"கண்களை மூடினால் எனக்கு சில விஷயங்கள் தென்படுகின்றன" என்று ஒருவர் சத்குருவிடம் கேள்வி எழுப்ப, மனதில் சமநிலை கொண்டு வருதல் பற்றி சத்குரு வலியுறுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் இந்த வார சத்குரு ஸ்பாட்...

கேள்வி: பல வருடங்களாக எனக்கு ஆழமான சில ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. கண்களை மூடினால் எனக்கு சில விஷயங்கள் தென்படுகின்றன.

சத்குரு: தேவதைகள் உங்களை பார்க்க வருகிறார்களா? (சிரிப்பலை)

கேள்வி: இல்லை. அப்படி எதுவும் இல்லை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: அப்போ சாத்தான்களா? (சிரிப்பலை)

கேள்வி: பொருட்கள் அல்லது முகங்களின் சக்தி வெளிகோடுகள் போல தெரிகிறது. நான் காண்பவற்றின் மீது எனக்கு எந்த வித கட்டுப்பாடும் இருப்பதில்லை.

சத்குரு: உங்கள் மனதின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், நீங்கள் விரும்பிய எதையும் உங்களைப் பார்க்க வைக்கும். பல அடுக்குகள் உடைய ஒரு பிரம்மாண்டமான கருவி இது. விழிப்புணர்வாக உங்களால் கற்பனை செய்ய இயலாத ஒன்றையும் உங்களை காண செய்யும். ஏனென்றால் அது குறித்த பதிவுகள் அங்கே இருக்கின்றன. எனவே அனுபவத்தின் பரிமாணங்களுக்குள் செல்வதற்கு முன் உங்கள் தர்க்கரீதியான அறிவு ஒரு உறுதியான அடித்தளத்தில் செயல்படுவது மிகவும் முக்கியம்.

உங்கள் புத்தி நிலையான அடித்தளத்தில் இல்லாமல், நீங்கள் அனுபவங்களை நாடினால், உங்கள் மனம் சமநிலை இழந்துவிடும். பிறகு உங்களை தடுத்து நிறுத்த முடியாது. எதை வேண்டுமானாலும் கற்பனை செய்ய முடியும். கற்பனை, நிஜத்தை விட சக்தி மிக்கது தெரியுமா உங்களுக்கு? மனநோய் நிலையில் இருக்கும் ஒருவரின் கற்பனையானது வாழும் நிஜத்தை விட அதி சக்தி வாய்ந்ததாக இருக்கும். கண்கள் திறந்து நீங்கள் பார்ப்பது எதுவும், கண்கள் மூடி நீங்கள் பார்க்கும் எதையும் விட தெளிவாகவும், பளிச்சென்றும் இருக்காது.

அடிப்படையில் உங்களுக்கு கண் இமைகள் இருப்பதே, நீங்கள் கண்கள் மூடினால் எதையும் பார்க்க கூடாது என்பதற்காகத்தான். இப்படி முயற்சி செய்து பாருங்கள். நான் கண்களை மூடினால் பிறகு உலகம் எனக்கு இருப்பதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும். கண்களை மூடினால் உலகம் மறைந்து போய் விட வேண்டும். கண்கள் மூடிய பிறகு உலகையோ இல்லை வேறு உலகையோ நீங்கள் பார்த்தால், மனமெனும் சிக்கலான அமைப்பில் ஏதோ குழப்பம் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எனவே ஒருவருக்கு முதல் சாதனா என்னவென்றால் அவர் கண்களை மூடினால் பிறகு எதையும் பார்க்க கூடாது. உங்கள் மனம் அந்த அளவு நிலை பெற்றால், அதன்பிறகும், உங்கள் இரு கண்கள் பார்க்கமுடியாத எதையும் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், அதை ஒரு 'உருஒளித் தோற்றம்' எனச் சொல்லலாம். இல்லையென்றால் அது பைத்தியக்காரத்தனம் மட்டுமே.

