"ஜோரான மழை, சுவையான காபி, சூடான பஜ்ஜி, கடலைபோட ரெண்டு ப்ரண்ட்ஸ் இதைவிட என்னவேணும் வாழ்கைல" என்பவரா நீங்கள்... அப்படியே இருந்தாலும் காபி உடம்புக்கு நல்லதா என்ற சந்தேகமும் தலையெடுக்கிறதா உங்கள் மனதில்? குறைத்துக் கொள்ள வேண்டுமோ என்கிற கேள்வியும் எழுந்துவிட்டதா? ம்ம்... இந்நிலையில் நீங்கள் தனியாகத் தவிக்கவில்லை, உங்களுக்கு ஏகத்துக்கும் இருக்கிறது துணை...

காபியைப் பற்றி பல வாதங்கள் இவ்வுலகில் பல இடங்களில் நடந்திருக்கிறது. அது விளைவிக்கும் கேடுகள், அதற்கு இருக்கும் மருத்துவ குணங்கள் என்று பலர் இதில் பிளவுபட்ட கருத்துடனே இருக்கிறார்கள். நீரிழிவு நோய், உடல் தளர்ச்சி போன்றவற்றிற்கு காஃபியைப் போன்ற மருந்தில்லை என்று சிலரும், இதய நோய்கள் புற்று நோய்களுக்கு முக்கிய காரணமே காஃபிதான் என்று சாடுவதற்கு சிலரும் போர்கொடியோடு தயாராக இருக்கிறார்கள். வல்லுனர்கள் இப்படி வேறுபட்டு நிற்க, இங்கு காபி பற்றி சத்குருவின் வார்த்தைகளில்...

சத்குரு:

காபி உங்களை விழிப்புடன் வைக்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது, கிளர்ச்சியடையச் செய்கிறது, அதனால் அதற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தே ஆக வேண்டும். அதிலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே காபி குடித்தால், நீங்கள் ஆச்சரியப்படும் அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும். நீங்கள் ஏதோ வீர அபிமன்யு போல் தெம்பாகக் கூட உணர்வீர்கள்.
ஆனால் தினம் தினம் அதை அருந்தினால், நீங்கள் அதை சார்ந்து வாழ்பவர் ஆகிவிடுவீர்கள். காபியை குடித்தவுடன் உங்கள் பயம், கவலைகள் எல்லாம் விலகிவிட்டது போல் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே உங்கள் உடல் 'இன்னும் கொஞ்சம் காபி வேண்டும்' என்று அனத்தத் துவங்கிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு இரண்டு மாதங்கள் நீங்கள் காபியே அருந்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் காலை எழுந்தவுடன் நல்ல ஸ்ட்ராங்காக ஒரு காபி, அதிகமாக டிகாக்ஷன் சேர்த்து குடித்தீர்கள் என்றால் உங்கள் கைகள் நடுங்குவதை நீங்கள் உணர முடியும்.

இதுவே ஒரு ஆறு மாத காலம் தொடர்ந்து நீங்கள் காபி அருந்தி வந்தீர்கள், திடீரென்று ஒரு நாள் காபி வேண்டாம் என்று நிறுத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அன்று உங்கள் முடிவை ஏற்க முடியாமல் உங்கள் உடல் தவிப்பதையும், மீண்டும் மீண்டும் காபி வேண்டும் என்று அது ஏக்கமாக நச்சரிப்பதையும் நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். அப்படி என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் காபி உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கிறதுதானே?
அப்போது நான் காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். எதை விட வேண்டும், எதை விட வேண்டாம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை விடுங்கள், அதை விடுங்கள் என்று நான் எப்போதும் வலியுறுத்த மாட்டேன்.

நான் சொல்வதெல்லாம் - நீங்கள் இங்கு வாழும்போது, எதற்கும் நீங்கள் அடிமைப்பட்டு வாழாதீர்கள் என்பது மட்டும்தான். பதிலாக, விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

காபியாக இருந்தாலும் சரி, சிகரெட்டாக இருந்தாலும் சரி, ஏன் கடவுளாக இருந்தாலும் கூட சரி, அதனுடன் ஒரு விழிப்புணர்வோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் மட்டும்தான் முடிவு செய்ய முடியும்.

ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தூண்டுகோள்களை ஓரளவிற்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு நீங்கள் விலை கொடுத்துதான் ஆக வேண்டும். "அதனால் என்ன...? வாழ்க்கையே கொஞ்சம் காலம்தானே.

90 வயது வரைக்கும் வாழாமல், நான் 70 வயதிலேயே போகிறேன்" என்று நீங்கள் சொல்பவராக இருந்தால்... பரவாயில்லை. நான் இந்த எண்ணத்தையும் எதிர்க்கவில்லை. காபியையும் எதிர்க்கவில்லை.

ஆனால் இது வலுக்கட்டாயமாக பருகப்பட வேண்டிய ஒரு பானம் அல்ல. அதன் சுவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, என்றோ ஒரு நாள் ஒரு பெரிய குவளை நிறைய வேண்டுமானலும் குடியுங்கள். அதன் சுவையில் திளைத்திடுங்கள். ஒரு நாள் குடித்தால் பரவாயில்லை. ஆனால் தினம் தினம் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அது பெரும் பிரச்சனைதான்.

ஒரு நாள் காபி கிடைக்காவிட்டாலும் அந்த நாளைக் கடக்கவே முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால், நிச்சயமாக நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளத்தான் வேண்டும். போயும் போயும் ஒரு குவளை காபி தானா உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பது...?

நீங்கள் எதை உண்ண வேண்டும் எதைப் பருக வேண்டும் என்று சொல்வது என் வேலை அல்ல. இந்தப் பொருள் உங்களுக்குள் எப்படி வேலை செய்கிறது என்று மட்டுமே நான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் எதைச் செய்து கொண்டாலும் சரி, அதை உங்கள் விருப்பத்தோடு முழுத் தெளிவுடன் செய்யுங்கள்.

ஏதோ கட்டாயத்தினாலோ, அறியாமையினாலோ வேண்டாம். உங்கள் சாவை வரவேற்கச் செல்கிறீர்கள் என்றாலும் கூட, முழு விழிப்புணர்வோடு, என்ன செய்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.

Photo Courtesy:Charles Haynes @ flickr