சத்குரு:

கனவெனப்படுவது, ஒருவகை உண்மை. உண்மை என்பதும் ஒருவகைக் கனவு. கனவின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் விழித்தெழும் நொடியில் அது முடிந்துவிடும். உண்மை என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதும் அப்படித்தான். விழிப்புணர்வு வந்ததும் விடிந்துவிடும். மருத்துவக் கருவிகள் கொண்டு உங்கள் உடலைப் பரிசோதித்தால், விழிப்பிலிருந்து சற்றே தளர்வுநிலை அடைந்திருப்பது தெரியும். அல்லது, உங்கள் விழிப்புநிலை என்பது, பதட்டமான உறக்கநிலை என்றும் சொல்லலாம்.

பகலில் கூட, பெரும்பாலான நேரங்கள் அதுதான் நிகழ்கிறது. உங்கள் ஆசை, உங்கள் விரக்தி, உங்கள் அன்பு, உங்கள் உணர்ச்சி, உங்கள் வெறுப்பு எல்லாமே கர்மவினைகள் கழிகிற இயங்குமுறைதான்.

உறக்கமும் விழிப்புநிலையும் ஒன்றுதான் என்பதற்காக, கனவும் உண்மையும் ஒன்றாகிவிடுமா என்று நீங்கள் கேட்கக்கூடும். உங்கள் ஐம்புலன்கள் வழியே புரிந்து கொள்வதைத்தான் உண்மை என்று கருதுகிறீர்கள். உண்மை என்பது உங்கள் மனதின் புரிதல் மட்டும்தான். கனவும் அதுபோலத்தான்! இது வேறுவிதமான உண்மை. உளவியல் ரீதியான உண்மை என்று இதற்குப் பெயர் கொடுக்கலாம். பலருக்கும் மனதில் நினைப்பதைவிட வலிமையான கனவுகள் வரும். துரதிருஷ்டவசமாக அவர்கள் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை.

ஏற்கெனவே செய்த ஒன்றைக் கழிப்பது என்று வாழ்க்கையைச் சொல்லலாம். உங்கள் கர்மவினை காரணமாகவே வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று சொல்வதன் பொருள், ஏற்கெனவே செய்த ஒன்று இப்போது சரிசெய்யப்படுகிறது என்பதுதான்.

ஆனால் பலருக்கும் அவர்களுடைய கர்மவினைக்கேற்ற வாழ்க்கைச் சூழல் இருக்காது. கண்கள் திறந்த நிலையில் நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்ற உலகின் உதவியை எதிர்பார்த்தால் யாரும் உதவ மாட்டார்கள். ஏனெனில் அவரவர்களுக்கு அவரவர் கனவுகள் காத்திருக்கும். கர்மவினைகளை விழிப்புணர்வில்லாமல் கடக்கும் தன்மை மாறி விழிப்புணர்வுடன் நிகழ்ந்தால்தான் விழிப்புநிலைக்குப் பயன். ஏற்கெனவே நிகழ்ந்த ஒன்றை நீக்குவதற்கான வாய்ப்புகள் வாழ்க்கையில் இல்லாதபோது, அதற்கு கனவு ஒரு நல்ல வழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோக மரபில், சிவன், ஒன்று முழு உறக்கத்திலோ அல்லது முழு விழிப்பிலோ இருப்பவராக விவரிக்கப்படுகிறார். முழு விழிப்புணர்வுடன் இருத்தல் அல்லது முழு உறக்கத்தில் இருத்தல். இரண்டுக்கும் இடைப்பட்ட உண்மைநிலை என்பதே அவருக்குக் கிடையாது. எனெனில், கரைப்பதற்கு கர்மவினைகள் இல்லாதபோது, ஒன்று நிச்சலனம், அல்லது முழுவிழிப்பு இரண்டில் ஒன்றுதான் இருக்கும். உறங்கும்போது தோன்றும் காட்சிகளை மாத்திரம் நான் கனவென்று சொல்லவில்லை. கண்திறந்த நிலையிலும் கனவிலிருக்கிறீர்கள்.

கனவின் சக்தி, கனவின் பலவீனம், இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கின்றன. கனவில் தொலைந்து போகிறவருக்கு, கனவு மிகவும் சக்தி வாய்ந்தது. கனவை சற்றே தள்ளி நின்று பார்ப்பவருக்கு கனவு மிகவும் பலவீனமானது. கர்மவினை என்பது நீங்கள் செய்யும் செயல்களால் உருவாவதில்லை. மாறாக, ஒருவர் செயல்களில் இருக்கும் உணர்ச்சியின் தீவிரத்தில் இருக்கிறது. உங்களுக்கு வர வேண்டிய கனவு என்னவென்று நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே கனவுகள் என்பவை உங்கள் வினைகளைக் கழிக்கும் நிகழ்வுதான்.

பகலில் கூட, பெரும்பாலான நேரங்கள் அதுதான் நிகழ்கிறது. உங்கள் ஆசை, உங்கள் விரக்தி, உங்கள் அன்பு, உங்கள் உணர்ச்சி, உங்கள் வெறுப்பு எல்லாமே கர்மவினைகள் கழிகிற இயங்குமுறைதான். உதாரணமாக, நேற்றைக்கு ஒருவர்மீது மிகுந்த கோபத்துடன் இருந்தீர்கள். இன்று அவர்மேல் கோபப்படக்கூடாதென்று முடிவெடுக்கிறீர்கள். ஆனால் அவரைப் பார்த்ததுமே உங்களுக்குக் கோபம் வருகிறது. இதில் உங்கள் செயலென்று எதுவுமில்லை. ஏற்கெனவே நிகழ்ந்த ஒன்றின் எதிர்விசையில் போகிறீர்கள். தன்னுடைய சுயவிருப்பத்தின் பேரிலேயே தான் செய்வதெல்லாம் நிகழ்கிறது என்றொருவர் நினைத்தால் அதுதான் அடிப்படை அறியாமை.

