இந்தியாவில் நிகழ்பவை குறித்த செய்திகளை, நான் மேற்கொள்ளும் இடையறாத பயணங்களில் ஊடே என்னால் பலசமயம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் சில விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்துள்ளன. சில அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கேள்விப்படுகிறேன். கடந்து ஒன்று, ஒன்றரை வருடங்களாக நிகழ்ந்திருக்கும் விஷயங்களை நான் பார்க்கும்போது, மிகவும் நெருடலான சில போக்குகளை உலகில் நான் கவனிக்கிறேன். ஜனநாயக செயல்முறை திசைமாற்றப்படுவதை, அது தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை, அதில் ஊழல் செய்யப்படுவதை நான் கவனிக்கிறேன். அடிப்படையான ஜனநாயக செயல்முறை இப்படி திசைமாறுவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: உயிர்ப்பான ஒரு ஜனநாயகம் என்றால், அந்த ஜனநாயகத்தின் ஆணிவேரான ஒரு அம்சம், தெருக்களில் இரத்தவெள்ளம் ஓடாமல் ஆட்சி கைமாறுவதுதான். இது சாதாரண விஷயமில்லை. பூமியில், மனித நாகரீகத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றமிது. அதாவது ஒருவர் தனது பதவியிலிருந்து விலகி அடுத்து வருவரிடம் ஜனநாயக செயல்முறையின்படி தனது பதவியை ஒப்படைக்கிறார் என்றால், சண்டை மூலமாக அல்லாமல், கொலைகள் மூலமாக அல்லாமல், மக்களின் விருப்பத்தால் இது நடக்கிறது.

ஆனால் இந்தியாவில் கவலைக்குரிய போக்குகள் தெரிகின்றன, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இது நிகழ்ந்துள்ளது. ஆனால் இப்போது இது ஏற்றுக்கொள்ள முடியாத உயரங்களை எட்டி வருகிறது. உங்களுக்கு இது தெரிந்திருக்கும், ஜனநாயக செயல்முறையை திசைமாற்றுவதில் அனாலிட்டிக்ஸ் கம்பெனிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் வெறும் நிலப்பரப்புகளையும் அதிலுள்ள மக்கள் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து ஆய்வுகள் செய்து வாக்காளர் போக்கை கணிக்கிறார்கள். இது வெறும் கணக்காக ஆகிவிட்டது, எந்த கொள்கையும் இல்லை, கருத்தியலும் இல்லை, எந்த தொலைநோக்குப் பார்வையுமில்லை, வெறும் மக்கள்தொகை பரப்பை கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை கையாளும் போக்கு வந்துவிட்டது.

இந்த விதத்தில் இந்தியா கீழே போகிறது என்றே நினைக்கிறேன். நான் கவலைக்குரிய வீடியோ பதிவுகள் சிலவற்றைக் கண்டேன், பெரிய அளவில் போலியான வாக்காளர் அட்டைகள் தயாரித்துள்ளார்கள், சிலர் ஓட்டுக்காக வாழைப்பழத்திலுள்ள பழத்தை வெளியே எடுத்து தோலுக்குள்ளே பணத்தை மறைத்துவைத்து கொடுக்கிறார்கள். இதைத்தான் குற்றவாளிகளும் கள்ளக்கடத்தல் செய்வோரும் ஏதோவொன்றை கடத்துவதற்காக செய்தார்கள். அரசியல் தலைவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் இறங்குகிறார்கள் என்றால்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அனைவரும் தேர்தலில் ஜெயிக்க விரும்புகிறார்கள், அது எனக்குப் புரிகிறது. போட்டி தீவிரமாக இருக்கிறது, அதுவும் பரவாயில்லை. ஆனால், அதற்காக இப்படிச்செய்வது ஜனநாயக செயல்முறையையே குற்றச்செயலாக மாற்றுகிறது. இது பரவலாகப் பரவினால், ஜனநாயகம் என்பதே இருக்காது. நம்மை விலைக்கு வாங்கி விற்றுவிடுவார்கள். இது மிகவும் முக்கியம், இந்திய மக்கள் இதற்காக உறுதியாக எழுந்து நிற்கவேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் தேர்தலில் ஜெயிக்காமல் இருப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு தண்டனை கிடைப்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும், ஏனென்றால் இது ஒரு குற்றச்செயல்.

உலககெங்கும் ஜனநாயக செயல்முறையை திசைமாற்றுவது குறித்து பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் நிறையப்பேர் மோசம் போய்விட்டோம் என்று சொல்கிறார்கள். பிரெக்சிட் வாக்கெடுப்பில், நிறையப்பேர் அது நடத்தப்பட்ட விதம் அநியாயமானது என்கிறார்கள். சாதாரண மக்கள் ஜனநாயக செயல்முறையில் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். அது இல்லாமல் போனால், ஆட்சிமாற்றத்திற்காக நாம் இரத்தவெள்ளத்தில் மிதந்த நாட்களுக்கு நாம் மீண்டும் சென்றுவிடுவோம்.

அதனால் இது என் தாழ்மையான வேண்டுகோள்! ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு பிரஜைக்கும் இது எனது வேண்டுகோள்! இந்தியாவில் தற்போது நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, தேசத்து மக்களாக நீங்கள் இதை உறுதிசெய்ய வேண்டும், ஜனநாயக செயல்முறையில் ஊழல்செய்வதற்கு நீங்கள் என்றும் துணைபோகக் கூடாது. ஏனென்றால் அப்படிச்செய்யும்போது நம் கைகளில் இருக்கும் மிக உயர்ந்த சக்தியையும் பொறுப்பையும் நாம் விட்டுக்கொடுத்தவராவோம். ஜனநாயக செயல்முறை முற்றிலுமாக குற்றச்செயலாக மாற நாம் அனுமதித்தால், பொதுமக்கள் கைகளில் வைத்திருக்கும் மிகப்பெரிய சிறப்புரிமையை நாம் விட்டுக்கொடுப்போம்.

நீங்கள் ஒவ்வொருவரும் இதை உங்கள் பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்! எழுதுங்கள், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள், தேவையென்றால் புகார்களை பதிவுசெய்யுங்கள், ஆனால் இதை தெளிவுபடுத்துங்கள்! நீங்கள் செய்யத் தேவையானது எதுவாக இருந்தாலும் சரி, செய்யுங்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, எந்த தலைவராக இருந்தாலும் சரி, ஜனநாயக செயல்முறையை குற்றச்செயலாக்கும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டால், நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் இது சாதாரண மக்களின் சிறப்புரிமை. அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வேண்டுகோள் இது!

ஜனநாயகம் என்றால் ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் விஷயமல்ல, களத்தில் இறங்கி நாமும் பங்கேற்கவேண்டும், வெறும் ஓட்டுப்போடுவது மூலமாக அல்ல. தவறுகள் இழைக்கப்பட்டால், அவை பதியப்பட வேண்டும், அவை உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், உரிய அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும், அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நம் மாநிலங்களிலும் நம் தேசங்களிலும் உலகம் முழுவதும் யார் ஆள்கிறார்கள் என்பதைத் தேர்வுசெய்யும் இந்த அடிப்படையான, ஆதாரமான, அற்புதமான நமது சிறப்புரிமையை நாம் விட்டுக்கொடுக்காமல் இருப்போம்! இதனை நாம் நிகழச் செய்வோம்!

சத்குரு இதுகுறித்து ஆங்கிலத்தில் பேசியுள்ளது:

அன்பும் அருளும்,