‘‘நமது கலாச்சாரத்தில் ஏன் முன்பெல்லாம் பெரும்பாலும் கடவுள் பெயர்களையே மனிதர்களுக்கு வைத்தார்கள்?’’ என்ற கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

‘‘எந்த ஓர் ஒலிக்கும் அதற்கென்று ஒரு பயன் உண்டு. மந்திரங்கள்கூட அந்த அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன. வெவ்வேறு மந்திரங்களை உச்சரிக்கும்போது, வெவ்வேறு பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பிட்ட பயன்கள் தேவைப்படுபவர்கள், குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்கின்றனர்.

எந்த ஒலிகள் குறிப்பிட்ட பயன்களை நமக்குள் உண்டாக்குகிறதோ, அதையெல்லாம் நாம் கடவுளுக்குப் பெயர்களாகச் சூட்டிவிட்டோம்.

சில ஒலிகளை நாம் உச்சரிக்கும்போது மட்டும், அவை நமது உயிர்த்தன்மையில் குறிப்பிட்ட விளைவை உண்டாக்கும். எனவே, அந்த ஒலிகளையே கடவுள்களின் பெயர்களாக வைத்துக் கொண்டோம். நீங்கள் உங்களை ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தயார்படுத்திக்கொண்டு, ‘ஷிவா’ என்னும் சாதாரண ஒலியை உச்சரித்தாலே, உங்களுக்குள் ஒரு புதிய பரிமாணத்தின் அனுபவம் வெடிக்கும். இது போல பல நூறு ஒலிகள், பல நூறு பரிமாணங்களை உங்களுக்குத் தருகின்றன.

எனவே, அந்த ஒலிகளையெல்லாம் கடவுள்களுக்குப் பெயர்களாகச் சூட்டியதால், ஆயிரக்கணக்கான கடவுள்கள் நமது கலாச்சாரத்தில் இருக்கிறார்கள். அப்படியானால் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்களா? அப்படிக் கிடையாது. எந்த ஒலிகள் குறிப்பிட்ட பயன்களை நமக்குள் உண்டாக்குகிறதோ, அதையெல்லாம் நாம் கடவுளுக்குப் பெயர்களாகச் சூட்டிவிட்டோம். எனவே, கடவுளின் பெயர்களை நாம் உச்சரிக்கும்போதெல்லாம், அந்த ஒலிக்கு உண்டான பயன் நமக்குக் கிடைக்கிறது.

கடவுளுக்கு வைத்தது போலவே, கடவுள் பெயர் என்று சொல்லி அதே பெயர்களையே உங்களுக்கும் வைத்தார்கள். எனவேதான் நமது கலாச்சாரத்தில் பெரும்பாலோரின் பெயர்கள் ராமா, ஷிவா, கிருஷ்ணா என்று ஏதோ ஒரு கடவுளின் பெயராகவே இருந்தது. எனவே, அந்தப் பெயர்களை அதற்கென்று நேரம் ஒதுக்கி உச்சாடனம் செய்யாமலேயே, அந்தப் பெயரால் குடும்பத்தினரும் மற்றவர்களும் உங்களை அழைக்கும்போது. அந்த உச்சரிப்புக்கான பலன் அவர்களுக்குக் கிடைத்தது.

ஆனால், உங்கள் பெயரை நீங்கள் எப்போதும் உச்சரிப்பதில்லை. உங்கள் பெயரை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடிய பலன் உங்களுக்குக் கிடைப்பதில்லை. உங்கள் பெயரை மற்றவர்கள்தான் உச்சரிக்கிறார்கள். எனவே, அதற்கான பலன் அவர்களுக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் அப்படிப் பெயர் வைக்கும் நிலை மாறி வருவதால் உங்களை அழைப்பதால் கிடைக்கும் பலனை மற்றவர்கள் இழக்கிறார்கள். மேலும் எண் ஜோதிடம் என்ற பெயரில் உங்களில் சிலர் சரியான பெயரையும் உருக்குலைத்துக் கொள்கிறீர்கள். நாம் உருவாக்கிய எண்களே நம்மை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள் அன்பர்களே!’’