பிரார்த்தனைப் பாடல் ஒன்றில் இவ்வாறு சொல்லப்படுகிறது. "எல்லாம் நீதான் மகாதேவா! எல்லாம் நீதான்! என் தீமைகளை நிகழ்த்துவது என் மனம்! என் செயல்களை நிகழ்த்துவது என் உடல். இதில் நான் எங்கே இருக்கிறேன்? எல்லாம் உன்னுடையதே!" இதை ஒரு பக்தர் சொன்னால் அது ஆழ்ந்த புரிதலின் விளைவு. இதை உங்கள் மனம் சொன்னால், அது மாபெரும் தந்திரம். பெரும்பாலானவர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒன்று நிகழாத போது, பொறுப்பை யார் மீதாவது சுமத்தி விடுகிறார்கள். உங்கள் நன்மைகள், தீமைகள், இரண்டுக்குமே இன்னொருவரைப் பொறுப்பாக்கினால் பரவாயில்லை. உங்கள் நலன்களுக்கு நீங்கள் பொறுப்பு, தீமைகளுக்கு இன்னொருவர் பொறுப்பென்றால் அது நியாயமில்லை. அடிமுட்டாள்தான் உங்களின் இந்த பேரத்தை ஏற்றுக் கொள்வான்.

முழு மூடன் கூட, தன்னுடைய நலனென்று வரும்போது மிகவும் புத்திசாலி ஆகிவிடுகிறான். மனிதர்கள் அறிவாளிகளாக ஆக ஆக, தங்கள் தனிப்பட்ட நலன் மீதான விருப்பத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். அறிவு விரிவடைந்து பலவற்றையும் உணர்கிறபோது, தன்னலம் தானாகவே குறைந்து விடுகிறது.

எனவே கர்மவினை என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. கர்மவினை என்பது உங்கள் செயல்களை அடிப்படையாகக் கொண்டது. சில செயல்கள் செய்யப்பட்டதால்தான் அவை இப்போது நீங்குகின்றன. கர்ம வினைகள் கரைவதில் உங்கள் பங்கு எதுவுமில்லை. அது தானாகவே நிகழ்கிறது.

ஒருபுறம், செய்த செயல்களின் விளைவுகள், தெரிந்தும் தெரியாமலும் தங்களைக் கரைத்துக் கொள்கின்றன. இன்னொரு புறம் நீங்கள் சிலவற்றை செய்து முடிக்க விரும்புகிறீர்கள். அவை வலுவான உணர்ச்சிகளாக இருந்தால் கர்மவினைகளாகின்றன. உதாரணமாக, ஒருவர் மீது உங்களுக்குக் கோபம் வந்து, கோபம் தானாக ஆறிவிடுவது இயல்பானது. ஆனால், கோபத்தில் எதையாவது செய்வதென்று முடிவெடுத்தால் உங்கள் கர்மவினை கூடுகிறது. இதனால் வெறுப்பு வளர்கிறது. வெளிக்காட்டாமலேயே வெறித்தனமான உணர்ச்சி, உள்நோக்கத்துடன் கூடிய உணர்ச்சி செயல்படுகிறது. உள்நோக்கம் கொண்ட எதுவுமே கர்மவினைதான்.

உங்கள் எல்லா உணர்ச்சிகளையும் வெளிக்காட்டினால் நீங்கள் வெறித்தனமாக இருப்பீர்கள். உங்களை நாகரீகமானவராக காட்டிக் கொண்டால் அதன்மூலம், இருவேறு முகங்களைக் கொண்டவர் ஆவீர்கள். நாகரீகமானவர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள், எளிய மனிதர்களைவிட அதிகமான துன்பத்துக்கு ஆளாவதே இதனால்தான். எளிய மனிதர்கள், தங்கள் உணர்ச்சிகளை உடனுக்குடன் வெளிக்காட்டி, அப்போதைக்கப்போதே மறந்து விடுகிறார்கள். ஆனால் தங்களை நாகரீகமானவர்கள் என்று நினைக்கிற பலரும், சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றி, பிறகு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் அளவு அதிசாமர்த்தியசாலிகள் ஆகிவிடுகிறார்கள்.

இந்தக் கல்விமுறை அத்தகைய சாமர்த்தியசாலிகளைத்தான் உருவாக்குகிறது. அவர்கள் தகவல்களைத் தெரிந்து கொண்ட அளவு, தங்களைத் தெரிந்து கொள்ளவில்லை.

எனவே கனவையும் விழிப்பையும் நீங்கள் பிரித்துப் பார்க்கவும் அவசியமில்லை. ஒருவகையில் இரண்டுமே ஒருவகை உறக்கம். இரண்டுமே ஒருவகை கனவு. விழிப்பும் ஒருவகை உண்மை. கனவும் ஒருவகை உண்மை. இந்தக் கோணத்தில் உங்களால் பார்க்க முடிந்தால், இரண்டையுமே கர்ம வினைகளைக் கழிப்பதற்கான கருவிகளாக நீங்கள் காணமுடியும்