பெங்களூரூவைச் சேர்ந்த திரு.கிரிதர் காமத் எனும் இந்த மனிதர் தனது பிறந்தநாளை ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்ற எண்ணினார். அதுவும் ஒரு உன்னத லட்சிய இலக்குடன்!

பெங்களூரூவிலிருந்து கோவை ஈஷா யோகா மையம் வரை பயணித்த திரு.கிரிதர் சத்குருவின் பிறந்தநாளான செப்டம்பர் 3ஆம் தேதி அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 9ஆம் தேதி தனது இலக்கை அடைந்துள்ளார். அவர் பஸ்ஸிலோ அல்லது இரயிலிலோ அல்லது காரிலோ பயணிக்கவில்லை. அவர் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் நோக்கில், 400 கி.மீ தூரத்தை வெறும் கால்களில் ஓடியும் சைக்கிள் மிதித்தும் கடந்துள்ளார்.

கண்களில் லட்சியம், கால்களில் உறுதி... ஓடிவந்தார் ஒரு மனிதர்! | Kangalil latchiyam kalgalil uruthi... odivanthar oru manithar

இந்த பயணத்தில் கிரிதரின் மனைவி ரதியும் மகள் பாரியும் அவருக்கு உறுதுணையாக தங்கள் ஜீப்பில் உடன் பயணித்து, தண்ணீர், ராகி, கம்பு போன்ற உணவு வகைகளையும் பழங்களையும் வழங்கி உதவினர். நண்பர்கள் சிலர் கிரிதருடன் சில இடங்களில் இணைந்து சிறிது தூரம் கிரிதருடன் கூடவே ஓடியும் உற்சாகப்படுத்தியுள்ளனர். ஓய்விற்காக நிற்கும் இடங்களில் கடந்துசெல்லும் வழிப்போக்கர்களிடம் கிரிதர் ஆர்வத்துடன் பேசினார். ஓரு இடத்தில் நின்றிருந்த லாரியின் நிழலில் தனது மதிய உணவை உண்ட கிரிதர், அந்த லாரி ஓட்டுநருடன் தனது ஓட்டத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார். கிரிதரின் அந்த சாதனைப் பயணத்தைக் கேள்விப்பட்டு வியப்பில் ஆழ்ந்தார் லாரி ஓட்டுநர். வழியில் ஆங்காங்கே ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து இளநீர், மோர் போன்றவற்றை கிரிதருக்கு ஆர்வத்துடன் வழங்கி உதவினர்.

https://twitter.com/ishafoundation/status/772705576073560065

ஒருநாளில் 8 மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக பெங்களூவிலிருந்து ஓடிவந்த கிரிதரின் கணுக்காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் 200 கி.மீ ஓடியும் மீதமுள்ள 200 கி.மீ தூரத்தை சைக்கிளில் கடப்பதற்கும் முடிவுசெய்தார்.

https://twitter.com/ishavidhya/status/772842277920268289

கிரிதர் மற்றும் குடும்பத்தினர் ஈரோடு, சேலம் மற்றும் இறுதியாக கோவையை அடைந்தபோது உள்ளூர் ஈஷா வித்யா பள்ளிகளை பார்வையிட்டனர். ஆனந்தம் நிறைந்த்த ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளின் முகத்தைக் கண்டு கிரிதர் அவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டார். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் பள்ளியின் கற்பனை வளமிக்க அற்புத சுற்றுச்சூழலும் தனித்தன்மையும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தங்கள் விருந்தினரை ஈஷா வித்யா மாணவர்கள் எப்படி வரவேற்றார்கள்... ஒரு தன்னார்வத் தொண்டர் விவரிக்கிறார்!

