தற்போதைய முன்னணி டைரக்டர்களில் ஒருவரும், 'நாடோடிகள்' போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவரும், சின்னத்திரையில் மிகப் பிரபலமானவருமான டைரக்டர் சமுத்திரக்கனி தன்னுடைய உணவு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...

நான் முழுக்க முழுக்க கிராமத்தான். இராஜபாளையம் பக்கத்திலுள்ள சின்ன கிராமம். கேப்பைக் கூழும், கம்புச்சோறும் சாப்பிட்டு வளர்ந்தவன். எங்க அம்மா, பாட்டி எல்லோரும் இதைத்தான் சமைச்சாங்க, சாப்பிட்டாங்க. எங்களுக்கும் போட்டு வளர்த்தாங்க. அரிசிச் சோறுங்கறது ரொம்ப அதிகமான உணவு எங்களைப் பொறுத்த வரையில்.

இப்போ நகரங்களில்தான் பாலீஷ் போட்ட 'பளீர்' அரிசி வேண்டும் என்கிறார்கள். மிக அதிகமாகக் காசு கொடுத்து அதை வாங்கி சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஏன்னா விலை அதிகமா கொடுத்து சத்தே இல்லாத சாப்பாட்டை இப்படி சாப்பிடறாங்களே அப்படீன்னுட்டு....

அதுவே கேப்பையும், கம்பும் இவ்வளவு விலை கிடையாது. முழுக்க முழுக்க நம் தமிழ்நாட்டுக்கு ஏத்தமாதிரி உடல் குளிர்ச்சியைக் கொடுக்கும். சத்தும் ரொம்ப அதிகம். அதனால்தான் இந்த உணவைச் சாப்பிட்டுட்டு எங்க அம்மாவும், ஆயாவும் வயதான பிறகும் நல்ல திடகாத்திரமா இருக்காங்க. நாள் முழுக்க வெயில்ல வேலை செய்யவும் முடியுது. அதனால நான் இன்றைக்கும் அந்த சாப்பாட்டை விடறது இல்லே. சத்தான சாப்பாட்டை சாப்பிடணும்னு விரும்பறவங்க வாரத்துக்கு ஒரு நாளாவது இதை சாப்பிடணும். அந்த ஆரோக்கியத்தை நிச்சயமா உணருவீங்க.

நான் ஷுட்டிங்குக்கு கிராமப் பக்கம் என் படப்பிடிப்புக் குழுவினரைக் கூட்டிட்டுப் போகும்போது, அவங்களுக்கும் இந்த சாப்பாட்டைத்தான் கொடுப்பேன். எல்லோருமே ரசிச்சுதான் சாப்பிடுவாங்க.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்பதாங்க இந்த வெள்ளாவில வெளுத்து வச்சமாதிரியான சாப்பாட்டுக்கும் பழகிக்கிட்டு இருக்கேன். இன்னும் பழசையும் விடலை. நான் ஈஷா யோகா சென்டருக்குப் போய் சாம்பவி முத்ரா பயிற்சியில் கலந்துகிட்டப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடிச்சு. ஏன்னா எனக்குப் பிடிச்ச கேப்பை, கம்புல செஞ்ச உணவைக் கொடுத்தாங்க. ரொம்பவுமே ரசிச்சு சாப்பிட்டேன்.

உணவுங்கறது வாழ்க்கையில் மனிதனுடைய இன்றியமையாத தேவை மட்டுமல்ல. அவனை அவனா உருவாக்கறதே உணவுதான். ஒருத்தன் என்ன சாப்பிடறான்னு தெரிஞ்சுக்கிட்டாவே, அவன் எப்படிப் பட்டவன்னு சொல்லிடலாம். அந்த அளவு மனிதனாக மாறுவது உணவுதான்.

அதனால்தான் ஒவ்வொரு இடத்திலேயும் அந்தந்த நிலம், மண்வாகு, சூழ்நிலை, தட்பவெப்பம் இதை வச்சு உணவைத் தயாரிச்சாங்க, சாப்பிட்டாங்க. ஆரோக்கியமாகவும் இருந்தாங்க. ஆனா இப்போ ஒவ்வொருத்தரும் பறந்துகிட்டே இருக்காங்க. இன்னிக்குக் காலையில கிளம்பி அமெரிக்கா போயிடறாங்க. சடார்னு அவங்க சூழ்நிலையே மாறிப்போயிடுது. ஆனாலும் அவங்க அடிப்படை உடம்பின் செல்களுக்கும், கட்டமைப்பிற்கும் அவங்க பிறந்த மண்ணில் விளைந்த உணவே நல்லது. ஆரோக்கியத்தைக் கொடுக்கக் கூடியது. நம்மை மாதிரி இருப்பவர்களுக்குக் கேப்பையும், கம்பும் தான் சிறந்த உணவு. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டு ஆரோக்கியமா இருக்கலாம்.

எங்க அம்மா செய்யும் ரெண்டு ரெசிப்பிகளைச் சொல்லட்டுமா....?

கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - மூன்று மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • மாவுடன் உப்பு மற்றும் மூன்று மடங்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • இதை சிம்மில் வைத்து மாவு வேகும்வரை கிளறினால் கேழ்வரகு கூழ் தயார்.
  • இதைப் புளிக்க வைத்து, நீர் சேர்த்து மறுநாள் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

பின் குறிப்பு: ராகி இரும்பு சத்து நிறைந்தது. ஊளைச் சதையைக் குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க மிகவும் உதவும்.

கம்புச் சோறு

தேவையான பொருட்கள்:

சுத்தப்படுத்திய கம்பு ஒரு கப்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

  • கம்புடன் நான்கு மடங்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஆறு விசில் வரும்வரை குக்கரில் வேகவிடவும்.
  • இதை வேர்க்கடலை சட்னியுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
  • கம்பை அரை வேக்காடு வேகவைத்து பிறகு இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பின் குறிப்பு: கம்பு, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.