நடந்து முடிந்த ஈஷா கிராமோத்சவ திருவிழா, பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது அனைவரும் அறிந்ததே. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை அவரது வார்த்தைகளிலே கேட்டறிவோம், இந்த வார சத்குரு ஸ்பாட்டில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா மேற்கொள்ளும் பலவித செயல்பாடுகளில் கிராமோத்சவம் தனது தனித்தன்மையால், அழகால் மிளிர்கிறது. விளையாட்டின் மூலம் கிராமங்களுக்கு புத்துணர்வு ஊட்டும் முயற்சியானது 21 ஆண்டுகளுக்கு முன் உருவெடுத்து, அதன் அதிகாரபூர்வ செயல்பாடு கடந்த 16 வருடங்களாக நடந்து வருகிறது. தங்களை விட தாழ்ந்த ஜாதி என கருதும் மக்களோடு சேர்ந்து உணவு உண்ண மறுக்கும் மனப்பாங்கு என்னை சிந்திக்க வைத்தது. ஈஷா வகுப்பில் உணவு பகிரப்பட்ட பொழுது எழுந்த பிரச்சனை இது. இது ஒரு பெரும் சச்சரவாக பரவாமல் தடுக்கும் பொருட்டு உணவைப் பகிர்வதை விடுத்து, எல்லோரும் இணைந்து விளையாடும் சிறு சிறு விளையாட்டுகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தேன். ஜாதிகள் கடந்து சேர்ந்து உண்பதுதான் பிரச்சனையாக இருந்தது, சேர்ந்து விளையாடுவது பிரச்சனையாக இருக்கவில்லை. ஏனெனில் விளையாடுவது பற்றி முன்முடிவு கொண்ட மனங்கள் சிந்திக்கவில்லை போலும்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை இந்த விளையாட்டுகள் பெரிதளவில் சமன் செய்துள்ளன. ஆப்பிரிக்கர்கள் அதிகமாக வாழும் அமெரிக்க மாநிலங்கள், ஆப்பிரிக்க சமூகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் காரணமாக மாற்றம் கண்டதை நான் பார்த்திருக்கிறேன். இது போல ஒரு வகையான மாற்றத்தைதான் நாம் தமிழக கிராமங்களில் பார்த்தோம்.

ஒரு நிகழ்ச்சியாக கிராமோத்சவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. இந்த வருட நிகழ்ச்சி நிச்சயம் ஒரு மைல்கல். இந்த வருடம் சச்சின் பங்கேற்றது நிகழ்ச்சியை பெரும் உயரத்திற்கு உந்தித் தள்ளியது. கிராமத்து வீரர்களின் உற்சாகத்துக்கும், ஈடுபாட்டிற்கும், இந்த விளையாட்டு தேவனின் வருகை ஒரு ஊக்கப் பரிசாக இருந்தது. வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத அளவில் 642 அணிகள், 7500 வீரர்கள் பங்கேற்றனர். பார்வையாளர்களும், ரசிகர்களுமாக கிட்டத்தட்ட 70000 பேர் குவிந்தனர். இது போல ஒரு நிகழ்ச்சி கோவையில் நடந்ததில்லை.

நமது பாரத ரத்னாவின் எளிமை, பணிவு நிச்சயமாக இந்த நிகழ்ச்சியை மேம்படுத்தியது. விளையாட்டின் மூலம் கிராமப்புற இந்தியாவை உருமாற்றும், புது உயிர் கொடுக்கும் இந்த இயக்கம் பெரும் உயரத்திற்கு செல்ல வேண்டும். ஜாதி, இனம், ஆண், பெண் என அனைத்து வேறுபாடுகளும் உடைவதை பார்க்கிறோம். பலர் மது, புகை பழக்கங்களில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக தங்கள் வாழ்வில் விளையாட்டை அறியாத பெண்கள், பெரும் பார்வையாளர் கூட்டத்தின் முன்னே போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இது போல பல குழுக்களாக பெண்கள் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது. எத்தனை தடைகளோடு அவர்கள் அனைவரின் வாழ்க்கை இருந்தது என்பது எனக்குத் தெரியும்.

Love & Grace