“காலை 8 மணிக்கு நான் பள்ளி பேருந்தில் ஏறினேன். “பிணீஜீஜீஹ் ஙிவீக்ஷீtலீபீணீஹ் நிவீக்ஷீவீ கிஸீஸீணீ!” என்ற வாசகத்துடன் கூடிய பெரிய பெரிய காகித அட்டைகளை தாங்கியபடி 5ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஏறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் வாழ்த்து போர்டு அல்லது பிறந்தநாள் பரிசுகளை கையில் வைத்தபடி முகத்தில் புன்னகையை ஏந்தியபடி ஏறினார்கள்.
மொத்த பள்ளியுமே ஒரு திருவிழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது, அதோடு குழந்தைகளிடத்தில் கொண்டாட்ட மனநிலை தொற்றிக் கொண்டதைக் காணமுடிந்தது. அந்த சூழ்நிலை முழுவதும் உற்சாகமும் உத்வேகமும் நிறைந்து காணப்பட்டது. அருகாமையிலுள்ள ஊரான மாதம்பட்டியை திரு. கிரிதர் காமத் அடைந்துவிட்ட செய்தி வந்ததுமே நாங்கள் மிக விரைவாக சில மாணவர்களுடன் மேள தாளங்கள் பறை வாத்தியங்களுடன் சைக்கிளில் அந்த இடத்திற்கு விரைந்தோம்!

அங்கே வலிமையான உடற்கட்டுடன் தோற்றமளித்த அந்த மனிதர் கனிவான இதயம் கொண்டவராக இருப்பதைக் கண்டோம். புன்னகை ததும்பிய முகத்துடன் இருந்த கிரிதர் பள்ளி வாகனம் நிறைய குழந்தைகள் வருவதைக் கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தார். கடந்து செல்லும் பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் அங்கே முழங்கப்பட்ட பறை இசையை ஆர்வத்துடன் இரசிக்கத் துவங்கினர். அங்கிருந்து போக்குவரத்து நெரிசல் இல்லாத கிராமத்து சாலையில் கிரிதர் சில மாணவ மாணவிகளுடன் சைக்கிளில் ஈஷா வித்யா பள்ளிக்கு பயணித்தார்.
எங்கள் வருகையை எதிர்பார்த்து சாலையின் இரு மருங்கிலும் காத்திருந்த மாணவர்கள் அனைவரும் கைதட்டி உற்சாக வரவேற்பளித்தனர் - ஒரு சாதனையாளனுக்கான வரவேற்பாக அது இருந்தது! தன்னார்வத் தொண்டர் ஒருவர் கிரிதருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். அங்கிருந்த இளம் மாணவர்கள் சிலர் கிரிதரை இருக்கமாக கட்டித்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் கிரிதர் அவர்கள் நுழைந்தபோது அந்த குழந்தைகள் அவருக்கு ஆச்சரியத்தை வழங்க காத்திருந்தனர். நன்றி சொல்லும் அறிவிப்பு பதாகைகளுடனும், மலர் மாலைகளுடனும், மண்பாண்ட பொம்மைகளுடனும், பிரம்மாண்ட அலங்காரங்களுடனும், வாழ்த்து கவிதைகள் எழுதப்பட்ட போர்டுகளுடனும் அவர்கள் கிரிதரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.“Happy Birthday Giri Anna” என்ற வாசகத்தை வண்ண பலூன்களால் செய்ததும் பென்சில் ஓவியமும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தன. அங்கு மாணவர்களால் அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் முதலில் ஒரு தன்னார்வத் தொண்டர் ஏந்திக் கொண்டிருந்தார். பின்னர் அதிகப்படியான பொருட்கள் சேரவே இன்னொரு தன்னார்வத் தொண்டரின் உதவி தேவைப்பட்டது!

