தியானலிங்கத்தின் 17வது பிரதிஷ்டை தினம் ஜூன் 24ஆம் தேதி ஈஷா யோக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, தியானலிங்கத்தின் தனித்துவம் மற்றும் தியானலிங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு கேள்வி-பதில்களின் தொகுப்பு இங்கே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: கடவுள் இல்லை என்று சொல்லும் என்னைப் போன்றோருக்கு தியான லிங்கத்தில் என்ன இருக்கிறது? நீங்கள் தியானத்திற்குரிய லிங்கம் என்று சொல்வதால் கேட்கிறேன்.

சத்குரு:

இஸ்லாமியர்கள் ஞானோதயமடைய முடியாது, கிறிஸ்துவர்கள் ஞானோதயம் அடைய முடியாது, இந்துக்களும் ஞானோதயமடைய முடியாது. பெண்கள் ஞானோதயமடைய முடியாது, ஆண்களும் ஞானோதயமடைய முடியாது, நீங்கள் இவற்றையெல்லாம் கடந்திருந்தால் மட்டுமே ஞானோதயமடைய முடியும். நீங்கள் எதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் உங்களுக்கு ஞானோதயம் கிடையாது. அதனால் தேடுதலில் உள்ளவர் என்றால் அவர் தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. நீங்கள் தியானலிங்கத்தின் முன் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இந்துவாகவோ முஸ்லிமாகவோ அமர்ந்தால், நீங்கள் ஏதோ ஒன்றுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அதனை மெய்ப்பிக்க நினைக்கிறீர்கள். இது தேடுதல் அல்ல, தந்திரம்.

தியானலிங்கம், தியானத்திற்காக உருவாக்கப்பட்டது என்று நாம் எத்தனை முறை சொன்னாலும் சிலர் இதனை ஒரு லிங்கமாகத்தான் பார்க்கிறார்கள், இது இந்து மதத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். தியானலிங்கம் யோக அறிவியலின் சாரம். இங்கு யோகா தன் முழு பாரம்பரியத்தின் பழுத்த கலைத்துவ வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அறிவியலை அறிவியலாக மட்டுமே வழங்கினால் அது பலபேருக்கு bore அடிக்கும். அதனால் அறிவியலில் சற்று வண்ணம் பூசி, இந்தக் கலாச்சாரத்துடன் ஒத்துள்ளதாய் அதனை உருவாக்கியுள்ளோம். இந்தக் கலாச்சாரத்தில் சிறிய விஷயங்களுக்குக்கூட எழில்மிகு வண்ணம் சேர்ப்பது வழக்கமாய் உள்ளது. எந்தவொரு விஷயத்திற்கும் உயிர் சேர்த்து, அழகு கொடுப்பது நம் பாரம்பரியத்தின் அழகு. நாம் பூசியிருக்கும் சாயத்தை பார்த்து மக்கள் இதனை ஏதோ ஒரு மதத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இதோ யோக அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட தியானலிங்கமும் இந்த வெள்ளியங்கிரி மலைகளும், மலையடிவாரமும் யோக மையம் முழுவதும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்குத் தான். வாருங்கள் உங்களில் மலருங்கள்!

Question: இத்தனை பேர் தியானலிங்கக் கோவிலுக்கு வந்து செல்கிறார்களே... இதனால் உங்களுக்கு என்ன பயன்? உண்டியல்கூட இருப்பதாக தெரியவில்லையே...

சத்குரு:

தியானலிங்கத்துடன் மக்களுக்கு மிக ஆழமான நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது. எண்ணிலடங்கா மக்கள் எம்மிடம் வந்து, தீர்த்தகுண்டத்தில் ஒரே ஒருமுறை மூழ்கி வந்தவுடன் அவர்களுடைய ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது என்று பகிர்ந்த வண்ணம் உள்ளனர். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஆழமான ஓர் அனுபவம் அவர்களை ஆட்கொண்டுள்ளது. ஒரு மனிதன் செய்யக்கூடிய கடினமான செயல் அவன் சற்று நேரம் கண்மூடி அமர்வதே. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் மனம் உங்களை அந்த நிலையில் இருக்க விடாது. தியானலிங்கம் அதை நிறைவேற்றுகிறதே! இரண்டு நிமிடம் உட்கார்ந்து செல்லலாம் என்று வருபவர்கள் அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டுச் செல்கின்றனர். அது மட்டுமா, வீட்டிலும் தொடர்ந்து தியானம் செய்கின்றனர். இவை நிகழ ஒரு மனிதன் ஆழமாகத் தொடப்பட்டிருக்க வேண்டுமல்லவா? நம் முயற்சியெல்லாம் ஒரு மனிதனுக்குள் தியானத் தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதுதான். எந்த ஒரு முன் முடிவுகளும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் திறந்த மனதுடன் வாருங்கள். ஆன்மீக அனுபவத்தை பருகிச் செல்லுங்கள்.