உண்மையை ஆழமாகப் புரிந்திருந்தால் யார் உங்களை எரிச்சல் படுத்த முடியும்?