அதன் பின்னர், கிரிதரின் நண்பர் “ஜூனியர் பிரபு” அவர்கள் தனது மேஜிக் ஷோவால் குழந்தைகளை துள்ளிக்குதிக்க வைத்தார். குழந்தைகளுக்கான பொம்மைகள் உற்பத்தியாளரான கிரிதரும் ஒரு மேஜிக் கலைஞராவார். அவரும் சில மேஜிக் நுணுக்கங்களை செய்துகாட்டியதோடு, குழந்தைகளுக்கு முகமூடிகள் மற்றும் மேஜிக் உபகரணங்களை அன்புப் பரிசாக வழங்கினார். குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அந்த முகமூடிகளை அணிந்துகொண்டு, கிரிதர் அவர்கள் வழங்கிய மேஜிக் நுணுக்கங்களை மிக ஆர்வத்துடன் கவனித்து கற்றுக்கொண்டனர். நிகழ்வின் இறுதியில் கிரிதர் பகிர்ந்துகொண்டபோது, தான் இதுவரை இதுபோன்றதொரு பிறந்தநாளை கொண்டாடியதில்லை என்று தெரிவித்தார். குழந்தைகளுடன் ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்த திரு. கிரிதர் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஈஷா வித்யாவிற்கு துணைநிற்கப் போவதாகக் கூறினார்.

நாங்கள் கிரிதருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வார்த்தைகளால் அல்லாமல் ஆனந்தக் கண்ணீரால் நன்றி தெரிவித்தோம்! நம் வாழ்க்கையில் நாம் அதிகம் அடைவது பிறரிடமிருந்து பெறுவதால் அல்ல பிறருக்கு கொடுப்பதால் என்பதை இந்த மனிதர் நன்கு உணர்ந்துள்ளார்.

- பிரபு லோகநாதன், ஈஷா தன்னார்வத் தொண்டர்

கோயமுத்தூர் ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் திருமதி. சாவித்திரி அவர்கள் கூறும்போது, இந்த பிரம்மாண்ட வரவேற்பிற்கான முன்னேற்பாடுகளும் திட்டங்களும் முழுக்க முழுக்க மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், தாங்கள் சில வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்கியதாகவும் தெரிவித்தார். “இதற்கான அனைத்து பாராட்டுதல்களும் ஈஷா வித்யா குழந்தைகளுக்கே உரித்தாகும். நாங்கள் அவர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கியிருந்தோம். அந்த மழலைகளின் மனங்கள் ஒரு அற்புத செயலை செய்துமுடித்தன,” என்று அவர் கூறினார்.

https://twitter.com/ishafoundation/status/773733179899260934

கடந்த 6 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் கிரிதரின் வயது 47. அவர் தினமும் 10 கி.மீ ஓடுவதைத் தவிர வேறெந்த சிறப்பு பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை! மூன்று வருடங்களுக்கு முன், வெறும் காலில் நீண்டதூரம் திறம்படக் ஓடுக்கூடியவரான தனது நண்பருக்கு பிறந்தநாள் பரிசாக அமையும் வகையில் 7 கி.மீ தூரத்தை முதல்முறையாக ஓடிக்கடந்தார் கிரிதர். பின் அதனை வழக்கமாக்கிக் கொண்டார். “வெறும் காலில் ஓடுவது இயற்கையுடன் தொடர்புகொள்ளச் செய்கிறது, கால்களால் அல்லாமல், இதயப்பூர்வமாக ஓடச் செய்கிறது!” என்று கிரிதர் கூறுகிறார்.

2015 ஏப்ரலில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு கிரிதர் அவர்கள் ஓடியபோது முதல்முறையாக ஈஷா வித்யா பற்றி அறிந்துகொண்டார். சித்தூரில் தான் நின்றபோது கிராம மக்கள் சிலர் ஈஷா வித்யா பள்ளி தங்கள் குழந்தைகளின் கல்விநிலையை சிறப்பாக உயர்த்தியுள்ளது பற்றி பேசிக்கொண்டிருப்பதை அவர் தற்செயலாக கேட்டுள்ளார். அப்போதே அவர் அடுத்ததாக ஈஷா வித்யாவிற்காக நீண்ட தூர ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் மேற்கொண்டார். அதே வருடம் ஜவ்வாது மலையில் அவர் ஈஷா தன்னார்வத் தொண்டரும் சக ஓட்ட வீரருமான பெக்கி உல்ஃபை சந்தித்தார். அதன்பின் இந்த வருடம் மே மாதம் TCSWorld10K மாரத்தான் போட்டியில் ஈஷா வித்யாவிற்காக ஓடும் தன்னார்வத் தொண்டர் படையுடன் அவர் மீண்டும் பெக்கியை சந்தித்தார். அங்குதான் பெங்களூரூவிலிருந்து ஈஷா யோகா மையத்திற்கு ஓடும் திட்டம் வடிவம்பெற்றது.

