கல்லூரிக் காலங்களில் கனவுகளே வாழ்க்கையாக உள்ளது. வண்ண வண்ண கனவுகளும் வலிமைமிகு லட்சியங்களும் உங்களை ஆட்கொண்டிருந்த நிலை, சிறிதுகாலம் செல்ல செல்ல காணாமல் போய்விடுகிறது. ஏன் இப்படி ஆகிறது?! உங்களுக்கு கனவு காண இப்போது தைரியம் இருக்கிறதா?! சத்குருவின் இந்த உரை, கனவு காணும் தைரியத்தை தருவதாய் அமைகிறது!

சத்குரு:

இளமைக்கால கனவுகள்

இளமையாக இருந்தபோது, பின்னாளில் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு நிறையக் கனவுகள் இருந்தன. உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற லட்சியங்கள் இருந்தன.

எந்தக் கனவுமே, அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்துடன்தான் உங்களால் கவனிக்கப்படுகிறது.

பதினெட்டு இருபது வயதில் கண்ட கனவுகள் எல்லாம் பிரமாண்டமாக இருந்தன. இருபத்தைந்து வயதில் வாழ்க்கைக்கு அவசியமானவை பற்றி மட்டும் கனவுகள் தொடர்ந்தன. முப்பது வயதில் கனவுகள் எல்லாம் வறண்டு போய், 'பெரிதாக எதையும் சாதிக்க வேண்டியதில்லை. இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளாமல் விட்டால் சரி! என்று சமாதானம் செய்து கொள்ளத் தயாராகிவிட்டீர்கள்.

கேட்டால், வயது ஏற ஏற நடைமுறை வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வீர்கள். இல்லை. உண்மையில் கனவு காண்பதற்குக்கூட நெஞ்சில் ஒரு துணிச்சல் வேண்டும். அதை இழந்துவிட்டீர்கள். அப்படியே கனவு கண்டாலும் அதைக் கையகப்படுத்தும் தைரியமின்றி, கோழைகளாகி விட்டீர்கள்.

எந்தக் கனவுமே, அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்துடன்தான் உங்களால் கவனிக்கப்படுகிறது. அதனால் உங்கள் முயற்சிகள் முழுமையாக இருப்பதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யார் வளர்ச்சி முக்கியம்?

சீனாவில் ஒரு ஜென் குரு இருந்தார். அவர் தன் சீடனை அழைத்தார்.

"நான் குளிப்பதற்குத் தொட்டியில் தண்ணீர் நிரப்பு" என்றார். கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்த சீடன், மரவாளிகளில் நிரப்பி, தோள்களில் சுமந்து போய், குளிக்கும் தொட்டியில் கொட்டினான். வாளியின் அடியில் மிச்சமிருந்த சிறிது நீரைக் கீழே விசிறிவிட்டு அடுத்த தவணையைக் கொண்டு வர கிணற்றடிக்குப் போனான்.

குரு ஒரு பிரம்பை எடுத்தார். சீடனைப் 'பொளேர்' என்று அடித்தார். "எதற்காகத் தண்ணீரை வீணடித்தாய்? அதைச் செடிக்காவது ஊற்றியிருக்கலாமே?"

சீடன் வலியும், கண்ணீருமாக வார்த்தைகளில் கோபத்துடன் நிமிர்ந்தான். "கீழே கொட்டியது ஒரு டம்ளர் தண்ணீர் கூட இருக்காது. அதை ஊற்றுவதால் செடி வானம் வரை வளர்ந்துவிடப் போகிறதா?" என்றான்.

"முட்டாள்! நான் செடியின் வளர்ச்சிக்காகவா சொன்னேன்? உன் வளர்ச்சிக்காகச் சொன்னேன். அரைத் துளியானாலும் அதைக் கேவலமாக நினைக்காமல், அதற்கும் மதிப்புக் கொடுத்து வீணடிக்காமல் இருந்தால்தான், நீ வளர முடியும்!"

கனவுக்கு உரம் போட்டு வளர்த்து சாதனையாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் இந்த உலகில் சும்மா வசிக்கிறார்கள்.

