"ஒரு துணி நெய்யப்பட்டாலும் உணவு சமைக்கப்பட்டாலும் அதனைக் கைகளால் செய்யும்போது அதற்கு ஒரு தனி குணம் உண்டு." இது கைவினைக் கலையைப் பற்றி பேசும்போது சத்குரு கூறியவை. அக்டோபர் 9 முதல் 13 வரை ஈஷாவில் நடைபற்ற கலையின் கைவண்ணம் எனும் கைவினைக் கண்காட்சியில், தனது கைவண்ணத்தை காட்டிய கைகளை நேரடியாகக் கண்ட அனுபவங்கள் இங்கே சில...

கலம்காரி கலையை அலங்கரித்த நாகமணி

பீஹாரியா அல்லது ஒடியாவா எனத் தெரியவில்லை; சூரியகுண்டத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி வளாகத்தில் ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடல், அங்கிருந்த அனைவரையும் தாளம்போட வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் நாகமணியின் கைகள் மட்டும் எந்தவித சலனமும் இல்லாமல் அந்த பருத்தி நூல் சேலையில் பூச்செடிகளை வரைந்துகொண்டேயிருந்தன. "நாங்கள் ஈஷா காட்டுப் பூ மாத இதழுக்காக உங்களைச் சந்திக்க வந்திருக்கிறோம்" என்று சொன்னபோது, "எனக்குத் தமிழ் தெரியாது" என அவர் தெலுங்கில் சொன்னது எனக்குக் கொஞ்சம் புரிந்தது. "இங்கிலீஷ் தெரியுமா?!" என்றபோது, "கொஞ்சம்... கொஞ்சம்!" எனத் தமிழில் பதிலளித்து புன்னகைத்தார் நாகமணி.

மெலிந்த உருவம்; சலனமில்லா முகம்; களங்கமில்லா புன்னகை - இவைதான் நாகமணி. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாலஹஸ்தியைச் சேர்ந்த நாகமணி, வீட்டிற்கு ஒரே மகள். சிறிய வயதிலேயே அப்பாவை இழந்த இவர், பள்ளியில் படிக்கும் தம்பிக்காவும் தன் அம்மாவிற்காகவும், ஆடைகளில் ஓவியம் வரையும் இந்த கலம்காரி கலையை பிழைப்பிற்காக கற்றுக்கொண்டவர். நாகமணிக்கு, தான் ஒரு கலைஞர் என்றோ, ஒரு உன்னதக் கலையை செய்துகொண்டிருக்கிறோம் என்றோ தெரியாததுதான் சோகம். அவரைப் பொறுத்த வரை, அந்தக் கலை அவரின் வறுமையிலிருந்து தன்னைக் காக்கும் ஒரு தற்காப்புக்கருவி.

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்5

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்6

ராஜஸ்தானின் காவர்ட் கலை...

வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட மரத்தாலான காவர்ட் கோயில்களைக் காட்டியபடி புராணக் கதை சொல்லிக் கொண்டிருந்தார் திரு.தேவேந்தர் கடியான். "காவர்ட்" எனும் இந்த அற்புதக் கலை இதிகாச மற்றும் புராணக் கதைகளைச் சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அடுக்கடுக்கான கதவுகள் கொண்ட இந்த காவர்ட் கோயில்களின் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து, அதில் வரையப் பட்டிருக்கும் காட்சிகளை வைத்து எதிரில் இருப்போரிடம் கதை சொல்வதுதான் இந்தக் கலையின் முக்கிய அம்சம். உதாரணமாக ராமாயணக்கதையைக் கூறும்போது, அனைத்துக் கதவுகளையும் திறந்த பின், இறுதியில் ராமரும் சீதையும் ஒன்றாக காட்சியளிப்பார்கள்.

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்3

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்

வார்லி ஓவியங்களுக்கிடையே இரு இளைஞர்கள்...

"இது எல்லாமே உங்க கையால வரஞ்சதா" இதுதான் அங்கு கேட்கப்பட்ட ஒரே கேள்வி. அவ்வளவு நுணுக்கமான ஓவியங்கள்; தரமான ஆர்கானிக் துணிகளில் வரையப்பட்டிருந்தன. திரு.நரேஷ் போஹே மற்றும் திரு.திலீப் பாவுட்டா ஆகிய இரு இளைஞர்களும் வியாபாரத்தில் கூட கவனமில்லாமல், தொடர்ந்து வரைந்து கொண்டேயிருந்தார்கள். அந்த அணுகுமுறையே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்படி இவர்கள் என்னதான் வரைகிறார்கள் என அருகில் சென்று பார்த்தபோது...

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்7

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்4

மஹாராஷ்ட்ராவின் பழங்குடி இன மக்களின் கலையான வார்லி ஓவியக் கலை, வார்லி என்ற கிராமத்தின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. மஹாராஷ்ட்ராவில், வார்லி ஓவியங்கள் இல்லாமல் கல்யாண வீட்டின் சுவர்கள் இருப்பின், அந்தக் கல்யாணம் அவ்வளவு சிறப்பானதாகக் கருதப்படுவதில்லை. பெரும்பாலும் மரங்களையும் மக்களின் வாழ்க்கை முறையையுமே அவர்கள் ஓவியங்களாகத் தீட்டுகின்றனர். இந்த ஓவியத்தில் காணப்படும் பச்சை நிறம் பசுஞ்சாணத்திலிருந்தும், காவி மற்றும் பழுப்பு நிறங்கள் மண்ணிலிருந்து எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிப்பிக்குள் ராமன்!

கடல் சிப்பியை வைத்து இத்தனைப் கலைப்பொருட்கள் செய்ய முடியுமா?! என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் சென்னையிலிருந்து வந்திருந்த திரு.ஆப்ரஹாம் ராமன். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென சிறப்பு பயிற்சி அளிக்கும் திரு.ராமன், அழைப்பின் பேரில், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கும் இந்தக் கலையைப் பயிற்றுவிக்கிறார். கலை, மாணவர்களுக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுத் தருவதோடு பக்குவமடையச் செய்யும் என்பது ஆப்ரஹாம் ராமனின் உறுதியான கருத்து.

கலையின் கைவண்ணம் காட்டிய கைகள்1
சாதிக்கக் காத்திருக்கும் ராஜலக்ஷ்மி!

"10ஆம் வகுப்பில் 490 மார்க்; ஸ்கூல் ஃபஸ்ட் வந்தேன். ஆனா எங்க அப்பா அம்மா அதுக்கு மேல என்னப் படிக்க அனுமதிக்கல." என்று ராஜலக்ஷ்மி கூறியபோது அவரிடமிருந்து ஒருவித ஏக்கம் நம்மையும் தாக்கியது. இன்று இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும்போதிலும், காகிதங்களை வைத்து பலவித கலைப்பொருட்களை உருவாக்கியுள்ள பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜலக்ஷ்மி, தனது குடும்பத்தை மட்டுமல்லாது, தனது தலைமையில் 17 குடும்பங்களை வாழ வைக்கிறார். "எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்ட்டர் அடிக்கடி 'நீ பெரிய சாதனைப் பெண்ணா வருவன்னு' சொல்வாரு. அதுமாதிரியே இன்னும் பெருசா சாதிக்கணும்னு ஆசப்படுறேன்" என சொல்லி புன்னகை செய்தார் அந்த சாதனைப் பெண்மணி.

நேர்காணல் - ராஜா கண்ணன்