தியேட்டர்களில் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிக்காமல் இருக்கும் பலர், சோகக் காட்சிகளில் யாருக்கும் தெரியாமல் கைக்குட்டை கொண்டு கண்களை துடைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, சோக உணர்வு மனிதரை ஆழமாகத் தொடும் அளவிற்கு ஆனந்த உணர்வு தொடுவதில்லை என்ற கருத்து உள்ளது. இதனை மாற்றும் விதமாக ‘யோகா’ ஆனந்தத்தை ஆழமாக உணர உதவுமா? எப்படி? தொடர்ந்து படித்தறியுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: பெரும்பான்மையான உன்னதமான கலைவடிவங்கள் வலியையும், சோகத்தையும் சித்தரிப்பதாக உள்ளது. ஒரு ஓவியரிடம் நான் உரையாடியபோது, அவர் தனது வேதனைக்குள் ஆழ்ந்து சென்று வண்ணம் தீட்ட விரும்புவதாகக் கூறினார். ஏனெனில் அப்போதுதான் அவருடைய மிக ஆழமான உணர்ச்சியை ஓவியத்தில் வெளிப்படுத்த முடிகிறது என்றார். தீவிரமான வேதனையிலும் கூட ஒரு ஆனந்தம் இருக்கிறதா? உதாரணமாக, ஏதேனும் துக்கம் தோய்ந்த பாடல்களைக் கேட்டால், மிகுந்த சோகமாக நாம் உணர்கிறோம். ஆனாலும் ஏதோ ஒருவிதத்தில் அந்தப் பாடலை அனுபவிப்பதன் காரணம் என்ன?

சத்குரு:

துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் துன்பத்தைத்தான் மிகவும் ஆழமாக அனுபவித்திருக்கின்றனர். ஆனந்தம், அன்பு அல்லது அமைதி போன்றவற்றை அவர்கள் ஆழமாக அனுபவித்ததில்லை. அதுபோன்ற உணர்ச்சிகளை மேம்போக்காக மட்டுமே அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் வலியும் வேதனையும் அவர்களுக்கு ஆழமாக நிகழ்ந்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதரும், எங்கோ, வாழ்க்கையைத் தான் தற்போது அறிந்திருப்பதைவிட மேலும் ஆழமாக அறிய விரும்புகிறார். ஆன்மீகத் தேடுதலில் இருக்கும் ஒருவர் விழிப்பு உணர்வோடு அந்தத் தேடுதலில் இருக்கிறார். ஆனால் உண்மையில் ஒவ்வொரு மனிதருமே அதைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், வாழ்க்கையை இப்போது உணர்ந்திருப்பதை விட இன்னும் சற்று அதிகமாக உணர வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமாக இருக்கிறது.

மக்கள் மது உட்கொள்வதும், போதை மருந்துகளை நாடுவதும் மற்றும் பாலுறவு குறித்து பைத்தியமாக இருப்பதும் வாழ்க்கையை ஆழமாக உணர விரும்புவதால்தான். இதனால்தான் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து, முற்றிலும் ஆபத்தான செயல்களைச் செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகளை உணர்வதற்காகவே தினமும் அவர்கள் சாகசத்தை தேடிச் செல்கின்றனர். ஒரு மனிதர் விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வில்லாமலோ வாழ்வை மேலும் ஆழமாக உணர்வதற்கான தேடுதலிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான மக்களுக்கு, மகிழ்ச்சியின்மைதான் அவர்களது வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக உள்ளது. தங்களுக்குள் உண்மையான மகிழ்ச்சியை அவர்கள் ஒருபோதும் அறியவில்லை. அது மேலோட்டமாக மட்டும்தான் இருக்கிறது. அவர்களது வாழ்வில் ஆழமாக அது ஊடுருவி இருக்கவில்லை என்பதே உண்மை. இதனால்தான் கலைஞர்கள், இசை வல்லுனர்கள், ஓவியர்கள் மற்றும் நடனமாடுபவர்கள் போன்ற சற்றுத் தீவிரமான மக்கள் எப்போதும் தங்களது படைப்பை வெளிப்படுத்துவதற்கு வலியை மையப்படுத்துகின்றனர். அவர்களுடைய சித்தரிப்புக்கு அது ஒரு ஆழம் கொடுக்கிறது. அவர்களுடைய படைப்புகளில் ஆனந்தம் ஆழமாக வெளிப்படவில்லை, வலிதான் ஆழமாக வெளிப்பட முடிகிறது. உண்மையான ஆனந்தத்தை அவர்கள் வாழ்வில் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அதனால் ஆனந்தத்தை அதன் உயரிய வடிவிலும், ஆழமான சாத்தியமாகவும் சித்தரிக்க, ஓவியமாக்க அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் வேதனையை, வலியை அறிந்திருக்கின்றனர். ஆகவே, தங்கள் வலியை மேலும் ஆழமாக்கி, தங்கள் படைப்பில் அந்த வலி நன்றாக வெளிப்படும்படி செய்ய முயற்சிக்கின்றனர். இப்படித்தான் தங்கள் படைப்புகளில் ஆழத்தைக் கொண்டுவர அவர்களால் முடிகிறது. அதில் இனிமையில்லை, ஆனால் ஆழம் இருக்கிறது.

நீங்கள் செய்வது எதுவாக இருப்பினும், வாழ்க்கையில் இப்போது உணர்ந்திருப்பதைவிட இன்னும் அதிகமாக உணரவேண்டும் என்றுதான் விரும்புகிறீர்கள். விழிப்புணர்வின்றியே நீங்கள் பெரிய அனுபவங்களை உங்கள் வாழ்க்கையில் விரும்புகிறீர்கள். உங்களின் அந்தத் தேடுதலுக்கு யோக விஞ்ஞானம் முறையாக உதவுகிறது. அப்போது வாழ்வின் மையத்திற்குள் உங்களது வேர்களை நீங்கள் பதியச் செய்கிறீர்கள். அந்த நிலையில், வெளிச்சூழ்நிலை உங்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது நிகழ்ந்துவிட்டால், அதன் பிறகு ஆனந்தம் உங்கள் வாழ்வின் இலக்காகக்கூட இருக்காது. அது ஒரு பக்கவிளைவாகவே உங்களுக்கு நிகழ்ந்துவிடும். ஆனந்தம் என்பது ஏதோ உங்கள் சுவாசம் போலவே உங்களுடன் தங்கிவிடுகிறது. மாபெரும் சாதனையாக நீங்கள் நினைக்கின்ற அரிதான ஏதோ ஒன்றாக அது இருப்பதில்லை. அது வெறுமனே உங்களுக்குள் இருக்கிறது.

நீங்கள் ஏற்கனவே ஆனந்தமாக இருந்தால், எது நிகழ்ந்தாலும் அல்லது நிகழவில்லை என்றாலும், எதுவுமே உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. செயலைத் தொடங்குவதற்கு முன்பே, செயலின் பலனிலிருந்து விடுபடுகிறீர்கள். நீங்கள் ஏதோ பற்றற்ற நிலைக்கு வந்துவிட்டதால் இப்படி நிகழவில்லை. நீங்கள் வெறுமனே மிகவும் ஆனந்தமாக இருக்கிறீர்கள், அவ்வளவுதான். நீங்கள் ஆனந்தமாக இருந்தால் மட்டுமே உங்கள் செயலின் பலனிலிருந்து தள்ளியிருப்பீர்கள்.