ஜென் குரு சொன்னது தன் சீடனுக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் சேர்த்துதான். உங்கள் கனவு நனவாக வேண்டுமானால், மிகச் சிறிய சந்தர்ப்பத்தைக்கூட அலட்சியம் செய்யாமல் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

கனவுக்கு உரம் போட்டு வளர்த்து சாதனையாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் இந்த உலகில் சும்மா வசிக்கிறார்கள்.

ஒரு தலைமுறையே கனவு காண்பதை நிறுத்திவிட்டால் சமூகத்தில் என்ன அற்புதங்கள் நடத்தப்பட்டாலும் அவை எல்லாம் வீண்தான். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கத் தெரியாமல் வறண்டு விட்டவர்களுக்கு எதைக் கொண்டு போய்க் கொடுத்தாலும் அர்த்தமில்லை.

கனவு காண ஆளில்லை

சுதந்திரத்துக்கு முன் நம் தேசத்தில் எல்லோரிடமும் கனவு இருந்தது. அதை நனவாக்கிப் பார்க்க, தங்கள் வாழ்க்கையையே விருப்பத்தோடு பணயம் வைக்கத் தயாராக இருந்தார்கள். அவ்வளவு தீவிரத்துடன் இருந்ததால்தான் சுதந்திரக்கனவு நனவானது. இப்போது தீவிரமாக, வளர்ச்சிக்கான கனவுகள் காண ஆட்கள் இல்லை என்பதுதான் வேதனை.

உங்கள் பிச்சைப் பாத்திரத்தில் இன்று என்ன விழுமோ என்று மற்றவர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டு ஏன் உட்கார நினைக்கிறீர்கள்? உங்கள் கனவை நனவாக்கிக் கொள்ள முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். ஆச்சர்யமான உயரங்களை உங்களால் தொட முடியும்!

முடியாதது சாத்தியமாகுமா?

ரஷ்யாவில் பாலே நடனம் பிரபலம். லின்கின்ஸ்கீ என்று கலைஞர், பாலே நடனத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்திருந்தவர். அவர் பங்கு பெறும் நடன நிகழ்ச்சிகளில் சுழன்று ஆடித் துள்ளிக் குதிப்பார். புவியீர்ப்பு விசை எல்லார்க்கும் பொதுவானதுதான். ஆனால், லின்கின்ஸ்கீ துள்ளிக் குதிக்கும்போது, விஞ்ஞானத்தின் விதிகளை மீறி அசாதாரண உயரங்களுக்குப் போய் வருவதைப் பலர் பார்த்து வியந்திருக்கிறார்கள். அவரிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் சொன்னார். "என்னால் முடியுமா என்று நான் யோசிக்காத தருணத்தில் என்னையும் மீறிய ஒரு சக்தியோடு செயல்படுவதை உணர்கிறேன்"

லின்கின்ஸ்கீ சொல்வது உண்மைதான். நூறு சதவிகித ஈடுபாட்டுடன் முயற்சி செய்யும்போது, உங்களையும் மீறியதொரு சக்தி பிறக்கும். முழுமையான ஆற்றல் வெளிப்படும். எதுவும் சாத்தியமாகும்!

உங்கள் கனவை நிஜமாக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் அடுத்த ஐந்து வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என்று தீர்மானியுங்கள். அதை நோக்கி திட்டமிட்டு அடியெடுத்து வையுங்கள். ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் உங்கள் கனவு விரிவடைந்து கொண்டே போகட்டும்.

உச்சியை அடைய நினைத்தால், ஏறித்தான் ஆக வேண்டும். கால்கள் வலிக்கும். களைப்பாகும். 'இதெல்லாம் உனக்குச் சாத்தியமில்லை!' என்று மனம் அச்சுறுத்திப் பார்க்கும். 'ஓய்வெடுத்துக்கொள்' என்று சபலம் காட்டும். தளராதீர்கள். செய்வதை முழுமையான விருப்பத்துடன் செய்தால், எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும், அத்தனை களைப்பும் சுகமாகும்!