கைகூப்பி நமஸ்காரம் செய்வதில் இருக்கும் உள்நிலை விஞ்ஞானம்?!

கைகூப்பி நமஸ்காரம் செய்வதில் இருக்கும் உள்நிலை விஞ்ஞானம்?!, kaikooppi namaskaram seivathil irukkum ulnilai vignanam

‘ஹாய்… ஹலோ…!’ என மேற்கத்திய பாணியை நாகரீகம் என நினைக்கும் இன்றைய தலைமுறை, நமஸ்காரம் செய்வது குறித்து சத்குரு சொல்லும் இந்த விஞ்ஞான பூர்வமான தகவல்களைக் கேட்டால் நிச்சயம் மாறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை! நமஸ்காரம் செய்வதால் நமக்குள் நடப்பதென்ன… படித்தறியுங்கள்!

கேள்வி
யாரைப் பார்த்தாலும், கை கூப்பி நமஸ்காரம் சொல்வது நமது கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கிறது. இந்த நமஸ்காரத்தில் என்ன விசேஷம்?

சத்குரு:

இப்படி நமஸ்காரம் சொல்வது இன்னொருவருக்கு வெறுமனே மரியாதை காட்டுவதற்காக மட்டும் அல்ல. நீங்கள் யாருக்கோ நமஸ்காரம் செய்கிறீர்கள் என்றால் அவருக்கு ஏதும் கிடைத்துவிடாது. இது உங்களைப் பற்றியது. உங்கள் முன்னேற்றம் பற்றியது.

மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வது கூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான்.
மனிதன் என்பவன் ஆரம்பநிலையில் ஒரு விதை போலத்தான் இருக்கிறான். ஆனால் அதே மனிதன் விழிப்புணர்வு நிலையில் வளர்ந்துவிட்டால் ஒரு மரம் போல் பிரம்மாண்டமானவன் ஆகிவிடுகிறான். இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை கடவுள் கூட முக்கியம் அல்ல. முக்திதான் முக்கியம். எனவே நீங்கள் விதையாகவே இருந்துவிடாமல் ஒரு மரமாக ஆவதற்காக, உள்நிலையில் வளர்வதற்காக, இந்த கலாச்சாரம் பலவித சூழ்நிலைகளை உங்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது.

மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வது கூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நம் உள் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கலாச்சாரமாகவே அறிந்து வந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் யோக ஆசனங்கள். இந்த உடல் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். நாம் சொல்வதை இந்த உடல் கேட்கவேண்டும். அது சொல்வதுபோல நாம் கேட்கக்கூடாது. அதற்காகத்தான் அத்தனை ஆசனப் பயிற்சிகளும். உடல் உறுப்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது எந்த ஒரு செயலிலும் நாம் நினைப்பது போல் அவை இயங்கும்.

கை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், கால் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ஒரு பொருளை எப்படி வாங்குவது, எப்படிக் கொடுப்பது, எப்படி சாப்பிடுவது என்றெல்லாமே, ஒரு விஞ்ஞானமாக, ஒரு மனிதன் விதையாகவே இருந்துவிடாமல் எப்படியாவது மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கற்றுத்தரப் பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நமஸ்காரமும். மேலும் உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசிவிடுகின்றன.

ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும் போது, உங்களுக்குள் எந்தமாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறுமாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும். கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதைக் காணலாம். எனவே எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. மேலும் நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் முத்ராக்களுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது. நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.

உடல் என்பது மிகவும் சூட்சுமமான சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் இதை முறையாக எப்படி உபயோகப்படுத்துவது என்பதை மறந்து வருகிறோம். நீங்கள் ஓரிடத்திற்கு தனியாகச் சென்று கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டுப் பாருங்கள். கடவுளைக்கூட நினைக்கவேண்டாம். நீங்கள் நாத்திகராகக் கூட இருங்கள். ஆனாலும் இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும். இவை எல்லாமே அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஞ்ஞானமாக நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால் இப்போது மேற்கத்திய நாட்டிலிருந்து வருவதை மட்டுமே நாம் விஞ்ஞானமாக அங்கீகரிக்கிறோம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert