நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 20

'ராணி' என்றாலே அழகு, கம்பீரம், பொலிவு போன்ற குணங்களுடன் காட்சியளிப்பவள். நாம் மலைகளின் ராணி என்று அழைக்கும் நீலகிரி மலையோ தற்போது தன் பொலிவிழந்து வருகிறது. நம்மாழ்வாரின் பார்வையில் மலைகளின் ராணியின் நிலை என்ன? இதோ அவரது எழுத்துக்கள்!

நம்மாழ்வார்:

உயிரியக்க மண்டலங்கள் என்று உலகில் 260 மிக முக்கிய வட்டாரங்கள் சுட்டப்படுகின்றன. அவற்றில் 13 இந்தியாவில் உள்ளன. அவற்றுள் முதலாவதாகவும், முக்கியமானதாகவும் குறிப்பிடப்பட்டது நீலகிரி உயிரியக்க மண்டலம். பகலிலேயே இருள் ஆக்கிரமித்துக்கொள்ளும்; மனதில் அச்சம் குடிகொள்ளும்; எந்த நேரமும் யானை எதிரே வந்து நிற்கலாம்; காட்டெருமைத் தாக்குதலை எதிர்கொள்ள நேரலாம்; காட்டுப் பன்றி தனது கூரான பற்களால் நமது காலைக் குத்திக் கிழிக்கலாம். மலைப்பாம்பு பற்றியோ சொல்லவே வேண்டாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த நினைவுகள் நம்மை அலைக்கழித்தாலும் காட்டுக்கு வெளியே வருவதற்கு மனம் ஒப்பாது. கணக்கிலடங்காப் பறவைகள் வரைஆடுகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், மரம், செடி, கொடிகளின் அசைவுகள், மலை தழுவும் மேகங்கள், பனி தூங்கும் மலர்கள், சிலிர்த்து நிற்கும் புல்வெளிகள் என்று ஒருமுறை சென்று திரும்பிய மனிதரை மீண்டும் மீண்டும் கவர்ந்து இழுக்க வல்ல நீலகிரி மலையை மலைகளின் ராணி என்று வர்ணிப்பார்கள். அந்த ராணி இப்போது சீர்குலைந்து கிடக்கிறாள்.

எதனால் இந்தச் சீர்கேடுகள் நடக்கின்றன என்று நாம் விளங்கிக்கொள்ளவில்லை என்றால், இயற்கைப் பேரழிவுகளை நாம் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட வாய்ப்பு உண்டு. அந்நியர்கள் நுழையும் வரை நமது மலைகள் சிறப்பாகவே இருந்தன. கோவைக்கு மாவட்ட ஆட்சியராக வந்த ஆங்கிலேயர் சல்லியன் குதிரை மீது ஏறி சவாரி செய்து நீலகிரி மலைக்குப் போய் தனக்கு ஒரு வீடு கட்டிக்கொண்டான். மற்றபடி, பழங்குடி மக்களும், பல்லுயிர்களும் நீலமலையை வாழ்விடமாகக்கொண்டு இருந்தார்கள்.

சல்லியனைத் தொடர்ந்து பல வெள்ளையர்கள் இங்கிலாந்து இயற்கையை இந்தியாவில் அனுபவிக்க, நீலகிரி மலையில் வீடுகள் கட்டிக் குடியேறினார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகி இருந்த உருளைக் கிழங்கு, முட்டைகோஸ், காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் என்று பயிர் செய்யத் தலைப்பட்டார்கள். அப்போதும்கூட மலை அவ்வளவாகச் சேதப்பட்டு விடவில்லை.

ஆங்கில வியாபாரிகள் சீனாவில் செய்து கொண்டு இருந்த தேயிலை வணிகம் படுதோல்வியில் முடியவே, அந்த வணிகர்கள் இந்திய மலைகளை ஆக்கிரமித்தார்கள். காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்கள் போட்டார்கள். அன்று தொடங்கியது பேரழிவு. 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு காடுகள் மீட்டெடுக்கப்படவில்லை. காட்டு நிலங்கள் சூறையாடப்பட்டுவிட்டன.

இப்படியெல்லாம் நடக்கும் என முன்கூட்டிக் கணிப்பதில் நமக்கு ஏதும் சிரமம் இல்லை. 2000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் மத்தியில் எழுந்த இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம் பாடியவர்) மலையும் காடும் சிதைந்தால் அவை பாலையாகும் என்று எழுதியுள்ளார்.

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரியின்
நல் இயல்பு இழந்து நடுங்கு துயருந்து
பாலை என்னும் படிமம்கொள்ளும்’ என்பது அவரது செய்தி.

இப்படி வழிகாட்டு நெறி இருந்தும் நாம் பாதை மாறிப் போனதால் பாதிப்புகளைச் சந்திக்கிறோம். நடந்து முடிந்துள்ள சேதம் 300 கோடி ரூபாய் என்று அமைச்சர் கணக்கு சொல்லி இருக்கிறார். இல்லை, 696 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரை 173 அரிய வகை உயிரினங்கள் என வாழும் வாழ்வாதாரமே நிலைகுலைந்து நிற்கிறது!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!

-Ashwin-, krishnau_seal, VagabondTravels, AnnaKika, T_Monk, AntoGros @ flickr