இறுதிகட்ட தூரத்தை அடைந்தபொது மேற்கொண்ட அழகிய சைக்கிள் பயணம்! - தன்னார்வத் தொண்டரின் பகிர்வு!

“முதலில் யாரோ ஒருவர் 400 கி.மீ தூரம் ஈஷா வித்யாவிற்கு நிதி திரட்டுவதற்காக ஓடிவருகிறார் என்பதைக் கேட்டபோது எனக்கு நம்பும்படியாக இல்லை. ஆனால், அதே நேரத்தில் அது ஒரு வியத்தகு நிகழ்வாகவும் மனிதசெயலுக்கு அப்பாற்பட்டதாகவும் தோன்றியது.
நாங்கள் பசுமைசூழ்ந்த மலைப் பகுதிகளில் அவற்றை இரசித்தபடியே சைக்கிள் ஓட்டிச் சென்றது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. பிற ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடன் மேற்கொண்ட அந்த பயணம் புத்துணர்ச்சி தருவதாகவும் சக்தி தருவதாகவும் அமைந்தது. நாங்கள் சுதந்திரமாகவும் போட்டிபோட்டுக் கொண்டும் சைக்கிளில் பயணித்தோம்.

நான் திரு. கிரிதர் அவர்களுடன் பேசியபோது சில விஷயங்கள் என் மனதில் பதிந்தது: சில காலம் முன்பு நான் முதல்முறையாக எனது அரை-மாரத்தான் ஓட்டத்தை மேற்கொண்டபோது, மாரத்தான் என்பது உடல் சம்பந்தமான ஆற்றல் குறித்தது மட்டுமல்ல, அதற்கு மன திடம் மிகவும் அவசியம் என்பதை புரிந்துகொண்டேன். முழுமையான மாரத்தானில் பங்கேற்க நிறைய பயிற்சிகள் தேவை என்பதால் எனக்கு அதற்கான திட்டம் எதுவும் இருக்கவில்லை. கிரிதர் அவர்கள் இரண்டு முழு மாரத்தான் தூரத்தை ஒரே நாளில் கடந்து வந்துள்ளதைப் பார்த்தபின் எனக்கும் முழுமையான மாரத்தானில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நான் இதனை கிரிதரிடம் கூறியபோது அவர் சொன்னார், “எந்தவிதமான அளவீடுகளையும் உங்கள் மனதில் புகுத்தவேண்டாம்,” என்றார். மனித உடல் மிகவும் அற்புதமான வழிகளில் செயல்படக் கூடியது, ஏன் நீங்கள் 42 கி.மீ தூரத்துடன் நிற்கவேண்டும்? எனவே உங்கள் மனதில் எந்தவித அளவீடுகளையும் புகுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறி அவர் எனக்கு தெளிவை வழங்கினார்.

ஈஷா வித்யா பள்ளியிலிருந்து அனுபவித்து மேற்கொள்ளப்பட்ட அந்த சைக்கிள் பயணம் நான் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவிலான தாக்கத்தை என்னிடத்தில் ஏற்படுத்தியது. நான் அடுத்த மூன்று மாதங்களில் முழுமையான மாரத்தானில் கலந்துகொள்வதற்கான திட்டத்தை இப்போதே செயல்படுத்த துவங்கிவிட்டேன்!

- பிரக்யான், ஈஷா தன்னார்வத் தொண்டர்