நல்லறிவு நிலைக்கும், பைத்தியக்கார நிலைக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். முழுமையான அறிவு நிலையில் இருப்பவர் கூட மூன்றே நாளில் பைத்தியம் ஆகி விட முடியும். இடையில் இருப்பது மெல்லிய கோடு என்பதால், இந்த திசையில் ஒருவர் முயற்சி செய்தால் அறிவை எளிதாகத் தொலைக்க முடியும். இதனால்தான் - எப்போதும், எப்போதும், எப்போதுமே - ஒருவர் இது போன்ற அனுபவங்கள் பற்றி பேசும்போது, நாம் எப்பொழுதும் ஊக்குவிப்பதில்லை. அது உண்மையாக இருந்தாலும், அதை நான் புறந்தள்ளி விடுவேன், ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று. எந்த ஒரு நோக்கத்தையும் அது நிறைவேற்றாது. உதாரணமாக ஏதோ ஒன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதாக பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் என்ன பயன்? உங்கள் வளர்ச்சிக்கு, நலவாழ்வுக்கு அது உபயோகமாக இருக்கப் போவதில்லையே!

எனவே அனுபவங்களை நாட வேண்டாம். உங்கள் உடலையும் மனதையும் நிலை பெறச் செய்வதே முதன்மையாக இருக்க வேண்டும். அவை நிலையாக இருக்குமானால் கடவுள் வந்தாலும் நீங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கலாம். சாத்தான் வந்தாலும், தேவதை வந்தாலும் சும்மா பார்க்கலாம். கடவுள்களை, சாத்தான்களை, தேவதைகளை, பிசாசுகளை புறக்கணிக்கும் அளவு மனம் நிலையாக இருந்தால் பார்ப்பது சரிதான். இல்லையென்றால் உங்கள் இரு கண்களால் எதையெல்லாம் பார்க்க முடியுமோ அதை மட்டும் பார்ப்பது உத்தமம். நீங்கள் எதையாவது பார்த்தீர்களா, இல்லையா என்று நான் தர்க்கம் செய்யவில்லை. கண்களை மூடினால், உலகமே காணாமல் போகும் அளவு உங்கள் உடலையும், மனதையும் நிலை கொள்ள செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். முதலில் உங்கள் கண் இமைகளை உபயோகப்படுத்துங்கள். கண் இமை இருப்பதன் நோக்கம், அவற்றை மூடினால் உலகம் இல்லாமல் போக வேண்டும். காதுகளை மூடிக் கொண்டால் பிறகு எதையும் கேட்க முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.

கண்களை மூடிய பிறகும், எதையோ பார்ப்பது, காதுகளை மூடிய பிறகும் எதையோ கேட்பது, வாயை மூடிய பிறகும் எதையோ பேசுவது இவற்றால் ஆன்மிகத்தில் நீங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு நிகழ்கிறது என்றால் உங்கள் மனம் எனும் ஒரு அற்புதத்தின் மீது கட்டுப்பாடு இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். கட்டுப்பாடு மீறும் பொழுது ஆபத்தில் முடியும்.

உங்கள் அனைத்து உள்நிலை அனுபவங்கள், காட்சிகள், குறிப்பாக காட்சிகளை என்னிடம் விட்டு விடுங்கள். என்னிடம் விட்டு விடுவது என்றால் அதை ஆராய்வது, பகிர்வது, முடிவுக்கு வருவது, ஏன் குழம்புவது இப்படி எதுவும் இருக்கக் கூடாது. வெறுமனே என்னிடம் விட்டு விடுங்கள். நீங்கள் பரிணமித்து, மலர வேண்டும் என்பதே எனது விருப்பம். வெறுமனே அறிதலோடு இல்லாமல் ஆழ்ந்து உணர வேண்டும் என்றால், நீங்கள் என்னுடன் நெருக்கமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி, அனைத்துக்கும் மேலாக உங்கள் சமநிலை, உறுதித்தன்மை ஆகியவை குறித்து வேலை செய்தால் மட்டுமே இது ஒரு வெற்றிகரமான சாத்தியமாக இருக்கும்.

Love & Grace