கடமையை செய்வதற்கு அவசியமே இல்லை!!

kadamaiyai-seivatharku-avasiyame-illai

“என்ன இருந்தாலும் அது என் கடமையில்லையா?!” என்று சலித்துக் கொண்டே உலகில் பல செயல்கள் நடந்தேறுகின்றன. கடமையாக நினைத்து செயலாற்றுபவர்களிடம் எல்லாம் இருந்தும், முகத்தில் ஆனந்தம் மிஸ் ஆகிறது! ஆனால் கடைமை செய்ய அவசியமே இல்லை என்கிறார் சத்குரு. தொடர்ந்து படியுங்கள்…

சத்குரு:

உயிரோட்டம் இல்லாத, உயிரைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாதவர்களிடம்தான் ‘கடமை’ என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் தங்களுக்குள்ளே ஒரு பாறையைப் போல் மாறிவிட்டதால், அந்தப் பாறையை நகர்த்துவதற்காக, அவர்களிடம் கடமையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், நீங்கள் உயிர்ப்புடன் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு கடமையையும் செய்வதற்கு அவசியமே இல்லை. உண்மையில், ‘கடமை’ என்று ஒன்று இல்லை. உங்கள் இதயத்தில் அன்பில்லாதபோதுதான், உங்கள் வாழ்க்கைக்குள் கடமை நுழைகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்களை, சுற்றியிருக்கும் பொருட்களை, சுற்றியிருக்கும் உயிர்களை நீங்கள் நேசிக்கும்போது, நீங்கள் எதைச் செய்தாலும், அதை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி செய்கிறீர்கள்; அது உங்கள் வாழ்வின் இயல்பான செயல்பாடாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்கும்போது, உங்கள் உள்மூச்சும் வெளிமூச்சும் எப்படி இயல்பாக நடக்கிறதோ அதைப்போலவே, மற்ற வேலைகளையும் செய்வீர்கள். ஏனென்றால், உங்களால் அதைத் தவிர்த்து, வேறெப்படியும் செயல்பட முடியாது.

இந்த உலகத்துக்கு நீங்கள் இழைக்கக் கூடிய மிகப் பெரிய பாவம், உங்கள் இதயத்துக்குள் துன்பத்தை வைத்துக் கொண்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடப்பதுதான்.
நான் ஆசிரமத்தில் நடந்து செல்லும்போது, ஒரு செடி போதிய தண்ணீர் இல்லாமல் வாடிப் போயிருப்பதைப் பார்த்தால், உடனே அதற்குத் தண்ணீர் ஊற்றுவது என் இயல்பான செயலாக இருக்கிறது. அதற்கு தண்ணீர் ஊற்றுவது என் கடமை என்றில்லை. கடமையைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. அது என் கடமையாக இல்லாவிட்டாலும், நான் ஓடிப்போய் தண்ணீர் ஊற்றுகிறேன். நான் அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமா, இல்லையா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பதில்லை. அது காய்ந்து போயிருப்பதால் நான் தண்ணீர் ஊற்றுகிறேன், அவ்வளவுதான். நீங்கள் சக உயிர்களிடத்தில் தேவையான அளவு அன்பை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கு கடமை என்பதே இருக்காது.

உங்கள் மனதில் அன்பிருந்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் எது தேவையோ அதைச் செய்வது உங்களுக்கு இயல்பாகவே வரும். ஆனால் உங்கள் இதயத்தில் அன்பில்லை என்றால், அதைக் கடமையாக எண்ணிச் செய்தால், உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் நோயாளி ஆக்கிவிடுவீர்கள். நீங்கள் உங்கள் கடமையைச் செய்வதாக நினைக்கும்போது, அது உங்களுக்கு ஒரு சுமையாகவும், வலியாகவும் ஆகிவிடுகிறது. பின் அந்த வலியை உலகத்துக்கெல்லாம் பரப்புவீர்கள்.

இந்த உலகத்துக்கு நீங்கள் இழைக்கக் கூடிய மிகப் பெரிய பாவம், உங்கள் இதயத்துக்குள் துன்பத்தை வைத்துக் கொண்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடப்பதுதான். அதனால் எதையுமே ஒரு கடமையாக எண்ணிச் செய்யாதீர்கள். ஆனந்தமான மனிதராக இருப்பதுதான், இந்த உலகத்துக்கு நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான செயல்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert