இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கங்கள் 12. மற்ற லிங்கங்களுக்கும் ஜோதிர்லிங்கத்திற்கும் தோற்ற ரீதியாக எந்தவித வேறுபாடும் இல்லையென்றாலும் சக்திநிலையில் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆன்மீக சாதனாவிற்கு இந்த ஜோதிர்லிங்கங்கள் எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலகில் உள்ள தொன்மையான ஒருசில கலாச்சாரங்களில் இந்திய கலாச்சாரமே, மனித குலத்தின் உடல், மன மற்றும் ஆன்ம நலத்திற்கான உபாயங்களில் அக்கறை கொண்டதாக இருந்தது, இருந்தும் வருகிறது. இங்கே மனிதனின் உடனடி பொருளாதார நன்மை குறித்த விஷயங்களுக்கு குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்பட்டது. இந்த கலாச்சாரத்தில் ஒருவன் பிறந்து வளரும்போது வாழ்வில் அவனது வாழ்வியல் தேவைகளான பணம் சம்பாதித்தல், திருமணம், குடும்பம் இவைகளைத் தாண்டி 'முக்தி' அடைவது பற்றியே அவன் வாழ்வானது பிணைக்கப்பட்டு இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஆன்ம விடுதலையை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டே சமூகம் ஒருங்கமைக்கப்பட்டதாகவும் இருந்தது.

மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஆனால் இயற்கை சக்தியின் துணை கொண்டு சில குறிப்பிட்ட வழிகளில் புனிதப்படுத்தப்பட்ட மையங்களில் ஜோதிர்லிங்கங்கள் அமைக்கப்பட்டன.

எனவே நமது முன்னோர்கள் இயல்பாகவே தம்மால் வடிவமைக்க முடிந்த ஒவ்வொரு கருவியையும் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையையும் இந்த ஆன்மிக வழிக்கான பயணத்தின் பாதையை மென்மேலும் செம்மைப்படுத்தவே முனைந்தனர். இந்து முறைப்படி திருமணம் நிகழும்போது அதை நடத்தி வைக்கும் பண்டிதர் மணமக்களுக்கு செய்கின்ற உபதேசமாவது "இன்று உங்களுக்கிடையில் ஏற்படுகின்ற இந்த பந்தம் மிகச் சாதாரணமானது, ஆனால் இந்தப் பிணைப்பை நீங்கள் முற்றான ஒரு ஆன்மிக ஒன்றிணைப்பிற்கான வழியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க்கையின் சில நிர்பந்தங்கள், தேவைகள் இவைகளுக்காக இன்று மணந்து கொள்கிறீர்கள். அதோடு கூட இப்பிணைப்பை உங்கள் முழுமையான ஆன்ம விடுதலைக்கான உபாயமாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் நீங்கள் இருவருமே முக்தி நிலையைத் தொட்டுவிட முடியும்." இவ்வாறாக வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் ஆன்மிக சம்பந்தப்பட்டதாக இருந்து வந்திருக்கிறது.

இப்பின்னணியில் தான் நம் பாரத தேசத்தில் ஆன்மிக வழிகாட்டலுக்கான சக்தி வாய்ந்த கருவிகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையில் ஜோதிர்லிங்கங்கள் சக்தி வாய்ந்த கருவிகளாக வடிவமைக்கப்பட்டன. இப்படிப்பட்ட ஜோதிர்லிங்கங்களுள் இன்றும் கூட சில உயிர் துடிப்புடனும் தீவிரத் தன்மையுடனும் இருப்பதோடு நன்கு பயனளிக்கக் கூடியதாகவும் உள்ளன. சுயமாகவே தியான நிலையை எய்த முடிந்தவர்களுக்கு இத்தகைய கருவிகள் தேவையில்லை. ஆனால் இயல்பாக தியான நிலை எய்தப் பெறாதவர்களுக்கு புறத் தூண்டுதல்கள் மூலம் அதைச் செய்ய முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட வடிவங்கள் முன் அமரும்போது அது சக்தியை எதிர்கொள்ளும் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

மிகவும் நுட்பமான முறையில் உயிர்சக்தியோடு ஸ்தாபிக்கப்பட்ட ஜோதிர்லிங்கங்களுக்கு அபரிமிதமான ஆற்றல் உண்டு. இவ்வாறு அமைக்கப்பட்ட ஜோதிர்லிங்கங்கள் உலகில் மொத்தம் 12 இருக்கின்றன. புவியியல் ரீதியாகவும் வானசாஸ்திர அடிப்படையிலும் உலகின் முக்கியமான சில மையங்களில் இவைகள் நிறுவப்பட்டுள்ளன. பிரபஞ்ச இருப்பின் (சில) சக்திகளின் ஆளுகையில் இப்புள்ளிகள் இருக்கின்றன. வெகு காலத்திற்குமுன் முன்னோக்கிய சிந்தனையுள்ள சில ஞானிகள் மிக கவனமாக சில மையங்களை தேர்ந்தெடுத்து சக்திநிலை அடிப்படையில் கணித்து கோள்களின் சஞ்சார அடிப்படையில் அவற்றை நிர்ணயித்தனர். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டு ஆனால் இயற்கை சக்தியின் துணை கொண்டு சில குறிப்பிட்ட வழிகளில் புனிதப்படுத்தப்பட்ட மையங்களில் ஜோதிர்லிங்கங்கள் அமைக்கப்பட்டன.

ஜோதிர்லிங்கங்கள் அமைந்துள்ள கோவில்கள் விஞ்ஞான ரீதியாக சக்தியூட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட தலங்களாகும். இதுவே உயிர் சக்தியை பயன்படுத்தி வியக்கத்தக்க வழியில் மனிதனின் வாழ்நிலையை மேம்படுத்தும் விஞ்ஞானமாகும்.

கழனியில் நெல் விளைவிப்பதை 'விவசாயம்' என்கிறோம். இதில் விதையும், மண்ணும் உணவாக மாறுகிறது. உணவு செரித்து, உடலோடு சேரும் முறையை நாம் 'ஜீரணம்' என்கிறோம். இவ்வுடல் மீண்டும் மண்ணுக்கு திரும்புவதை 'எரியூட்டல்' அல்லது 'புதைத்தல்' என்கின்ற சடங்காகப் பார்க்கிறோம். அதுபோலவே இவ்வுடலை, ஒரு இடத்தை அல்லது ஒரு துண்டு கருங்கல்லை தெய்வீக நிலைக்கு எடுத்துச் செல்லும் கலையை 'பிரதிஷ்டை' என்று சொன்னோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த அற்புத யுக்தியை நாம் இப்போது இழந்து நிற்கிறோம். இதன் பெயரால் இப்போது 'பைத்தியக்காரத்தனம்' அரங்கேறுகிறது அல்லது பிழைப்பு நடக்கிறது.

சாதாரணமாக நான் கோவில்களுக்குச் செல்லும் வழக்கமில்லாதவன். ஆனால் ஒருமுறை உஜ்ஜைனியில் உள்ள ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க நேர்ந்தது. இக்கோவில் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகி சிதைக்கப்பட்ட ஒன்றாகும். ஓரிரு முறைகள் அழிவுக்குப்பின் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் நீங்கள் அங்கு சென்று அமர்ந்தால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த சிறிய வடிவ ஜோதிர்லிங்கத்தின் பலமான அதிர்வுகளை ஸ்பரிசிக்க முடியும். உங்களை யாரோ பலமாக முகத்திலறைந்தாற்போல உணர்வீர்கள்.

பயன்படுத்த தெரிந்து கொண்டவர்களுக்கு ஜோதிர்லிங்கம் ஒரு அபாரமான கருவியாகும். உரிய விதத்தில் லிங்கத்தை அணுகி அமர்ந்து பிரார்த்தித்தால் நமது தேகத்தையும் அது சார்ந்த அனைத்து இயக்கங்களையும் நாம் மறுசீரமைப்பு செய்துகொள்ள முடியும். ஒவ்வொரு விதமான லிங்க வழிபாட்டுக்கும் வெவ்வேறுவிதமான "சாதனா" (முறை) உள்ளது. அவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. கோவில்கள் வரலாற்று நினைவுச் சின்னங்களாகவும் இறந்தவர்களின் சமாதிகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. சில ஜோதிர்லிங்கங்கள் துடிப்புடன் இல்லை. எனினும் அவற்றுள் பல சக்திமிக்கதாக இன்றும் விளங்குகின்றன.